13. எழுத்து சொல்

எழுத்து - சொல்

பாடம்
Lesson


ஓரெழுத்துத் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது சொல் என வழங்கப் பெறும்.

சொல்லின் இரண்டு பிரிவுகள்

●இலக்கண வகைச் சொற்கள்

●இலக்கிய வகைச் சொற்கள்

இலக்கண வகைச் சொற்கள்

●பெயர்ச்சொல்

●வினைச் சொல்

●இடைச்சொல்

●உரிச்சொல்

இலக்கிய வகைச் சொற்கள்

●இயற்சொல்

(சோறு, கிளி - போன்ற யாவர்க்கும் புரிவன)

●திரிசொல்

(சொன்றி- கிள்ளை- போன்ற கற்றவர்க்கே புரிவன)

●திசைச் சொல்

(அல்வா, சன்னல் - போன்ற பிறமொழிச் சொற்கள்)

●வடசொல்

(பாவம், புண்ணியம், குங்குமம் போன்ற வடமொழிச் சொற்கள்)

இலக்கண வகையான நால்வகைச் சொற்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டு :

ஆலயம் தொழுவது சாலவும் நன்று - ஒளவையார்

இச்செய்யுளில் நான்குவகைச் சொற்களும் உள்ளன.

ஆலயம் - பெயர்ச்சொல்

தொழு - வினைச்சொல்

சால - உரிச்சொல்

உம் - இடைச்சொல்

இவற்றை நினைவுபடுத்தி நெஞ்சகத்தில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள்.

பகுபத உறுப்புகள்

சொல், பதம், மொழி, கிளவி ஆகிய யாவும் சொல் எனப் பொருள் தரும் சொற்கள்.

பகுக்கக் கூடிய சொல்லைப் பகுபதம் எனவும், பகுத்தால் பொருள் தராத (பகுக்க முடியாத) சொல்லைப் பகாபதம் எனவும் வழங்குவர்.

பகுக்கக் கூடிய ஒரு சொல்லுக்கு ஆறு உறுப்புகள் உண்டு. அவற்றைப் பகுபத உறுப்புகள் என்பர்.

●பகுதி

●விகுதி

●இடைநிலை

●சாரியை

●சந்தி

●விகாரம்

ஆகிய ஆறும் பகுபத உறுப்புகள்.

எடுத்துக்காட்டுகள் :

விகுதி

1. வாழ்க = வாழ் + க

(வாழ் - பகுதி ; க - விகுதி)

இடைநிலை

2. சொல்கிறேன் = சொல் + கிறு + ஏன்

(சொல் - பகுதி ; கிறு-இடைநிலை ; ஏன்-விகுதி)

சந்தி

3. படித்தேன் = படி + த்+ த்+ ஏன்

(படி - விகுதி ; த்-சந்தி ; த்-இடைநிலை ; ஏன்-விகுதி)

சாரியை

4. படித்தனன் = படி + த் + த் + அன்+ அன்

(படி-பகுதி ; த்-சந்தி ; த்-இடைநிலை ; அன்-சாரியை ; அன்-விகுதி)

விகாரம்

5. வாழ்ந்தனன் = வாழ்+ (ந்)த் + த் + அன் + அன்

(வாழ்-பகுதி ; (ந்)த்-சந்தி ந்(த்)ஆனது விகாரம் ; த்-இடைநிலை ; அன்-சாரியை ; அன்-விகுதி)

மூன்று காலங்கள்

●இறந்த காலம்

●நிகழ்காலம்

●எதிர்காலம்

காலங்காட்டும் இடைநிலைகள்

இறந்தகால இடைநிலைகள் - த், ட், ற், இன்

நிகழ்கால இடைநிலைகள் - கிறு, கின்று, ஆநின்று

எதிர்கால இடைநிலைகள் - ப், வ்

எதிர்மறை இடைநிலைகள் - ஆ, ஆல், இல்

பால் உணர்த்தும் விகுதிகள்

ஆண்பால் - அன், ஆன்

பெண்பால் - அள், ஆள்

பலர் பால் - அர், ஆர், ப, மார்

ஒன்றன்பால் - து, று

பலவின் பால் - அ, ஆ

வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - க, இய, இயர்

பெயரெச்ச விகுதிகள் - அ, (உம்)

வினையெச்ச விகுதிகள் - உ, இ

வினைச் சொல்

ஒரு பொருளின் (புடைபெயர்ச்சியை) செயலை (அல்லது) வினையைத் தெரிவிப்பது வினைச் சொல்.

