நாட்டுப்புறக் கதைகளின் சேகரிப்பு மிகுதியாக மிகுதியாக அவற்றை வகைப்படுத்த
வேண்டியதன் தேவை ஏற்பட்டது. ஆன்ட்டி ஆர்னி (Anti Aarne, 1867-1925)
என்னும் அறிஞர் அடிப்படைக் கதை வகைகளைக் கணக்கெடுத்து 1911இல் ஒரு
நூல் வெளியிட்டார். இது பின்னர் ஸ்டித் தாம்சன் (Stith Thompson) என்னும்
அறிஞரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுத் திருத்தப்பட்டு, நாட்டுப்புறக்
கதைகளின் வகைகள் (The Types of the Folktale) என்னும்
பெயரில் வெளியிடப்பட்டது. இந்நூலில் நாட்டுப்புறக் கதைகள் பின்வரும்
ஐந்து பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அவை
:
- விலங்குக் கதைகள்
(Animal Tales)
- சாதாரணக் கதைகள்
(Ordinary Folktales)
- நகைச்சுவை மற்றும்
துணுக்குக் கதைகள் (Jokes and
Anecdotes)
- வாய்பாட்டுக்
கதைகள் (Formula Tales)
- வகைப்படுத்தப்படாத
கதைகள் (Unclassified Tales)
உலக
நாடுகள் பலவற்றிலும் நாட்டுப்புறக் கதைச் சேகரிப்புப்
பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. சேகரிப்பாளர்கள்
சேகரிப்புகளை வகைப்படுத்தி வெளியிடுகின்றனர். அவரவர்
சேகரிப்புக்கேற்ப இந்த வகைப்பாடுகள் வேறுபடுகின்றன. நாம்
கதைகளைப் பின்வருமாறு வகைப்படுத்திக் கொள்ளலாம்.
- தோற்றக் கதைகள்
- காரணக் கதைகள்
- நீதிக் கதைகள்
- நகைச்சுவைக் கதைகள்
- இடப் பெயர்வுக் கதைகள்
- வரலாற்றுக் கதைகள்
- நம்பிக்கை விளக்கக் கதைகள்
இவ்வகைக்
கதைகளுள் சிலவற்றை மட்டும் சான்றுகளுடன்
காணலாம்.
1.3.1
தோற்றக் கதைகள்
உலகம், ஞாயிறு, சந்திரன், விண்மீன்கள், நதிகள்,
மலைகள்,
ஊர்கள், தெய்வங்கள் போன்றவற்றின் தோற்றம் (Origin) குறித்த
கதைகளைத் தோற்றக் கதைகள் எனலாம். பண்டைக்கால
மனிதன் உலகம் முதலானவை எவ்வாறு தோன்றியிருக்கும்
என்று சிந்தித்திருப்பான். அறிவியல் பூர்வமான உண்மைகளை
அறிய இயலாத நிலையில் கற்பனையான கதைகளைப்
புனைந்திருப்பான். ஊர்தோற்றம், தெய்வத் தோற்றம் குறித்த
கதைகளுள் பல, உண்மையின் அடிப்படையில் உருவாகிக்
காலப் போக்கில் உண்மை என்று அறிய இயலாத வகையில்
கற்பனை கலந்திருக்கலாம்.
தெய்வங்களின்
தோற்றம் பற்றிப் பல்வேறு கதைகள்
மக்களிடையே வழக்கப்பட்டுள்ளன.
1.3.2
காரணக் கதைகள்
உலகில் உள்ள இயற்கை நிகழ்வுகள் மற்றும் இயற்கைப்
பொருட்கள் ஏன் அவ்வாறு நிகழ்கின்றன? ஏன் அவ்வாறு
இருக்கின்றன? என்னும் கேள்விகளுக்குக் காரணம் கூறுவதற்காக
உருவாக்கப்பட்டு மக்களிடையே வழங்கி வரும் கதைகளைக்
காரணக் கதைகள் எனலாம்.
வானம்
மிக உயரத்தில் இருப்பதற்கான காரணம் என்ன?
அணிலின் முதுகில் மூன்று கோடுகள் இருப்பதற்கான காரணம்
என்ன? குயில் ’அக்கா அக்கா’ என்று கூவுவதற்கான காரணம்
என்ன? என்பன போன்ற ஏராளமான வினாக்களுக்குக் காரணம்
கூறும் கதைகள் மக்களிடையே வழங்கப்படுகின்றன.
•
வானமும் உயரமும்
வானம் மிக உயரத்தில் இருப்பதற்கான காரணம்
கூறும் கதை
ஒன்று வருமாறு:
“முன்
ஒரு காலத்தில் வானம் பூமிக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது. மனிதர்களும்
மரம் செடி கொடிகளும் குட்டையா இருந்தன. அப்படியிருக்கும் பொழுது ஒரு
கிழவி தினந் தினம் மோரு வித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து
கொண்டிருந்தாள். தினமும் வானம் இடிந்து மோர்க்குடம் கவிழ்ந்துவிடும்.
