பொது
பாடம்
Lesson
எழுதும் முறைகளுள் மிகவும் கவனித்தற்பாலன இடம்விட்டு எழுதுதலும் சேர்த்து எழுதுதலும் ஆகும்.
பொருள் உணர்வுக்கு ஏற்ப, வரிக்குவரி இடம்விட்டு எழுதுதல் வேண்டும். பத்திக்குப் பத்தி இடைவெளிவிட்டுத் தொடங்குதல் வேண்டும்.
சொற்களுக்கு இடையே இடம்விட்டு எழுதுதலையும் சேர்த்து எழுதுதலையும் பற்றி இப்பகுதியில் அறிந்து கொள்க.
பாரதியார் என்று சேர்த்து எழுத வேண்டியதைப் பாரதி யார் என இடம்விட்டு எழுதின் ஏற்படும் பொருள் மாற்றத்தை நீங்கள் அறிவீர்கள்!
“அவள் அக்காள், வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் “அவள், அக்காள்வீட்டிற்குச் சென்றாள்” என்னும் தொடருக்கும் (இடம் விட்டு எழுதுவதால் ஏற்பட்டுள்ள) பொருள் வேறுபாட்டை அறிந்து கொள்க.
“மூலநட்சத்திரத்தில் பிறந்தான்” என்பதை “மூல நட்சத்திரத்தில் பிறந்தான்” - என இடம்விட்டு எழுதுவதால் தோன்றும், நகைச்சுவைப் பொருளை யாவரும் அறிவோம்.
எனவே, இடம்விட்டு எழுத வேண்டியதை இடம்விட்டு எழுதவும், சேர்த்து எழுத வேண்டியதைச் சேர்த்தும் எழுதிடவும் வேண்டும் என்பதையும் அறிந்து நினைவில் கொள்க.
எழுதும்போது கருத்தில் கொள்ள வேண்டிய முறைகள்:-
- பண்புத்தொகை, வினைத்தொகை முதலானவை ஒருசொல் நீர்மைத்து. எனவே, அவற்றைப் பிரித்து எழுதுதல் கூடாது.
- வேற்றுமை உருபுகளைப் பிரித்து எழுதல் கூடாது.
- இடைச்சொற்களைச் சேர்த்து எழுதுதல் வேண்டும்.
- “துணை வினையைச்” சேர்த்து எழுதுதல் வேண்டும்.
- 'உடம்படு மெய்களைச்' சேர்த்து எழுதுதல் வேண்டும்.
- ‘கள்’ விகுதியைப் பிரிக்காமல் எழுதுதல் வேண்டும்.
எடுத்துக்காட்டு :
| செந்தமிழ் | (சரி) | |
| செந் தமிழ் | (தவறு) | - பண்புத்தொகை |
| சுடுசோறு | (சரி) | |
| சுடு சோறு | (தவறு) | - வினைத்தொகை |
எடுத்துக்காட்டு :
| தாயோடு அறுசுவைபோம் | (சரி) | |
| தாய் ஓடு அறுசுவைபோம் | ((தவறு) | ஓடு வேற்றுமையுருபு |
எடுத்துக்காட்டு :
| சான்றோரும் உண்டுகொல்? | (சரி) | |
| சான்றோரும் உண்டு கொல் | (தவறு) | கொல் இடைச்சொல் |
எடுத்துக்காட்டு :
| சென்றுவிடு | (சரி) | |
| சென்று விடு | (தவறு) | ‘விடு’ - துணைவினை |
| மறந்துவிட்டாள் | (சரி) | |
| மறந்து விட்டாள் | (தவறு) | ‘விட்டாள்’ - துணைவினை |
எடுத்துக்காட்டு :
| காண + இல்லை | = காணவில்லை | (சரி) | |
| காண இல்லை | (தவறு) | ‘வ்’ - உடம்படுமெய் | நிலா + ஒளி | = நிலாவொளி | (சரி) |
| நிலா ஒளி | (தவறு) | ‘வ்’ உடம்படுமெய் |
எடுத்துக்காட்டு :
| மரங்கள் நட்டார் | (சரி) | |
| மரங் கள் நட்டார் | (தவறு) | ‘கள்’ விகுதி |
| பூனைகள் குடித்தன. | (சரி) | |
| பூனை கள் குடித்தன. | (தவறு) | ‘கள்’ விகுதி |
அன்பு மாணவ மாணவியரே!
மேற்கூறியவை தவிர, எழுதும்பொழுது கவனத்திற் கொள்ள வேண்டிய சில பொது முறைகளையும் அறிந்து கொள்க. அவையாவன:
• தாளின் தலைப்புறம், அடிப்புறம், இடப்புறம் ஆகியவற்றில் குறைந்தது ஓர் அங்குலம் இடம் விட்டு எழுதுக.