முடிவுபெற்ற வினைச்சொல் முற்று எனவும், முடிவு பெறாது எஞ்சி நிற்பது எச்சம் எனவும் படும்.

தெரிநிலை வினைமுற்று

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் தெளிவாக உணர்த்துவது தெரிநிலை வினைமுற்றாகும்.

குறிப்பு வினைமுற்று

மேற்கூறிய ஆறினுள், கருத்தாவை மட்டும் விளக்கி, காலத்தைக் குறிப்பாக உணர்த்துவது குறிப்பு வினைமுற்றாகும்.

ஐவகைத் தொகை நிலைத் தொடர்கள்

வ. எண் ஐவகை தொகை தொகையின் விளக்கம் எடுத்துக்காட்டுகள்
1 வேற்றுமைத் தொகை வேற்றுமை உருபு மறைந்து வருவன வேற்றுமைத் தொகை. தண்ணீர்க் குடித்தேன் - “தண்ணீரைக் குடித்தேன்” என்பது, ‘ஐ’ என்ற, 2ஆம் வேற்றுமை உருபு மறைந்து வந்துள்ளது. இது போல்வன வேற்றுமைத் தொகையாம். (நூல் கற்றேன் ; பிணி மருந்து, வள்ளுவர் நூல்)
2 பண்புத் தொகை பண்பை விளக்கும் உருபு மறைந்து வருவது பண்புத் தொகை. செந்தமிழ் - செம்மை + தமிழ் = ‘மை’ என்ற பண்பு உருபு மறைந்து வந்துள்ளது. இது போல்வன பண்புத் தொகையாம். (வெண்குடை, கார்மேகம், செந்தாமரை போல்வன)
3 உவமைத் தொகை உவம உருபு மறைந்து வருவது உவமத் தொகை. மயிலாட்டம் - மயில் (போலும்) ஆட்டம். ‘போலும்’என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது. இதுபோல்வன உவமைத் தொகை. (பவளவாய், கனிமொழி, போல்வன)
4 உம்மைத் தொகை “சொல் பொருள்” - சொல்(லு)ம் பொருளும் இதில் ‘உம்’ என்ற இடைச் சொல் மறைந்து வந்துள்ளது. இதுபோல்வன, உம்மைத் தொகை. (இரவுபகல், கபிலபரணர் போல்வன)
5 வினைத்தொகை முக்காலமும் மறைந்து வரும் பெயரெச்சத்தை வினைத்தொகை என்பர். குடிநீர் - (முன்பு) குடித்த நீர் ; (இப்பொழுது) குடிக்கின்ற நீர் ; (இனி) குடிக்கும் நீர் என முக்காலமும் மறைந்து வருதலின் இது வினைத் தொகை. இதுபோல்வன வினைத்தொகையாம். (கடிநாய், ஊறுகாய், எழுஞாயிறு, கொல்களிறு போல்வன.

மாணவ மாணவிகளே !

பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் ஆகிய நான்கு வகைச் சொற்களுக்கும் பொதுவான இலக்கணம் கூறும் பகுதியைப் பொதுவிலக்கணம் அல்லது பொதுவியல் என்று வழங்குவர்.

இப்பகுதியில், அறுவகை வினாக்கள், எட்டு வகை விடைகள் என முன் கற்றனவற்றைச் சுருக்கமான நினைவுபடுத்திக் கொள்க.

எண் அறுவகை வினாக்கள் எடுத்துக்காட்டுகள்
1 அறிவினா ஆசிரியர் மாணாக்கரை நோக்கி, “மனோன்மணீயத்தை இயற்றியவர் யார்?” என்று வினவுதல்.
2 அறியா வினா “ஐயா ! இப்பாடலின் பொருள் யாது?” என மாணவன் ஆசிரியரை வினவுதல்.
3 ஐயவினா “அம்மரக்கிளையில் தொங்குவது கயிறா? பாம்பா?” என ஐயமுற்று வினவுதல்.
4 கொளல் வினா (ஒன்றினைக் கொள்ளும் பொருட்டு வினவும் வினா) “ஐயா ! பாண்டியன் பரிசு நூல் உள்ளதா?” என்று (புத்தகத்தை வாங்கும் நோக்கத்துடன் வினவுதல்).
5 கொடை வினா “வழிச் செலவுக்குப் பணம் உள்ளதா?” என்று தந்தை மகனிடம் வினவுதல் (செலவுக்குப் பணம் கொடுக்கும் நோக்கத்தில் வினவுதல்)
6 ஏவல் வினா தம்பீ ! திருக்குறளில் ‘கல்வி’ அதிகாரம் படித்தாயா? என வினவுதல். (இல்லையேல் ‘படி’ என்று ஏவுதல்பொருட்டு வினவுதல்)

