11-20

11. பாலை
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ, நாளும்
பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி,
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
எழு, இனி-வாழி, என் நெஞ்சே!-முனாது,
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல் வேற் கட்டி நல் நாட்டு உம்பர்
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும்,
வழிபடல் சூழ்ந்திசின், அவருடை நாட்டே.

தலைமகள் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்த் தோழி கேட்பச் சொல்லியது. - மாமூலனார்

12. பாலை
எறும்பி அளையின் குறும் பல் சுனைய
உலைக்கல் அன்ன பாறை ஏறி,
கொடு வில் எயினர், பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப, அவர் தேர் சென்ற ஆறே;
அது மற்று அவலம் கொள்ளாது,
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.

''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - ஓதலாந்தையார்

13. குறிஞ்சி
மாசு அறக் கழீஇய யானை போலப்
பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல்
பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன்
நோய் தந்தனனே - தோழி!-
பசலை ஆர்ந்த, நம் குவளைஅம் கண்ணே.

தலைவன் தோழியிற் கூட்டம் கூடி, ஆற்றும் வகையான் ஆற்றுவித்துப் பிரிய,வேறுபட்ட கிழத்தி தோழிக்கு உரைத்தது. - கபிலர்

14. குறிஞ்சி
அமிழ்து பொதி செந் நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச்சில் மொழி அரிவையைப்
பெறுகதில் அம்ம, யானே! பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ் ஊரே! மறுகில்,
''நல்லோள் கணவன் இவன்'' எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

''மடன்மா கூறும் இடனுமார் உண்டே'' என்பதனால் தோழி குறை மறுத்துழி, தலைமகன். ''மடலேறுவல்'' என்பதுபடச் சொல்லியது. - தொல் கபிலர்

15. பாலை
பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

உடன்போயின பின்றை, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றாள். நிற்ப, செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தோடு நின்றது. -ஒளவையார்

16. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி! கள்வர்
பொன் புனை பகழி செப்பம் கொண்மார்,
உகிர் நுதி புரட்டும் ஓசை போல,
செங் காற் பல்லி தன் துணை பயிரும்
அம் காற் கள்ளிஅம் காடு இறந்தோரே?

பொருள்வயிற் பிரிந்தவிடத்துத் தலைமகள் ஆற்றாமை கண்டு, தோழி கூறியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

17. குறிஞ்சி
மா என மடலும் ஊர்ப; பூ எனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப;
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப-காமம் காழ்க்கொளினே.

தோழியிற் கூட்டம் வேண்டிப் பின்னின்ற தலைமகன் தோழி குறைமறாமல் கூறியது.- பேரெயின் முறுவலார்

18. குறிஞ்சி
வேரல் வேலி வேர் கோட் பலவின்
சாரல் நாட! செவ்வியை ஆகுமதி!
யார் அஃது அறிந்திசினோரே?-சாரல்
சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கியாங்கு, இவள்
உயிர் தவச் சிறிது; காமமோ பெரிதே!

இரவுக்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு, வரைவு கடாயது.-கபிலர்

19. மருதம்
எவ்வி இழந்த வறுமையர் பாணர்
பூ இல் வறுந்தலை போலப் புல்லென்று
இனைமதி வாழியர்-நெஞ்சே!-மனை மரத்து
எல்லுறும் மௌவல் நாறும்
பல் இருங் கூந்தல் யாரளோ நமக்கே?

உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது. - பரணர்

20. பாலை
அருளும் அன்பும் நீக்கி, துணை துறந்து,
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்,
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை, நாமே!

செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது. - கோப்பெருஞ் சோழன்