இதனால் கிழவிக்குக் கோபம். ஒரு நாள் ‘என் மோர கொட்டி என் பொழப்பக்
கெடுக்கும் வானமே! நீ பூமியிலிருந்து எட்டு வண்டி நூலைப் போட்டாலும்
எட்டாத உயரத்துக்குப் போகணும். பத்து வண்டி நூலைப் போட்டாலும் பத்தாத
உயரத்துக்குப் போகணும்’ என்று சாபம் போட்டாள். (அதாவது எட்டு-பத்து
வண்டி நிறைய ஏற்றப்பட்ட நூலைப் பிரித்து நீட்டினால் எவ்வளவு தூரம்
வருமோ அவ்வளவு தூரம் மேலே செல்லவேண்டும் என்று சாபமிட்டாள்) அன்றையிலேருந்து
வானம் கண்ணுக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது” என்று வானத்தின்
உயரத்தைப் பற்றி ஒரு கதை வழங்குகிறது.
காட்சி
வானவெளிக்கு
எல்லை ஏதுமில்லை. இது இயற்கை. இவ்வாறு
அமைந்தற்குக் காரணம் இதுதான் என்று ஒரு காரணத்தைக்
கற்பிக்கிறது இக்கதை. மதுரை மாவட்டத்தில் வழங்கப்படும்
இக்கதையை, சி.பொன்னுத்தாய் என்பவர் பதிவு செய்துள்ளார்.
1.3.3
நீதிக் கதைகள்
வாழ்க்கையை
நெறிப்படுத்தும் நீதியை எடுத்துரைப்பதாக
அமையும் கதைகளை நீதிக் கதைகள் எனலாம். சான்றாகப்
பின்வரும் கதையைக் கூறலாம்.
காட்சி
“ஒரு
ஊரில் ஒரு ராசா இருந்தான். அவனுக்கு ஒரு பொண்ணு இருந்தாள். அவளுக்குப்
பாடம் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியரை நியமித்தான் ராசா. அந்த ஆசிரியருக்கு
அந்த பொண்ணு மேல விருப்பம். அந்த பொண்ணிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்தான்.
அவள் மறுத்தாள். அந்த ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா? ராசாகிட்ட
போயி உன் பொண்ணு ஜாதகத்தில் குற்றம் இருக்கிறது. அவளால் உனக்கும் இந்த
நாட்டுக்கும் ஆபத்து. இதுலேயிருந்து நீயும் நாடும் தப்பிக்கவேண்டுமானால்
அவளை ஒரு பொட்டியில வைத்து ஆற்றில் விட்டுவிடு என்றான். இதை நம்பின
ராசாவும் அப்படியே செய்துட்டான். பெட்டி ஆற்றில் மிதந்துகொண்டே வந்தது.
காட்டில் வேட்டையாடிக் கொண்டு இருந்த ஓர் இளவரசன் அந்தப் பொட்டியப்
பாத்து, எடுத்து திறந்து பாத்தான். அதில் ஓர் அழகான பொண்ணு இருந்தாள்.
அவளிடம் கேட்டு உண்மையைத் தெரிந்துகொண்டான். பின்னர் அவளைத் திருமணம்
செய்துகொண்டான். பின்னர் அவன் வேட்டையாடிய புலியைப் பெட்டியில அடைத்து
ஆற்றில் விட்டான். காட்டில் காத்துக்கொண்டிருந்த ஆசிரியர் பெட்டிய
கொண்டுபோய் ஒரு வீட்டில் வைத்தான். நல்லா அலங்காரம் செய்துகிட்டு கதவ
சாத்தி தாழ்பாள் போட்டான். இராசா மகளை அனுபவிக்கப் போகின்ற ஆசையில்
பெட்டியைத் திறந்தான். அடபட்டுக் கிடந்த புலி ஆசிரியர் மேல் பாய்ந்து
கொன்றது.“
ஆசிரியர்
தொழில் புனிதமானது. அத்தொழிலுக்குக் களங்கம்
ஏற்படும் வகையில் தப்பு செய்ய நினைப்பவன் அழிவான்
என்னும் நீதியை இக்கதை எடுத்துரைக்கிறது. இக்கதை
தமிழகத்தில் மட்டுமல்ல காஷ்மீரிலும் சில மாற்றங்களுடன்
வழங்கி வருகிறது.
1.3.4
நகைச்சுவைக் கதைகள்
கதையில்
நகைச்சுவை விஞ்சி இருக்கக் கூடிய கதைகளை
நகைச்சுவைக் கதைகள் எனலாம். ஒரு சான்று வருமாறு :
காட்சி
“ஒரு
ஊர்ல ஒரு குடியானவன் இருந்தான். அவன் தினமும் ஒரு சாமியாரை வீட்டுக்கு
அழைத்து வந்து சாப்பாடு போடுவான். அதற்குப் பின்னர்தான் அவன் சாப்பிடுவான்.
இது அவன் மனைவிக்குப் பிடிக்கவில்லை. இதைத் தடுத்து நிறுத்த நினைத்தாள்.