எட்டுவகை விடை

எண் எட்டுவகை விடை எடுத்துக்காட்டுகள்
1 சுட்டு விடை “நூலகத்திற்குச் செல்லும் வழி யாது?” என்னும் வினாவுக்கு ‘இது’ (அல்லது) ‘அது’ எனச் சுட்டிக்காட்டுதல் - சுட்டுவிடை.
2 மறைவிடை “உனக்கு இசை தெரியுமா?” என்னும் வினாவுக்கு, “தெரியாது” என்று எதிர்மறையாக விடை கூறுதல் மறைவிடை
3 நேர் விடை “உனக்கு நீந்தத் தெரியுமா?” என்ற வினாவுக்கு, “தெரியும்” என்று உடன்பாட்டு முறையில் விடை கூறுவது நேர்விடை
4 ஏவல் விடை “கடைக்குப் போய் வருவாயா? என்னும் வினாவுக்கு, “நீயே போய் வா" ! என்று கேட்டவரையே ஏவுவது ஏவல் விடை.
5 வினா எதிர் வினாதல் விடை “நீ நாள்தோறும் படிப்பாயா? என்னும் வினாவிற்கு, “நான் படிக்காமல் இருப்பேனா” என்று, எதிர்வினா எழுப்பி விடை கூறுவது வினா எதிர் வினாதல் விடை ஆகும்.
6 உற்றது உரைத்தல் விடை நீ தொலைக்காட்சி பார்த்தாயா? என்னும் வினாவுக்கு, “கண்வலித்தது என்று, முன்னர்த் தனக்கு நிகழ்ந்ததைக் கூறுவது உற்றது உரைத்தல் விடை ஆகும்.
7 உறுவது கூறல் நீ இந்த மலை ஏறுவாயா? என்னும் வினாவுக்குக் ‘கால் வலிக்கும்’ எனத் தனக்கு நேர விருப்பதை விடையாகக் கூறுவது உறுவது கூறல் விடை ஆகும்.
8 இனமொழி உனக்குக் கதை படிப்பது பிடிக்குமா? என்னும் வினாவுக்குக் “கவிதை படிப்பது பிடிக்கும்” என்று, (கதைக்கு இனமானது கவிதை) விடைகூறுவது இனமொழி விடையாகும்.

வினா, விடைகளை இவ்வாறு பகுத்துக் காணும் திறம் தமிழ்மொழிக்குரிய சிறப்பாகும் என்பதனை மாணாக்கர் அறிக.

அன்பு மாணாக்கச் செல்வங்களே !

ஒரு செய்யுளில் உள்ள சொற்களை அல்லது அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளும் முறைமையைப் பொருள்கோள் என்று வழங்குவர். இதனை ஆங்கிலத்தில் Prose order என்பர் என்று அறிக.

பொருள்கோள் எட்டுவகைப் படும்.

