16. அணி

அணி

பாடம்
Lesson


1. தற்குறிப்பேற்ற அணி

புல்லரைக் காணாமல் இப்புல்லும் நுனிசாய்ந்ததோ?

மாணாக்கர்களே! இந்தப் பாடலடியைப் படியுங்கள். இதன் பொருள் என்ன?

இந்த நாட்டில் உள்ள கீழ் மக்களைக் காண விரும்பாமல் இந்தப் புற்கள் தம் நுனி சாய்ந்துள்ளதோ? எனப் புலவர் வியந்து கூறுகிறார்.

புற்களின் நுனி சாய்ந்து காணப்படுவது இயற்கை; இயல்பான நிகழ்வு. ஆனால் புலவர், நாட்டிலுள்ள கீழ் மக்களைக் காணப்பிடிக்காமல்தான், புற்கள் நுனி சாய்ந்திருப்பதாகக் கூறுகிறார்.

இவ்வாறு, இயல்பான இயற்கையான ஒரு நிகழ்வில் கவிஞர் அல்லது புலவர் தம் குறிப்பை (கருத்தை) ஏற்றி உரைப்பது தற்குறிப்பேற்றம் என்னும் அணியாகும்.

மேலும் ஓர் எடுத்துக்காட்டு :

வாரல் என்பனபோல் மறித்துக் கை காட்ட - (சிலப்பதிகாரம்)

இந்தச் சிலப்பதிகாரச் செய்யுள் அடியைப் படித்துப் பாருங்கள்! இதன் பொருள் என்ன?

“இங்க வாராதீர்கள் மதுரை மாநகரில் உங்களுக்கு ஆபத்துக் காத்திருக்கிறது” என்று கூறுவது போல் (கோபுரத்தில் உள்ள கொடி அசைந்தது) என்பதாகும்.

விளக்கம் :

புகார் நகரத்திலிருந்து புறப்பட்டு வந்த கோவலும் கண்ணகியும் மதுரை நகர எல்லையை அடைகிறார்கள். தொலைவில், பாண்டிய மன்னன் அரண்மனைக் கொடி இவர்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அக்கொடி காற்றில் அசைகின்றது. இது இயற்கை. ஆனால், புலவர் இளங்கோவடிகள் அந்த இயற்கையான நிகழ்வில் தம் கற்பனையை ஏற்றி, “கோவல கண்ணகியரே! நீவிர் மதுரை நகருக்குள் வாராதீர்! அங்கே, உங்களுக்கு ஆபத்துக் காத்திருக்கிறது.” என்று கூறுவது போல் கொடி அசைந்ததாகக் கூறுகிறார். ஆதலின் இது, தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று.

தன் + குறிப்பு + ஏற்றம் = தற்குறிப்பு ஏற்றம்

மாணவர்களே!

உங்கள் செய்யுள் பாடப்பகுதியில் இந்த அணிக்கு எடுத்துக்காட்டுகள் உள்ளனவா? எனத் தேடிக் காண முற்படுங்களேன்.

2. வஞ்சப்புகழ்ச்சி அணி

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்

பீழை தருவதொன்று இல் - (திருக்குறள்)

மாணவ மாணவியரே! இக்குறட்பாவைப் படித்துப் பாருங்கள்! இதன் பொருள் யாது? “அறிவிலார் உறவு மிகவும் இனிமையைத் தரும் ; ஏனெனில் அவரை விட்டுப் பிரியும்பொழுது எவ்விதத் துன்பமும் இல்லை” என்பது இக்குறட்பாவின் பொருள்.

மாணவ மாணவியரே!

திருவள்ளுவப் பெருந்தகை, இக்குறட்பாவில் அறிவிலார் உறவைப் புகழ்வது போல் பழித்துக் கூறுகிறார் என்ற, பொருட் சிறப்பை நீங்கள் அறியுங்கள். இவ்வாறு புகழ்வதுபோல் பழிப்பது வஞ்சப்புகழ்ச்சி எனப்படும்.

