3.3 வேற்றுமை
பெயர்ச் சொல்லின் தலையாய
இலக்கணம் வேற்றுமை
உருபுகளை ஏற்று வருவதாகும். வேற்றுமை உருபுகள் பெயர்ச்
சொற்களின் இறுதியில் வந்து, அச்சொற்களின் பொருளை
வேறுபடுத்துகின்றன. இக்காரணத்தால் இவை வேற்றுமை
எனப்பட்டன. இவை தமக்கெனப் பொருள் இருந்தாலும் தனித்து
இயங்காத கட்டுருபன்கள் ஆகும் என்பதை முன்னர்க் கண்டோம்.
(எ.டு)
|
சாத்தன்
கொடுத்தான் |
|
சாத்தனைக்
கொடுத்தான். |
|
சாத்தனுக்குக்
கொடுத்தான். |
3.3.1
வேற்றுமைப் பாகுபாடு
தொல்காப்பியர் வேற்றுமையை முதலில்
ஏழு எனக் கூறிப்
பின்பு விளி என்பதையும் சேர்த்து வேற்றுமை
எட்டென
வரையறுக்கிறார்.
வேற்றுமை
தாமே ஏழ் என மொழிப
விளி கொள்வதன்கண் விளியொடு எட்டே
(தொல்.சொல். 63,64)
|
தொல்காப்பியர் மொழிப
என்று கூறுவதை நோக்குமிடத்து,
அவர்க்கு முன்பு இருந்த இலக்கண ஆசிரியர்கள், தமிழில்
வேற்றுமைகள் ஏழு என்றே கொண்டிருந்தனர் என்பதும், விளியை
ஒரு தனி வேற்றுமையாகக் கொள்ளவில்லை என்பதும்
புலனாகின்றன. எனவே தொல்காப்பியரே, விளி
என்பதை ஒரு
தனி வேற்றுமையாகக் கொண்டு அதனை எட்டாம் வேற்றுமை
என்று கூறினார் எனலாம்.
தொல்காப்பியர்
முதல் வேற்றுமையை எழுவாய் வேற்றுமை என்றும்
எட்டாம் வேற்றுமையை விளி வேற்றுமை என்றும் குறிப்பிடுகிறார். இவற்றிற்கு
என்று தனி வேற்றுமை உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை
வரையுள்ள ஆறு வேற்றுமைகளுக்கே உருபுகள் உண்டு. அவை முறையே ஐ,
ஒடு, கு, இன், அது, கண் ன்பனவாகும். மூன்றாம் வேற்றுமைக்கு
ஒடுவுடன் ஆன் உருபும் உண்டு;
ஆறாம் வேற்றுமைக்கு அது உருபுடன்
அ உருபும் உண்டு. ஏழாம் வேற்றுமைக்குக் கண் உருபுடன் கால், புறம்,
அகம் போன்ற பல உருபுகளும் உண்டு.
3.3.2
வேற்றுமை - சில கருத்துகள்
முந்தைய பாடங்களில்
( C0 2125, C0 2126) தமிழ்
வேற்றுமைகள் பற்றி விரிவாகப் படித்திருக்கிறீர்கள். இங்கு
வேற்றுமை தொடர்பாகத் தொல்காப்பியர் காலத் தமிழில் இருந்த
சில சிறப்பியல்புகளை மட்டும் காண்போம்.
மூன்றாம்
வேற்றுமைப் பொருள்
மூன்றாம் வேற்றுமை உருபாகிய ஒடு
என்பது வினைமுதல்,
கருவி, உடனிகழ்ச்சி ஆகிய பொருள்களை உணர்த்தும் என்கிறார்
தொல்காப்பியர்.
கொடியொடு
துவக்குண்டான் : |
(நீர்நிலையில்
உள்ள தாமரை போன்ற கொடியால் கட்டப்பட்டான்) -
கொடி கட்டியது என வருவதால் வினைமுதல் பொருள். |
ஊசியொடு குயின்ற தூசும்
பட்டும் :
|
(ஊசியால்தைக்கப்பட்ட
பருத்தி, பட்டுத்துணிகள்) -
ஊசி இங்கே தைக்கும் கருவி.
ஆகவே கருவிப்பொருள். |
ஆசிரியனொடு
மாணாக்கர்
வந்தார் : |
ஆசிரியன் - மாணாக்கர்
இருவர் செயலும் உடன்
நிகழ்வதால் உடனிகழ்ச்சிப்
பொருள். |
ஆன்
உருபு வினைமுதல், கருவி, ஏது ஆகிய பொருள்களில்
வரும்.
சாத்தனான்
முடியும் இக்காரியம் |
வினை
முதல்பொருள் |
மண்ணான்
அமைந்த குடம் |
கருவிப்பொருள்
|
வணிகத்தான்
பெற்ற பொருள் |
ஏதுப்பொருள்
|
ஒடு, ஆன் என வேறுவேறு உருபுகள் இருப்பினும்
அவை
உணர்த்தும் பொருள்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் இவை ஒரே
வேற்றுமையைச் சார்ந்தவையேயாகும்.