எண் எட்டுவகை பொருள்கோள் விளக்கம்
1 ஆற்றுநீர்ப் பொருள்கோள் ஓடுகின்ற ஆற்றின் நீரோட்டம் போலச் செய்யுளில் உள்ள சொற்கள் முன்பின் மாறாமல் நேராகப் பொருள் கொள்ளும் முறையில் அமைவது.
2 மொழிமாற்றுப் பொருள்கோள் செய்யுள் தரும் பொருளுக்குப் பொருத்தமாகச் சொற்களை, ஒரே அடிக்குள் மாற்றிப் பொருள் காணும் முறைக்கு மொழிமாற்றுப் பொருள்கோள் என்பது பெயர்.
3 நிரல்நிறைப் பொருள்கோள் (இது, முறை நிரல்நிறை, எதிர் நிரல்நிறை என இருவகை) ஒரு செய்யுளில் வரும் சொற்கள் முறை பிறழாமல் நிரல் நிறையாக (வரிசைமுறையில்) அமைந்து நிற்பது நிரல்நிறைப் பொருள்கோள்.
4 பூட்டுவில் பொருள்கோள் ஒரு செய்யுளின் இறுதிச் சொல்லை, முதற்சொல்லோடு சேர்த்துப் பொருள் கொள்ளுதல், பூட்டுவிற் பொருள்கோள் ஆகும்.
5 தாப்பிசைப் பொருள்கோள் (தாம்பு + இசை) கயிறு அசைவது ஒரு செய்யுளின் நடுவில் உள்ள ஒருசொல், ஊஞ்சல் கயிறு போன்று முன்னும் பின்னும் சென்ற பொருள் கொள்ளும் முறைமையைத் தாப்பிசைப் பொருள்கோள் என்பர்.
6 அளைமறிபாப்புப் பொருள்கோள் (புற்றுக்குள் பாம்பு மடங்கிச் செல்லுதல் போன்றது. அளை - புற்று, மறி - மடங்கி, பாப்பு - பாம்பு.) பாம்பு புற்றுக்குள் நுழைகிய பொழுது தலையை மேலாகவும், வாலைக் கீழாகவும் கொண்டு செல்வது போல, செய்யுளின் இறுதிச் சொல் அல்லது அடி கீழ், மேலாய்ச் சென்று பொருள் தருவது, அளைமறிபாப்புப் பொருள்கோள்.
7 கொண்டு கூட்டுப் பொருள்கோள் ஒரு செய்யுளின் பல அடிகளுக்குள் சிதறிக் கிடக்கும் சொற்களைப் பொருள் உணர்வுக்கேற்பக் கொண்டு கூட்டிப் பொருள் காணும் முறைமைக்கு, கொண்டு கூட்டுப் பொருள்கோள் என்பது பெயர்.
8 அடிமறிமாற்றுப் பொருள்கோள் ஒரு செய்யுளின் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்றபடி அமைத்துப் பொருள் காணும் முறை அடிமறிமாற்றுப் பொருள்கோள் எனப்படும்.

மாணாக்கர்களே !

ஒரே அடிக்குள் சொற்களை முறை மாற்றிக் கொள்வது மொழிமாற்றுப் பொருள்கோள். வெவ்வேறு அடியில் உள்ள சொற்களைக் கொண்டு கூட்டுவது கொண்டுகூட்டுப் பொருள்கோள் என்னும் வேறுபாட்டையும் அறிந்து கொள்க.

இவ்வாறு, பொருள் கொள்ளும் முறைமையறிந்து செய்யுள்களுக்குப் பொருள் உணர்ந்தால், செய்யுள் சுவையை முழுமையாக உணரவும், இலக்கிய இன்பம் பெறவும் இயலும்.

வேற்றுமை (Case)

வேற்றுமை உருபுகள் (Case endings)

பெயர்ச் சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை எனப்படும்.

அவ்வாறு வேறுபடுத்திக் காட்டுவதற்கு பெயர்ச்சொல்லின் இறுதியில் வரும் உருபுகள் வேற்றுமை உருபுகள் எனப்படும்.

இவ்வேற்றுமை எட்டு வகைப்படும். அவை :

1) முதல் வேற்றுமை, (எழுவாய் வேற்றுமை)
2) இரண்டாம் வேற்றுமை
3) மூன்றாம் வேற்றுமை
4) நான்காம் வேற்றுமை
5) ஐந்தாம் வேற்றுமை
6) ஆறாம் வேற்றுமை
7) ஏழாம் வேற்றுமை
8) எட்டாம் வேற்றுமை (விளி வேற்றுமை)
எண் வேற்றுமைகள் வேற்றுமை உருபுகள்
1 முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை என்றும் பெயர்) (Nominative case) இதற்கு உருபு இல்லை
2 இரண்டாம் வேற்றுமை (செயப்படு பொருள் வேற்றுமை என்று பெயர்) (Accusative case) இரண்டாம் வேற்றுமை உருபு - ஐ (ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை - ஆகிய பொருள்களையுணர்த்தும்.)
3 மூன்றாம் வேற்றுமை (Instrumental case) ஆல், ஆன், ஒடு, ஓடு - என்பன உருபுகள். (கருவிப் பொருள், கருத்தாப் பொருள், பொருள்களில் இவை வரும்.)
4 நான்காம் வேற்றுமை (Dative case) நான்காம் வேற்றுமை உருபு - கு (இது, கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என்னும் பொருள்களில் வரும்)
5 ஐந்தாம் வேற்றுமை (Ablative case) ஐந்தாம் வேற்றுமை உருபுகள் - இல், இன். (இவை நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது என்னும் நான்கு பொருள்களை உணர்த்தும்.
6 ஆறாம் வேற்றுமை (Genitive case) அது, ஆது, அ- ஆகிய மூன்றும் ஆறாம் வேற்றுமை உருபுகள். (இவை, கிழமை (உரிமைப்) பொருளை உணர்த்தும்.
7 ஏழாம் வேற்றுமை (Locative case) இல், கண், இடம், உள், மேல் - ஆகியவை ஏழாம் வேற்றுமை உருபுகள். (இவை இடப்பொருளை உணர்த்தும்)
8 எட்டாம் வேற்றுமை (விளி - அழைத்தல் வேற்றுமை என்றும் கூறுவர்) (Vocative case) எட்டாம் வேற்றுமைக்குத் தனி உருபு இல்லை.