மேலும்,

பாரி பாரி என்று பலவேத்தி

ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்

பாரி யொருவனும் அல்லன்

மாரியும் உண்டு ஈண்டு உலகுபுரப் பதுவே. - (புறநானூறு)

இந்தப் பாடல் தரும் பொருள் :

“பாரி வள்ளல்! பாரி வள்ளல்! அவன் ஒருவனே பெரும் வள்ளல்! அவனால்தான் உலக மக்கள் காப்பாற்றப்படுகிறார்கள்! எனப் பலவாறு பாரி என்ற வள்ளலைப் புலவர்கள் புகழ்ந்து பாராட்டுகிறார்கள்! பாரி ஒருவனால்தான் இந்த உலகம் காக்கப்படுகிறதா? ஏன்? ‘மாரியும் (மழையும்) இந்த உலகினைக் காப்பாற்றுமே’ என்பதாகும்.

இப்பாடல், பாரி மன்னனை இகழ்வது போல் தோன்றினாலும், பாரி மன்னனைப் புகழ்வதே இப்பாடலின் உட்கருத்தாகும். இது பழிப்பதுபோல் புகழ்வதாகும்.

மாணாக்கரே!

மேற்காட்டிய இரண்டு எடுத்துக்காட்டுப் பாடல்கள் மூலம் நீவிர் அறிவது என்ன?

“புகழ்வது போலப் பழித்தலும், பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப்புகழ்ச்சியணி எனப்படும் என்பதை அறிக.

உங்கள் செய்யுள் பாடப்பகுதியில் அல்லது நீவிர் அறிந்த பிற பாடல்களில் வஞ்சப்புகழ்ச்சியணிக்கான எடுத்துக்காட்டுகள் இருப்பின் படித்து மகிழ்க !

3. பிறிது மொழிதல் அணி

மாணவ மாணவியரே!

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்- (திருக்குறள்)

இக்குறட்பாவைக் கருத்தூன்றிப் படியுங்கள் !

இதன் பொருள் என்ன?

“மிகவும் எடை குறைவான, மயில் தோகையாக இருப்பினும், வண்டியின் கொள்ளளவுக்குமேல் வண்டியில் ஏற்றி வைத்தால், அவ்வண்டியின் அச்சு முறிந்து வண்டி செயல்பட இயலாததாகி விடும்.” என்பது இதன் பொருள்.

விளக்கம் :

இத்திருக்குறள் இடம்பெற்றுள்ள அதிகாரம் வலியறிதல் என்பதாகும்.

“மக்கள் யாவரும் தத்தம் வலிமையறிந்தே செயற்பட வேண்டும்; அன்றேல் துன்புற்று அல்லல் உறுவர்” என்னும் கருத்தைக்கூற வந்த திருவள்ளுவ நாயனார், “மிகவும் எடை குறைந்த மயில் தோகையே யாயினும், வண்டியின் வலிமை அறியாது சுமை ஏற்றினால் வண்டி பழுதாகி விடும்” என்ற பிறிதொரு கருத்தைக் கூறித் தம் கருத்தை விளக்குகிறார்.

இவ்வாறு, “புலவர், தாம் வலியுறுத்த வந்த கருத்தை நேரடியாகக் கூறாது பிறிதொன்றைக் கூறி வலியுறுத்தும் அழகினை, பிறிதுமொழிதல் அணி என்பர்.”

அன்பு மாணாக்கரே!

நும் செய்யுள் பாடப்பகுதியில் அல்லது நீவிர் அறிந்த பிற பாடலில் இந்த அணி வரப் பெறின் படித்து மகிழ்க.

4. இரட்டுற மொழிதல் அணி

(இரண்டு + உற + மொழிதல் + அணி)

இரட்டுற மொழிதல் - இரு பொருள் தரும்படியாகக் கூறுதல்.

“புலவரே ! வாரும் ! இரும்படியும் !”

இத்தொடரைக் கருத்தூன்றிப் படியுங்கள் ! இதிலுள்ள இரும்படியும் என்னும் தொடரானது, ‘இரும் + படியும்” என்னும் இரு சொற்களாக நின்று, “புலவரே ! வருக ! நீவிர் ! அமரும் ! படியும் (அதாவது) (அமர்ந்து நூலைப் படியுங்கள்) என்ற ஒரு பொருளைத் தருகின்றது ; இரும்பு + அடியும் எனப் பிரிந்து நின்று, “புலவரே ! இரும்பினை அடியுங்கள்” என மற்றொரு பொருளைத் தருகின்றது.

