351-360

351. நெய்தல்
வளையோய்! உவந்திசின்-விரைவுறு கொடுந் தாள்
அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த
ஈர் மணல் மலிர் நெறி சிதைய, இழுமென
உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு
உரிமை செப்பினர் நமரே; விரிஅலர்ப்
புன்னை ஓங்கிய புலால்அம் சேரி
இன் நகை ஆயத்தாரோடு
இன்னும் அற்றோ, இவ் அழுங்கல் ஊரே?

தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, ''நமர் அவர்க்கு வரைவு நேரார்கொல்லோ?''என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. - அம்மூவன்

352. பாலை
நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்தன்ன
கொடு மென் சிறைய கூர்உகிர்ப் பறவை
அகல்இலைப் பலவின் சாரல் முன்னி,
பகல் உறை முது மரம் புலம்பப் போகும்
சிறு புன் மாலை உண்மை
அறிவேன்-தோழி-! அவர்க் காணா ஊங்கே.

பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து கூறியது. - கடியலூர் உருத்திரங் கண்ணனார்

353. குறிஞ்சி
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக,
கோடு உயர் நெடு வரைக் கவாஅன், பகலே,
பாடு இன் அருவி ஆடுதல் இனிதே;
நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு, இரவில்,
பஞ்சி வெண் திரி செஞ் சுடர் நல் இல்
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ,
அன்னை முயங்கத் துயில் இன்னாதே.

பகற்குறி வந்தொழுகும் தலைமகன் வெளிப்பாடஞ்சி இரவுக்குறி நயந்தானது குறிப்பறிந்த தோழி, இரவின்கண் அன்னையது காவல் அறிந்து, பின்னும் ''பகற்குறியே நன்று, அவ் இரவுக்குறியின்'', என்று, பகற்குறியும் இரவுக்குறியும் மறுத்து, தலைமகன் சிறைப்புறத்தானாக வரைவு கடாயது. - உறையூர் முதுகூற்றன்.

354. மருதம்
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்;
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்;
தணந்தனைஆயின், எம் இல் உய்த்துக் கொடுமோ-
அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க்
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே?

பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- கயத்தூர் கிழான்

355. குறிஞ்சி
பெயல் கால் மறைத்தலின், விசும்பு காணலரே;
நீர் பரந்து ஒழுகலின், நிலம் காணலரே;
எல்லை சேறலின், இருள் பெரிது பட்டன்று;
பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல்
யாங்கு வந்தனையோ?-ஓங்கல் வெற்ப!-
வேங்கை கமழும் எம் சிறுகுடி
யாங்கு அறிந்தனையோ? நோகோ யானே.

இரவுக்குறி நேர்ந்த தலைமகற்குத் தோழி நொந்து கூறியது. - கபிலர்

356. பாலை
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக்
கழலோன் காப்பப் கடுகுபு போகி,
அறுசுனை மருங்கின் மறுகுபு வெந்த
வெவ் வெங் கலுழி தவ்வெனக் குடிக்கிய
யாங்கு வல்லுநள்கொல் தானே-ஏந்திய
செம் பொற் புனை கலத்து அம் பொரிக் கலந்த
பாலும் பல என உண்ணாள்,
கோல் அமை குறுந் தொடித் தளிர் அன்னோளே?

மகட்போக்கிய செவிலித்தாய் உரைத்தது. - கயமன்

357. குறிஞ்சி
முனி படர் உழந்த பாடு இல் உண்கண்
பனி கால் போழ்ந்து, பணை எழில் ஞெகிழ் தோள்,
மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு,
நல்ல என்னும் சொல்லை மன்னிய-
ஏனல்அம் சிறு தினை காக்கும் சேணோன்
ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை
மீன் படு சுடர் ஒளி வெரூஉம்
வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே.

தோழி கிழவன் கேட்கும் அண்மையனாகக் கிழத்திக்குச் சொல்லியது. - கபிலர்

358. மருதம்
வீங்குஇழை நெகிழ, விம்மி, ஈங்கே
எறிகண் பேதுறல்; ''ஆய்கோடு இட்டுச்
சுவர்வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க
வருவேம்'' என்ற பருவம் உதுக்காண்:
தனியோர் இரங்கும் பனி கூர் மாலைப்
பல் ஆன் கோவலர் கண்ணிச்
சொல்லுப அன்ன, முல்லை வெண் முகையே.

தலைமகன் பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது. - கொற்றன்

359. மருதம்
கண்டிசின்-பாண!-பண்பு உடைத்து அம்ம:
மாலை விரிந்த பசு வெண் நிலவின்
குறுங் காற் கட்டில் நறும் பூஞ் சேக்கை,
பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ,
புதல்வற் தழீஇயினன் விறலவன்;
புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே.

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகன் வாயில் வேண்டிப் பெறாது, தானே புக்குக் கூடியது கண்டு தோழி, பாணற்குச் சொல்லியது. - பேயன்.

360. குறிஞ்சி
வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து
அறியான் ஆகுதல் அன்னை காணிய,
அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும்,
வாரற்கதில்ல-தோழி!-சாரல்
பிடிக் கை அன்ன பெருங் குரல் ஏனல்
உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே
சிலம்பின் சிலம்பும் சோலை
இலங்கு மலை நாடன் இரவினானே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, வெறி அஞ்சிய தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைவி சொல்லியது - மதுரை ஈழத்துப் பூதன் தேவன்