அறுவகைப் பெயர்கள்

பெயர்ச் சொற்களை, அவையுணர்த்தும் பொருள் அடிப்படையில் ஆறு வகையாகப் பிரித்துக் கூறுவர். அவை :

1 பொருட்பெயர்

2 இடப்பெயர்

3 காலப் பெயர்

4 சினைப் பெயர்

5 குணப் (பண்புப்) பெயர்

6 தொழிற் பெயர்

என்பனவாம்.

எண் அறுவகைப் பெயர்கள் எடுத்துக்காட்டுகள்
1 பொருட்பெயர் இளங்கோ, யானை, கிளி, நாற்காலி - போல்வன.
2 இடப்பெயர் கோவில், பள்ளி, குளம், தெரு, வீடு - போல்வன
3 காலப் பெயர் குளிர்காலம், வைகறை, தைத் திங்கள், வெள்ளிக்கிழமை - போல்வன
4 சினைப் பெயர் தலை, பூ, கொம்பு, வால் - போல்வன.
5 பண்புப் (குணப்) பெயர் வெண்மை, சதுரம், அன்பு, இனிப்பு - போல்வன.
6 தொழிற் பெயர் படித்தல், ஆடுதல், விளையாடுதல், தேடுதல் - போல்வன

ஆகுபெயர் (Metonymy)

ஒரு பொருளினுடைய இயற்பெயர், அதனை உணர்த்தாமல் அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளுக்குத் தொன்று தொட்டு ஆகிவருவது ஆகுபெயர் எனப்படும்.

எண் பொருளாகு பெயர் எடுத்துக்காட்டுகள்
1 பொருட்பெயர் “மல்லிகை மலர்ந்தது”- (மல்லிகை என்னும் சொல், வேர், செடி, சிலை, மலர் ஆகிய அனைத்தையும் உணர்த்தும். ஆயினும், இங்கு அதன் சிறப்பாகிய மலரை மட்டும் உணர்த்தி வருவதால் இதனைப் பொருளாகு பெயர் என்பர்.
2 இடவாகுபெயர் “தலைவரை வரவேற்க, ஊரே திரண்டது.”- (ஊர் என்ற இடப்பெயர் ஊரிலுள்ள மக்களுக்கு ஆகிவந்தது.)
3 காலவாகு பெயர் “டிசம்பர் பூத்தது” - (டிசம்பர் மாதத்தில் பூக்கும் பூ, பூத்தது எனக் காலத்தின் பெயர் அக்காலத்தில் பூக்கும் பூவுக்கு ஆகி வந்தது.)
4 சினையாகு பெயர் “விளையாடுவதற்கு ஒரு கை குறைகிறது”-இத்தொடரில் ‘கை’ என்ற உறுப்பின் பெயர், முழுமையான ஒரு மனிதனைக் குறித்து வருகிறது.)
5 குணவாகு பெயர் (பண்பாகு பெயர்) “காவி அணிந்தார்” - (இத்தொடரில் காவி என்பது, நிறத்தைக் குறிக்காமல் அந்நிறத்திலுள்ள ஆடையைக் குறித்தது.)
6 தொழிலாகு பெயர் “வற்றல் எனக்குப் பிடித்த உண் பொருள்” - (இத்தொடரில், வற்றல் என்னும் தொழிற்பெயர் அதனை உணர்த்தாமல் அத்தொழிற்பட்ட உண்பொருளுக்கு ஆகி வந்தது.)