இவ்வாறு, செய்யுளில் ஒருசொல் அல்லது தொடர் தனித்து நின்றும், பிரிந்து நின்றும் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட பொருளைத் தரும் அழகினை, இரட்டுற மொழிதல் அணி என வழங்குவர்.

இந்த அணியை, வடமொழியாளர், சிலேடை எனக் கூறுவர். மேலும், சொல்லோ தொடரோ தனித்து நின்று பொருள் தருதலைச் செம்மொழிச் சிலேடை எனவும், பிரிந்து நின்று பொருள் தருதலைப் பிரிமொழிச் சிலேடை எனவும் வழங்குவர்.

மாணவத் தம்பி தங்கையரே ! கீழ்க்காணும் பாடலைப் படித்துப் பாருங்கள் !

செய்யுட் கிடைமறிக்கும் ; சேர்பலகை யிட்டுமுட்டும் ;

ஐயமுற மேற்றா ளடர்க்குமே - துய்யநிலை

தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்

ஆடும் கதவுநிக ராம்.

இப்பாடல் ஆடு, கதவு ஆகிய இருபொருள்களையும் உணர்த்தும் முறையில், இரட்டுற மொழிதல் அணியாக வந்துள்ளது. இதனைப் பின்வருமாறு அறிந்து மகிழ்க.

ஆடு

(செய்யுள்) ஆடு வயலில் மந்தை மந்தையாகக் கிடக்கும். (பல + கை) கைகள் பல சேர்ந்து தன்னைத் தடுக்கும் பொழுது தன் தலையால் முட்டும். (மேற்று + ஆள்) தன்னைத் தாக்க வருபவரைத் தானும் உறுதியாகத் தாக்கும். (துய்யநிலை தேடும்) தான் படுப்பதற்கேற்ற தூய்மையான இடத்தைத் தேடிப் படுக்கும்.

கதவு

வீட்டின் உள்ளிடத்தில் (இரண்டு அறைகளைத்) தடுத்து மூடும். (செய் + உள்+ இடை+ மறிக்கும்) மரப்பலகைகளைச் சேர்த்துச் செய்யப் பெற்று வாயிலை மூடப் பயன்படும். (சேர் + பலகை) தூய்மையான (வாயில் நிலை) நிலைபொருந்தியதாக இருக்கும். நன்றாகப் பொருந்தி மூடுவதற்கு அதன், மேல் தாழ்ப்பாள் செறிவாகத் தடுக்கும். (மேல் + தாள் = தாழ்ப்பாள்)

இவ்வாறு, இச்செய்யுளில் உள்ள சொற்கள் தனித்து நின்று செம்மொழியாகவும், பிரிந்து நின்று பிரிமொழியாகவும் ஆடு-கதவு ஆகிய இரண்டனுக்கும் பொருந்த அமைதலின் இது, இரட்டுற மொழிதல் அணி ஆயிற்று.

5. சொல் பின்வரு நிலையணி

ஒரு செய்யுளில், முன்னர் வந்த சொல்லும் பொருளும் பல முறை பின்னரும் வருவது பின்வரு நிலையணி யாகும்.

பின்வரு நிலையணி மூன்று வகைப் பெறும். அவை :

●சொல் பின்வரு நிலை

●பொருள் பின்வரு நிலை

●சொற்பொருள் பின்வரு நிலை

சொல் பின்வரு நிலையணி

உள்ள முடைமை உடைமை பொருளுடைமை

நில்லாது நீங்கி விடும். (திருக்குறள்)

இக்குறட்பாவில், உடைமை என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. ஆனால், பெற்றிருத்தல், உடைய, செல்வம் என வெவ்வேறு பொருள்களில் வந்துள்ளது.

இவ்வாறு, ஒரே சொல் மீண்டும் மீண்டும் வந்து வெவ்வேறு பொருள் தருமாயின் அது சொல்பின்வரு நிலை அணி எனப்படும்.