தொல்காப்பியருக்குப்பின் ஒடு,
ஆன் என்பவற்றின்
திரிபாகிய ஓடு, ஆல் என்பவைகளும் தனி உருபுகளாகக்
கொள்ளப் பட்டன. பின் வந்த மாற்றத்தில் ஆல், ஆன் உருபுகள்
கருவி, வினை முதல் பொருளுக்கும், ஒடு ஓடு உருபுகள்
உடனிகழ்ச்சிப் பொருளுக்கும் என வரையறுக்கப்பட்டன. நீங்கள்
முன்பு பயின்ற பாடங்களில் இதனை அறிந்திருப்பீர்கள்.
ஆறாம்
வேற்றுமைப் பொருளில் உயர்திணைத் தொகை
ஆறாம் வேற்றுமை உடைமைப் பொருள்
(கிழமைப் பொருள்)
உடையது என்பதனை அறிவீர்கள். கிழமை தற்கிழமை
(தன்னிலிருந்து பிரிக்க முடியாத உடைமை), பிறிதின்கிழமை
(பிரிக்கப்படக்கூடிய உடைமை) என இருவகைப்படும் எனவும்
அறிவீர்கள்.
சாத்தனது
இளமை |
தற்கிழமை
|
சாத்தனது
வீடு |
பிறிதின்கிழமை |
உடைமை என்பது அஃறிணைப் பொருள்களையே
குறிக்கும்.
ஆறாம் வேற்றுமைப் பொருளில் உயர்திணைத் தொகை வந்தால்
அதனை எப்படி விரித்துப் பொருள் கொள்வது?
கண்ணன் மகன் - கண்ணனது மகன்
என அது உருபு
வராது.
கண்ணனுக்கு மகன் என நான்காம்
வேற்றுமை உருபை
இங்கே சேர்க்க வேண்டும்.
இது தொல்காப்பியர் காட்டும் வழி (தொல்.
சொல். 95)
வேற்றுமை
மயக்கம்
ஓர் உருபு வரவேண்டிய இடத்தில் அதற்குத்
தொடர்பில்லாத
வேறோர் உருபு வந்தால், அத்தொடருக்குரிய பொருளுக்கு ஏற்ப
உருபை மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும்.
கிழங்கு
மணற்கு ஈன்ற முளை
இத்தொடரில் கு
உருபின் பொருள் இல்லை. மணலின் கண்
ஈன்ற முளை என ஏழாம் வேற்றுமை உருபு வருவதே பொருத்தம்.
ஆகவே பொருள் கொள்ளும்போது கண் உருபைச்
சேர்த்துப்
பொருள் கொள்ள வேண்டும். இவ்வாறு உருபுகள் மயங்கி வருவது
உருபுமயக்கம் எனப்படும்.
மேற்கூறியவற்றால் தொல்காப்பியர்
காலத் தமிழில்
பெயர்ச்சொற்கள் திணை பால் அடிப்படையில் பாகுபடுத்தப்
பட்டிருந்ததையும், பதிலிடு பெயர்கள் ஒழுங்குபட அமைந்திருந்த
தன்மையினையும், பெயர்கள் ஏற்ற வேற்றுமையின் சில
இயல்புகளையும் கண்டோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1.
|
தொல்காப்பியர்
எல்லாச் சொல்லும் என்று கூறியது
எவற்றை? |
|
2.
|
உருபன் என்பதற்கு மொழி நூலார் கூறும் விளக்கம் யாது? |
|
3.
|
செய்தான் என்ற சொல்லில் உள்ள தனி உருபன், கட்டு உருபன்களைக் குறிப்பிடுக.
|
|
4.
|
விரவுப் பெயர் என்றால் என்ன? இரு சான்றுகள் தருக. |
|
5.
|
தொல்காப்பியர் குறிப்பிடும் பதிலிடு பெயர்கள் யாவை? |
|
6.
|
சுட்டு, வினா
அடிச் சொற்களிலிருந்து உருவாகும் ஆண்பாற் பெயர்களையும் பெண்பாற் பெயர்களையும்
குறிப்பிடுக. |
|
7.
|
தொல்காப்பியர் காலத்தில் வழங்கிய தன்மைப் பெயர்கள் யாவை? |
|
8.
|
ஒன்று என்னும் எண்ணுப்பெயரின்
அடியாகத் தோன்றும் உயர்திணைப் பெயர்கள் யாவை? |
|
9.
|
அஃறிணையில்
ஒருமைச் சொற்களைப்
பன்மையாக்குவதற்குச் சேர்க்கப்படும் விகுதி யாது? |
|
10.
|
தொல்காப்பியர் கூறும் வேற்றுமைகள் எத்தனை? |
|
11.
|
மூன்றாம் வேற்றுமைக்கு உரிய உருபுகளையும் பொருள்களையும் கூறுக. |
|
12.
|
ஏழாம் வேற்றுமை உருபு யாது? |
|
|