Tamil Virtual Academy

TAMIL VIRTUAL ACADEMY - தமிழ் இணையக் கல்விக்கழகம்

Languages

tamilnadu_temples_new

அருள்மிகு காரையாறு சொரிமுத்து அய்யனார் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

Other Names :

சொரிமுத்து அய்யனார், மகாலிங்கம்

Place :

காரையார்

Taluk :

பாபநாசம்

District :

திருநெல்வேலி

Religious Type :

நாட்டுப்புறத் தெய்வம்-அய்யனார்

Lord Name :

சொரிமுத்து அய்யனார்

Procession On God :

Mother / Goddess Name :

ஏழுகன்னியர், பேச்சியம்மன், இருளம்மன், பாதாளகண்டிகை

Temple Tree :

இலுப்பை

Tirukkulam / River :

தாமிரவருணி

Agamam :

Worship Time :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

Festivals :

ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, தை வெள்ளி, பங்குனி உத்திரம்

History :

கைலாயத்தில் சிவன் பார்வதி திருமணம் நடந்தபோது பூமியை சமப்படுத்த அகத்தியரை பொதிகை மலைக்கு சிவபெருமான் அனுப்பினார். பொதிகை மலைக்கு வந்த அகத்தியர் இவ்விடத்தில் ஒரு சிவலிங்கத்தை நிறுவி பூசை செய்து வந்தார். காலப்போக்கில் அந்த சிவலிங்கத்தை மண் மூடியது. பசு ஒன்று அவ்விடத்தில் நாள்தோறும் பாலைச் சொரிந்து சிவனுக்கு அபிடேகம் செய்தது. இச்செய்தி அறிந்த மன்னன் இவ்விடத்தில் உள்ள சிவலிங்கத்தை தோண்டி அவ்விடத்தில் கோயில் எழுப்பினார். அங்கேயே தர்மசாஸ்தாவான அய்யனாருக்கும் கோயில் எழுப்பப்பட்டது. இந்த அய்யனார் அருளை பக்தர்கள் பால் சொரிபவர் ஆதலால் சொரிமுத்து அய்யனார் என அழைக்கப்பட்டார். பாண்டியர்களின் செல்வத்திற்கு காரணமான முத்து அய்யனாருக்கும் பெயராக சூட்டப்பட்டது. முன்பொரு காலத்தில் பிராமணர் ஒருவர் சூழ்நிலையின் காரணமாக தாழ்த்தப்பட்ட குலத்தில் வளர்ந்த இருபெண்களை திருமணம் செய்து கொண்டார். அவர் தன் மாமனாரின் கட்டளையின் பேரில் செருப்பு தைக்கும் தொழிலையும் கற்றுக்கொண்டார். அந்த பிராமணர் பசுக்களைக் காக்கும் சண்டையில் உயிர் நீத்தார். அவரை பட்டவராயர் என்றழைத்து அவருடைய இரு மனைவியர் பொம்மக்கா-திம்மக்காவுடன் சிற்பங்கள் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டு வருகின்றன. பட்டவராயருக்கு செருப்புகளை காணிக்கையாக பக்தர்கள் வழங்குகின்றனர். இந்த செருப்புகள் அடுத்த ஆண்டுக்குள் தேய்ந்து விடுவதாகவும், பட்டவராயரே இந்த செருப்புகளை பயன்படுத்துகின்றார் எனவும் மக்கள் நம்புகின்றனர்.

Protecting Company :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

Nearest Temples Arc :

அகத்தீஸ்வரர் கோயில், காசிபநாதர் கோயில், கிருஷ்ணசுவாமி கோயில், தென்னழகர் கோயில், நீலமணிநாதசுவாமி கோயில், அம்மைநாதர் கோயில்

Summary :