ஒரு நாள் ஒரு சாமியாரை அழைத்து வந்து வீட்டில் விட்டுவிட்டு சாப்பிட
இலை வாங்கப் போனான். சாமியார் விருந்தை எதிர்பார்த்து ஆசையோடு உட்கார்ந்திருந்தார்.
குடியானவன் மனைவி வீட்டில் இருந்த நெல்லு குத்துகிற உலக்கையைக் கழுவி,
விபூதி பூசி, மாலை போட்டு சாமியாரு பார்வையில் படுகிற மாதிரி வைத்தாள்.
சாமியாருக்குப் புரியவில்லை. ‘உலக்கைக்கு ஏன் மாலை போட்டு வைத்திருக்கிறாய்’
என்று கேட்டார். ‘எங்கள் வீட்டுக்காரர் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா’
என்று அவள் கேட்டாள். சாமியார் ‘இல்லை’ என்று சொன்னார்., அவள் உடனே
முகத்தை சோகமா வைத்துக்கொண்டு ‘எங்க வீட்டுக்காரர் தினம் ஒரு சாமியாரை
அழைத்துக்கொண்டு வந்து வயிறார சாப்பாடு போட்டு, இந்த உலக்கையால் நன்கு
அடித்து அனுப்புவார்; அவருக்கு அப்படியொரு வேண்டுதல்’ என்றாள். இதைக்
கேட்ட சாமியார் மெதுவாக நழுவி வீட்டை விட்டுப் போயிட்டார். அப்பொழுது
அவள் வீட்டுக்காரன் வீட்டுக்கு வந்தான். சாமியாரைக் காணோம். பெண்டாட்டியைக்
கூப்பிட்டு சாமியார் எங்கே என்று கேட்டான். ‘சாமியார் இந்த உலக்கையை
கேட்டார். உங்கள் அம்மா வைத்திருந்த உலக்கையாச்சே, நான் தரமுடியாது
என்று சொன்னேன். அவர் கோவித்துக்கொண்டு இப்பொழுதான் போனார்’ என்று
சொன்னாள். ‘சாமியார் கேட்டால் கொடுக்க வேண்டியதுதானே! உலக்கயைக் கொடு’
என்று உலக்கையை கையில் எடுத்துக்கொண்டு சாமியாரை நோக்கி ஒடினான். இவன்
உலக்கையோட வருவதைப் பார்த்த சாமியார் தன்னை அடிக்க வருவதாக நினைத்து
ஓடினான். அவருக்கு எப்படியாவது உலக்கையை கொடுத்துவிட எண்ணி இவன் துரத்த,
சாமியார் ஓடியே போயிட்டார்”.
இந்தக்
கதை நகைச்சுவையை ஏற்படுத்துவதைக் காணலாம்.
நகைச்சுவையின் ஊடே உழைக்காமல் சாப்பிடுவோரையும்
அவர்களுக்கு உணவு தருவோரையும் கேலி செய்வதாக
அமைவதையும் காணமுடிகிறது. உழைக்கும் சமுதாயத்தில்
உழைக்காதோர் கேலிக்குள்ளாவது இயல்புதானே?
1.3.5
பிற வகைக் கதைகள்
மேற்குறிப்பிட்டவைபோல, மேலும் சிலவகை கதைகள்
வழங்கப்படுகின்றன.
•
இடப்பெயர்வுக் கதைகள்
மக்கள் பல்வேறு காரணங்களுக்காக இடம் பெயர்ந்து கொண்டேயிருப்பர். அவர்களின்
இடப்பெயர்வு குறித்த நினைவுகள் கதைகளாக அவர்களிடையே வழங்கப்பட்டு வரும்.
இத்தகைய கதைகளை இடப்பெயர்வுக் கதைகள்
எனலாம். மக்களின் இடப்பெயர்வு குறித்த வாய்மொழி வரலாறுகளாகவும்
இத்தகைய கதைகளைக் கருதலாம்.
•
வரலாற்றுக் கதைகள்
வரலாற்றில் காணப்படும் அரசர்கள், தலைவர்கள், வீரர்கள், அவர்தம் அருஞ்செயல்கள்
குறித்த கதைகளும் மக்களிடையே வழக்கில் உள்ளன. இவை வரலாற்றை அடிப்படையாகக்
கொண்டவை. இத்தகைய கதைகளை வரலாற்றுக்
கதைகள் எனலாம்.
•
நம்பிக்கை விளக்கக் கதைகள்
மக்களிடையே பல்வேறு நம்பிக்கைகள், நோன்புகள் போன்றவை காணப்படுகின்றன.
இவற்றை விளக்கும் கதைகளை நம்பிக்கை
விளக்கக் கதைகள் என்று சுட்டலாம். நம்பிக்கை சார்ந்த
செயல்களை எவ்வாறு செய்யவேண்டும், அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நேரும்
என்பனவற்றை விளக்குவனவாக இக்கதைகள் அமையும்.
இங்கே
சுட்டப்பட்ட கதை வகைகளேயன்றி ஏராளமான பல
கதைகள் மக்களிடம் வழக்கில் உள்ளன என்பதை நினைவில்
கொள்ளவும்.
|