6. பொருள் பின்வருநிலை அணி

கீழ்க்காணும் பாடலைப் படித்துப் பாருங்கள்.

அவிழ்ந்தன தோன்றி அலர்ந்தன காயா

நெகிழ்ந்தன நேர்முகை முல்லை - மகிழ்ந்திதழ்

விண்டன கொன்றை விரிந்த கருவிளை

கொண்டன காந்தள் குலை.

இப்பாடலில், அவிழ்தல், அலர்தல், நெகிழ்தல், விள்ளல், விரிதல் எனப் பல சொற்கள் வந்துள்ளன. ஆனால் அவையாவும், மலர்தல் என்ற ஒரே பொருளையே தருகின்றன.

இவ்வாறு, ஒரு செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருமாறு அமையப் பாடுவது பொருட் பின்வரு நிலை அணிஆகும்.

7. பாடல் பொருள் :

பூஞ்சோலையில், தோன்றி, காயா, முல்லை, கொன்றை, கருவிளை, காந்தள் முதலான மலர்கள் மலர்ந்து செழித்து மணம் பரப்பின என்பதாம்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல். (திருக்குறள்)

மாணவ மாணவியரே !

இக்குறட்பாவில் சொல் என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்துள்ளது. ஆயினும், சொல் என்ற ஒரே பொருளையே தருகிறது. இவ்வாறு, ஒரு செய்யுளில் வந்த சொல்லே வந்து, தந்த பொருளைத் தருமாயின், அது சொற்பொருள் பின்வரு நிலையணி எனப்படும்.

இவையேபோல், நீவிர் படித்த, அல்லது படிக்கும் பகுதியில் காணப்படும் சொல் பின்வரு நிலையணி, பொருள் பின்வரு நிலையணி, சொற்பொருட் பின்வரு நிலையணி ஆகிய அணிகளை இனங்கண்டு, படித்து மகிழ்க ! பயன் பெறுக !

8. மடக்கு அணி

கோவ ளர்ப்பன கோநக ரங்களே

கோவ ளர்ப்பன கோநக ரங்களே

மேவ ளர்க்கர் வியன்திரை வேலைசூழ்

கோவ ளர்ப்பன கோநக ரங்களே.

இப்பாடலில், “கோவளர்ப்பன கோ நகரங்களே” என்னும் தொடர் மூன்று அடிகளில் வந்துள்ளதைக் காணுங்கள்.

“கோ வளர்ப்பன கோ நகரங்களே” என்னும் அடி, மடங்கி மடங்கி வந்து, வேறு வேறு பொருள் தருகின்றன. அவையாவன :

(சோழ மன்னனின்) ஒளி (புகழ்) யை மிகுவிப்பன தலைமையுடைய நகரங்களாகும்.

கோவாகிய சோழன், பெருக்கிக் கொள்வன, பகை அரசர்களின் திறைப் பொருள்களையே யாகும்.

திரையாகிய கரையால் சூழப் பெற்ற இந்நிலவுலகத்தைக் காப்பன சோழ மன்னனின் கைகளேயாகும்.

[கோ - அரசன் ; கோ - ஒளி ; கோந-கரம் - அரசனின் கரங்கள் (கைகள்)]

இவ்வாறு, ஒரு செய்யுளில் ஒரு முறை வந்த சொற்களோ, சொற்றொடர்களோ, அடியோ மடங்கி (மீண்டும் வந்து) வந்து பொருள் தருவது மடக்கு அணி ஆகும்.

பிற பாடல்களில் மடக்கணி வருமாயின் படித்து மகிழுங்கள்.

இரட்டுற மொழிதல் அணிக்கும் மடக்கு அணிக்கும் உள்ள வேறுபாடு :

ஒரு சொல் அல்லது ஒரு சொற்றொடர் இரு பொருள் தந்து நிற்பது இரட்டுற மொழிதல் அணி.

ஆனால், ஒரு தொடரே, பன்முறை வந்து வேறு வேறு பொருள் தருவது மடக்கு அணி ஆகும்.

மாணவ மாணவியர் இவ்வாறு பாட்டை உணர்த்து படித்து மகிழ்க !