51-60

51. நெய்தல்
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர்வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார்

52. குறிஞ்சி
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே?

வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது. - பனம்பாரனார்

53. மருதம்
எம் அணங்கினவே-மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி,
சூரரமகளிரோடு உற்ற சூளே.

வரைவு நீட்டித்தவழித் தோழி தலைமகற்கு உரைத்தது. - கோப்பெருஞ்சோழன்

54. குறிஞ்சி
யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- மீனெறி தூண்டிலார்

55. நெய்தல்
மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல் ஊரே.

வரைவொடு புகுதானேல் இவள் இறந்துபடும்'' எனத் தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாகச் சொல்லியது. - நெய்தல் கார்க்கியர்

56. பாலை
வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!

தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி,இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது. - சிறைக்குடி ஆந்தையார்

57. நெய்தல்
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன் அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.

காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.- சிறைக்குடி ஆந்தையார்

58. குறிஞ்சி
இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கை இல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!

கழற்றெதிர்மறை. - வெள்ளிவீதியார்

59. பாலை
பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும் பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.

பிரிவிடை அழிந்த கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - மோசிகீரனார்

60. குறிஞ்சி
குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங் கால் முடவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல் கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.

பிரிவிடை ஆற்றாமையான் தலைமகள் தோழிக்கு உரைத்தது. - பரணர்