முருகனுக்கு அறுபடை வீடு இருப்பது போல ஐயப்பனுக்கு சொரிமுத்து அய்யனார் கோயில், அச்சன் கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என ஆறு கோயில்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இதுவே சாஸ்தாவின் முதல் கோயில் என்று கருதப்படுகிறது. இங்கு அய்யனார் என்பது நாட்டுப்புறத்தில் வழங்கபெறும் பெயராகும். சாஸ்தா என்பது வடமொழியாகும். இங்கு அய்யனார் பூரணை புஷ்கலையுடன் விளங்குகிறார். மேலும் ஆடி அமாவாசை தினம் இங்கு சிறப்பாக வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள அய்யனார் இடதுகாலை குத்துக்காலிட்டு, வலதுகாலை தொங்கவிட்டு சற்றே இடதுபுறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே நந்தி, யானை, குதிரை வாகனங்கள் ஒரே பீடத்தில் இருக்கின்றன. மேலும் இவரது திருமுன்னிலேயே (சந்நிதி) ஏழுகன்னியர் உள்ளனர். முன்மண்டபத்தில் பைரவர் எதிரே நாய் வாகனம் காட்டப்பட்டுள்ளது. குலதெய்வம் தெரியாதவர்கள் இவரை வழிபடுகிறார்கள். மேலும் இக்கோயிலில் தளவாய் மாடன், அகத்தியர், பட்டவராயன், திம்மக்கா, பொம்மக்கா, சுடலை மாடன், பேச்சியம்மன், பாதாள கண்டிகை, இருளப்பன், இருளம்மன் ஆகியோர் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். கோயில் வளாகத்தில் உள்ள இலுப்பை மரம் தலமரமாகும். மக்கள் இம்மரத்தில் மணியினைக் கட்டுகின்றனர். இதற்கு மணிவிழுங்கி மரம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர்.

Period / Ruler :

கி.பி.19-ஆம் நூற்றாண்டு

Inscription / Copper :

1824-ஆம் ஆண்டு சித்திரை மாதம் 23-ந்தேதி பெரியசாமி தேவர் என்பவரால் சத்திரம் ஒன்று இக்கோயிலில் கட்டப்பட்டது என்பதை கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. சிங்கம்பட்டி ஜமீன்தார் சாமிதுரை அவர்கள் தாயார் சிவணாயி ஆத்தா அவர்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு அளித்த கொடையைக் குறிக்கும் கல்வெட்டு உள்ளது. 1900-ஆம் ஆண்டு ஆனி மாதம் 30-ந்தேதி பௌர்ணமியன்று ராமலிங்க சுவாமிகள் ஜீவ சமாதியான செய்தியைக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று உள்ளது. 1932-ஆம் ஆண்டு கோயிலில் மாட்டப்பட்ட மணி மீண்டும் 1950-ஆம் ஆண்டு பிச்சாண்டி ஆசாரி என்பவரால் மீண்டும் வார்த்து மாட்டப்பட்டது என்னும் செய்தியை கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது.

Murals :

இல்லை

Sculptures :

கருவறையில் இலிங்க வடிவத்தில் மகாலிங்கம் உள்ளார். மற்றொரு கருவறையில் சொரிமுத்து அய்யனார் அமைந்துள்ளார். இடதுகாலை குத்துக்காலிட்டு, வலதுகாலை தொங்கவிட்டு அமர்ந்துள்ளார். பூரணை புஷ்கலையுடன் காட்சியளிக்கிறார். மேலும் இக்கோயிலில் பொம்மக்கா திம்மக்காவுடன் பட்டவராயர் சிற்பங்களும், அகத்தியரும் சங்கிலிபூதத்தாரும், தளவாய் மாடன், பேச்சி, பிரம்மராட்சஸி, பாதாளகண்டிகை ஆகிய சிற்பங்கள் அமைந்துள்ளன.

Temple Structure :

Location :

அருள்மிகு சொரிமுத்து அய்யனார் கோயில், காரையார்-627 416, சிங்கம் பட்டி, பாபநாசம், திருநெல்வேலி

Phone :

04634-250209

Website :

Temple Opening Time :

காலை5.00-12.00 முதல் மாலை 4.30-9.00 வரை

Way :

திருநெல்வேலி-பாபநாசம் நெடுஞ்சாலையில் திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாசமுத்திரத்திலிருந்து சில கி.மீ. தொலைவில் உள்ள காரையார்செல்லலாம். அம்பாசமுத்திரத்திலிருந்து பேருந்தில் காரையார் செல்லலாம்.

Nearby Bus Station :

அம்பாசமுத்திரம், பாபநாசம்

Nearby Railway Station :

அம்பாசமுத்திரம், திருநெல்வேலி

Nearby Airport :

திருவனந்தபுரம், மதுரை

Accommodation :

அம்பாசமுத்திரம், தென்காசி, திருநெல்வேலி விடுதிகள்
சாலை வரைபடம்
Updated Date : 07-12-2016 18:19:46 IST