131-140

131.பாலை
ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள்
பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே
நெடுஞ் சேண் ஆர் இடையதுவே; நெஞ்சே,
ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து
ஓர் ஏர் உழவன் போல,
பெரு விதுப்பு உற்றன்றால்; நோகோ யானே,

வினைமுற்றிய தலைமகன் பருவ வரவின்கண் சொல்லியது. - ஓரேருழவனார்

132. குறிஞ்சி
கவவுக் கடுங்குரையள்; காமர் வனப்பினள்;
குவவு மென் முலையள்; கொடிக் கூந்தலளே-
யாங்கு மறந்து அமைகோ, யானே?- ஞாங்கர்க்
கடுஞ் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி
தாய் காண் விருப்பின் அன்ன,
சாஅய் நோக்கினள்-மாஅயோளே,

கழற்றெதிர்மறை. - சிறைக்குடி ஆந்தையார்

133. குறிஞ்சி
புனவன் துடவைப் பொன்போல் சிறுதினை
கிளி குறைத்து உண்ட கூழை இருவி
பெரும் பெயல் உண்மையினே இலை ஒலித்தாங்கு, என்
உரம் செத்தும் உளெனே-தோழி!-என்
நலம் புதிது உண்ட புலம்பினானே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் சொல்லியது. - உறையூர் முதுகண்ணன் சாத்தன்

134. குறிஞ்சி
அம்ம வாழி-தோழி!-நம்மொடு
பிரிவு இன்று ஆயின் நன்றுமன் தில்ல-
குறும் பொறைத் தடைஇய நெடுந் தாள் வேங்கைப்
பூவுடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக்
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி,
நிலம் கொள் பாம்பின், இழிதரும்
விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே.

வரைவிடை ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றுவிக்கும் தோழிக்குச் சொல்லியது.- கோவேங்கைப் பெருங்கதவன்

135. பாலை
''வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல்-தோழி!-அழுங்குவர் செலவே.

''தலைமகன் பிரியும்'' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ.

136. குறிஞ்சி
''காமம் காமம்'' என்ப; காமம்
அணங்கும் பிணியும் அன்றே; நுணங்கிக்
கடுத்தலும் தணிதலும் இன்றே; யானை
குளகு மென்று ஆள் மதம் போலப்
பாணியும் உடைத்து, அது காணுநர்ப் பெறினே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது. - மிளைப்பெருங் கந்தன்

137. பாலை
மெல் இயல் அரிவை! நின் நல் அகம் புலம்ப,
நிற் துறந்து அமைகுவென்ஆயின்-எற் துறந்து
இரவலர் வாரா வைகல்
பல ஆகுக!-யான் செலவுறு தகவே.

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரிவச்சம் உரைத்தது.- பாலை பாடிய பெருங்கடுங்கோ

138. குறிஞ்சி
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே.

குறி பிழைத்த தலைமகன் பிற்றை ஞான்று இரவுக்குறி வந்துழி, தோழி சிறைப்புறமாகக் கூறியது; இரவுக்குறி நேர்ந்ததூஉம் ஆம். - கொல்லன் அழிசி

139. மருதம்
மனை உறை கோழி குறுங் கால் பேடை,
வேலி வெருகினம் மாலை உற்றென,
புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாஅங்கு
இன்னாது இசைக்கும் அம்பலொடு
வாரல், வாழியர்!-ஐய!-எம் தெருவே.

வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. - ஒக்கூர் மாசாத்தியார்.

140. பாலை
வேதின வெரிநின் ஓதி முது போத்து,
ஆறு செல் மாக்கள் புள் கொள, பொருந்தும்
சுரனே சென்றனர், காதலர்; உரன் அழிந்து,
ஈங்கு யான் அழுங்கிய எவ்வம்
யாங்கு அறிந்தன்று-இவ் அழுங்கல் ஊரே?

பொருள்வயிற் பிரிந்த இடத்து, ''நீ ஆற்றுகின்றிலை'' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. - அள்ளூர் நன்முல்லையார்.