• பத்தி தொடங்கும்பொழுது, மற்ற வரிகளைக் காட்டிலும் சிறிது தள்ளிப் பத்தியைத் தொடங்குக.
• தலைப்புகளை மையத்தில் எழுதுக.
• முற்றுப்புள்ளி, வினாக்குறி, வியப்புக் குறிகள் வருங்கால் சிறிது இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தைத் தொடங்குக.
• செய்யுள்களை எழுதும்பொழுது, சீரும் அடியும் பிறழாமல் எழுதுதல் வேண்டும். ஒரு சீருக்கும் அடுத்த சீருக்கும் இடைவெளிவிட்டு எழுதுதல் வேண்டும்.
நம் தமிழ் மொழியில் ல-ள-ழ; ர-ற; ன-ண-ந; முதலான வரிவடிவங்களை ஒலிக்கும் பொழுது முறையாக ஒலிக்க வேண்டும். அவ்வாறு ஒலிக்காவிடில் பொருள் தடுமாற்றமும் ஏற்படும்.
இவை, இதுவோ அதுவோ என்ற மயக்கம் தரும் ஒலிகள். ஆதலால், இவற்றை மயங்கொலிகள் என வழங்குவர்.
முதலில் ல-ள-ழ ஆகியவற்றின் ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்க. அவ்வாறு ஒலிக்காவிடில் எழுதுவதிலும் தடுமாற்றம் வரும்; பொருளும் வேறுபடும் என்பதைக் கீழ்க்காணுமாறு அறிந்து பயன்படுத்துக.
| அலகு | - பறவையின் மூக்கு | |
| அளகு | - பெண் மயில் | |
| அழகு | - எழில், வனப்பு, கவின் | |
| அலை | - கடல் அலை | |
| அளை | - புற்று | |
| அழை | - கூப்பிடு | |
| இலை | - மரம், செடி, கொடிகளின் இலை | |
| இளை | - (உடல்) இளைத்தல் | |
| இழை | - நூல் | |
| கலை | - 64 கவின் கலைகள் | |
| களை | - பயிர்களுக்கு இடையில் தோன்றும் களை | |
| கழை | - மூங்கில் | |
| தலை | - ஓர் உறுப்பு | |
| தளை | - விலங்கு | |
| தழை | - தழைத்தல் | |
| வலி | - வலிமை | |
| வளி | - காற்று | |
| வழி | - பாதை |
II. அடுத்து, ர-ற ஒலிவேறுபாடு அறிந்து ஒலிக்கவும். பொருள் வேறுபாடு அறிந்து பயன்படுத்தவும். கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க:-
| அரி | - திருமால், அரிமா (சிங்கம்) | |
| அறி | - அறிந்து கொள், தெரிந்துகொள் | |
| அலரி | - அலரிப்பூ | |
| அலறி | - அழுது | |
| இரத்தல் | - பிச்சையெடுத்தல் | |
| இறத்தல் | - சாதல் | |
| உரவு | - வலிமை | |
| உறவு | - சுற்றம் | |
| உரை | - சொல் | |
| உறை | - தலையணை உறை | |
| எரி | - தீ | |
| எறி | - வீசு | |
| கரி | - யானை | |
| கறி | - மிளகு, காய்கறி | |
| குரங்கு | - வானரம் (ஒரு விலங்கு) | |
| குறங்கு | - தொடை (ஓர் உறுப்பு) | |
| கூரை | - வீட்டுக் கூரை | |
| கூறை | - துணி | |
| சீரிய | - சிறந்த | |
| சீறிய | - சினந்த | |
| பரவை | - கடல் | |
| பறவை | - பறப்பனவாகிய உயிரினம் | |
| மரை | - தாமரை, மான் | |
| மறை | - வேதம் |
இவை போல்வனவற்றையும் கண்டறிந்து பயன்படுத்துக.
III. ந-ண-ன ஒலி வேறுபாடு அறிந்து முறையாக ஒலிக்கவும், பொருள் வேறுபாடு உணர்ந்து பயன்படுத்தவும் கீழ்க்காணும் முறையில் அறிந்து கொள்க.
| அணல் | - தாடி | |
| அனல் | - நெருப்பு | |
| ஆணி | - இரும்பால் ஆன ஆணி | |
| ஆனி | - தமிழ் மாதங்களுள் ஒன்று | |
| ஊண் | - உணவு | |
| ஊன் | - இறைச்சி | |
| கணம் | - கூட்டம் | |
| கனம் | - பளு, பாரம் | |
| பேண் | - காப்பாற்று | |
| பேன் | - தலையில் வாழும் (ஓர் உயிரி) பேன் | |
| மணம் | - நறுமணம் | |
| மனம் | - உள்ளம் | |
| மணை | - உட்காரும் பலகை | |
| மனை | - வீடு | |
| மாண் | - பெருமை | |
| மான் | - புள்ளிமான் (ஒருவகை விலங்கு) | |
| முந்நாள் | - மூன்று நாள் | |
| முன்னாள் | - முந்தைய நாள் | |
| தேநீர் | - தேயிலை நீர் | |
| தேனீர் | - தேன்போலும் இனிய நீர் | |
| திணை | - நிலம், ஒழுக்கம் | |
| தினை | - தானிய வகையுள் ஒன்று, சிறிய | |
| கணை | - அம்பு | |
| கனை | - குதிரை கனைத்தல் |
இவை போல்வனவற்றைக் கண்டறிந்து பயன்படுத்துக.
மரபு
அன்புக்குரிய மாணவ மாணவியரே !
‘நம் முன்னோர்கள், எப்பொருளை, எச்சொல்லால் இயம்பினரோ, அப்பொருளை அச்சொல்லால் இயம்புதல் அல்லது வழங்குதல்' மரபு எனப்படும்.
அம்மரபுகள் சிலவற்றைத் தெரிந்து கொள்க.
அ) பறவை - விலங்குகளின் ஒலி மரபுகள்
| பறவை | விலங்கு |
| சேவல் கூவும் | நாய்குரைக்கும் |
| கூகைகுழறும் | பன்றிஉறுமும் |
| மயில் அகவும் | குதிரைகனைக்கும் |
| கிளி பேசும் | எருதுஎக்காளமிடும் |
| வண்டுமுரலும் | சிங்கம்முழங்கும் (கர்ஜிக்கும்) |
| யானைபிளிறும் | |
| எலிகீச்சிடும் |
ஆ) பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்
| பறவை | விலங்கு |
| கோழிக்குஞ்சு | நாய்க்குட்டி |
| கிளிக்குஞ்சு | புலிப்பறழ் |
| அணிற்பிள்ளை | சிங்கக்குருளை |
| கீரிப்பிள்ளை | யானைக்கன்று |
| பசுவின்கன்று |
இ) தாவர உறுப்புகள் பற்றிய மரபுகள் :
| வேப்பந் தழை | தாழைமடல் |
| ஆவரங்குழை | முருங்கைக்கீரை |
| நெல்தாள் | தென்னங்கீற்று |
| வாழைத் தண்டு | கம்பந்தட்டு(தட்டை) |
| கீரைத் தண்டு | சோளத்தட்டு |
| கரும்புத்தோகை |
ஈ) பறவை - விலங்குகளின் உறைவிட மரபுகள் :
| கோழிப் பண்ணை | ஆட்டுப்பட்டி |
| குருவிக்கூடு | நண்டுவளை |
| சிலந்திவலை | கறையான்புற்று |
| எலி வளை (எலிப் பொந்து) | மாட்டுத்தொழுவம் |
| குதிரைக்கொட்டில் |
உ) பெயருக்கு ஏற்ற வினை
| வீடு கட்டினார் |
| சுவர் எழுப்பினார் |
| கூரை வேய்ந்தார் |
| குடம் வனைந்தார் |
| கூடை முடைந்தார் |
| செய்யுள் இயற்றினார் |
| நூல் எழுதினார் |
| சிற்பம் செதுக்கினார் |
| ஓவியம் வரைந்தார் |
| வண்ணம் தீட்டினார் |
| பாட்டுப் பாடினார் |
| நாடகம் நடித்தார் |
| நாட்டியம் ஆடினார் |
| தண்ணீர் குடித்தார் |
| பால் பருகினார் |
| உணவு உண்டார் |
| முறுக்குத் தின்றார் |
எப்பொருள் எச்சொலின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே - (நன்னூல்-388)
கருத்து வகை வாக்கியம்
| 1) | செய்தி வாக்கியம் | - “திருமுருகாற்றுப் படை பத்துப்பாட்டில் முதன்மையானது.” |
| 2) | வினா வாக்கியம் | - “மாணாக்கர் கடமை யாது-?” |
| 3) | விழைவு வாக்கியம் | - (அ) கட்டளை, (ஆ) வேண்டுகோள் (இ) வாழ்த்தல், (4) வைதல் |
| (அ) | கட்டளை | - “தமிழை முறையாகப் படி.” |
| (ஆ) | வேண்டுகோள் | - “நல்ல நூற்களை நாளும் கற்க.” |
| (இ) | வாழ்த்தல் | - “வாழ்வாங்கு வாழ்க.” |
| (ஈ) | வைதல் (அ) சபித்தல் | - “தீமைகள் அழிக.” |
| 4) | உணர்ச்சி வாக்கியம் | - “என்னே தமிழின் இனிமை!” |
அமைப்பு வகை வாக்கியம்
| 1) | தனிவாக்கியம் | - “பாண்டியர் தமிழை வளர்த்தனர் ஓரெழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய் ஒரே பயனிலையைக் கொண்டு முடிவது.) |
| 2) | தொடர் வாக்கியம் | - “சமயம் என்பது நன்னடத்தை ; வெறும் நம்பிக்கை அன்று.” (இவ்வாறு, தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வருவது.) |
| 3) | கலவை வாக்கியம் | -“ஆண்மக்களே ! பெண்ணினத்திற்கு மதிப்புக் கொடுங்கள் ; உரிமை கொடுங்கள் !” (ஒரு முதன்மை வாக்கியம், பல சார்பு வாக்கியங்களுடன் பொருந்த வருவது.) |
ஒரே கருத்தைப் பல வடிவ வாக்கியங்களில் அமைத்தல்
அன்பு மாணவர்களே! ஒரே கருத்தைப் பலவித வாக்கியங்களில் அமைத்து எழுதுவது ஒரு சிறந்த மொழித் திறன். அதனை அறிந்து கொள்க.
| எண் | தன்வினை | பிறவினை |
| அ) திருக்குறள் கற்றேன். | திருக்குறளைக் கற்பித்தேன் | |
| 1) | ஆ) “நண்பர்கள் வீட்டில் விருந்து உண்டேன். | “நண்பரை விருந்து உண்பித்தேன்.” |
| இ) “காவலர் கொள்ளையர் கொட்டம் அடங்கினர்.” | “காவலர் கொள்ளையர் கொட்டத்தை அடக்கிவித்தனர். | |
| 2) | செய்வினை | செயப்பாட்டு வினை |
| அ) “கரிகாலன் கல்லணையைக் கட்டினான். | “கல்லணை கரிகாலனால் கட்டப்பட்டது. | |
| ஆ) “தமிழக அரசு இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது. | இணையப் பல்கலைக்கழகம் தமிழக அரசால் நிறுவப்பட்டது. | |
| இ) “சோழன், சேக்கிழாரை வரவேற்று வணங்கினான்.” | சேக்கிழார், சோழனால் வரவேற்கப் பட்டு வணங்கப்பட்டார். | |
| 3) | உடன்பாட்டு வாக்கியம் | எதிர்மறை வாக்கியம் |
| அ) “மொழிகள் சிலவே இலக்கிய வளம் உள்ளவை.” | “மொழிகள் பல இலக்கிய வளம் அற்றவை.” | |
| ஆ) “பேதை தனக்குத் தானே கேடு செய்து கொள்கிறான்.” | “பேதைக்குக் கேடு செய்ய வேறொருவர் வேண்டியதில்லை.” | |
| இ) “திருக்குறளில் எல்லாக் கருத்துகளும் உள.” | “திருக்குறளில் இல்லாத கருத்துகள் இல்லை.” | |
| 4) | செய்தி வாக்கியம் | வினா வாக்கியம் |
| அ) “நாம் கல்வி பயில்வது வேலை பெறுவதற்கு மட்டுமன்று.” | “நாம் வேலை பெறுவதற்கு மட்டுமா கல்வி பயில்வது?” | |
| ஆ) “முயன்றால் அனைத்தும் ஆகும்.” | “முயன்றால் ஆகாததும் உண்டோ?” | |
| இ) தமிழின் இனிமையை ஒருவரும் மறுக்கார் | தமிழின் இனிமையை எவரும் மறுப்பரோ. | |
| 5) | செய்தி வாக்கியம் | கட்டளை வாக்கியம் |
| அ) “வைகறையில் துயில் எழுதல் வேண்டும்.” | “வைகறைத் துயில் எழு.” | |
| ஆ) “உலகத் தமிழர் ஒன்றுபட வேண்டும்.” | “உலகத் தமிழர் ஒன்று படுக.” | |
| இ) “ஒன்று செய்தாலும் நன்று செய்தல் வேண்டும்.” | “ஒன்றே செய்க ; அதுவும் நன்றே செய்க.” | |
| 6) | செய்தி வாக்கியம் | உணர்ச்சி வாக்கியம் |
| அ) கணினியின் செயற்பாடுகள் சிறப்பாக உள்ளன. | என்னே ! கணினின் செயற்பாடுகள் ! | |
| ஆ) ஆழிப்பேரலையால் பேரழிவு ஏற்பட்டது. | ஐயகோ ! ஆழிப் பேரலையால் ஏற்பட்ட அழிவுதான் என்னே ! | |
| இ) நான் அமைச்சரானால் நன்றாக இருக்கும். | ஆகா ! நான் மட்டும் அமைச்சரானால் எப்படி இருக்கும் ! |