இளங்கீரனார்

3. பாலை
ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடுஞ் சினைப்
பொரி அரை வேம்பின் புள்ளி நீழல்,
கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்து,
கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்
5
வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச்
சுரன்முதல் வந்த உரன் மாய் மாலை
உள்ளினென் அல்லெனோ, யானே-உள்ளிய
வினை முடித்தன்ன இனியோள்
மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே?

முன் ஒரு காலத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் பின்னும் பொருள் கடைக் கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.-இளங்கீரனார்

62. பாலை
வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை
கந்து பிணி யானை அயர் உயிர்த்தன்ன
என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்து,
குன்று ஊர் மதியம் நோக்கி, நின்று, நினைந்து,
5
உள்ளினென் அல்லெனோ யானே-'முள் எயிற்று,
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்,
எமதும் உண்டு, ஓர் மதிநாட் திங்கள்,
உரறு குரல் வெவ் வளி எடுப்ப, நிழல் தப
உலவை ஆகிய மரத்த
10
கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது' எனவே?

முன் ஒரு காலத்துப்பொருள்வயிற் பிரிந்து வந்த தலைவன், பின்னும் பொருள்வலிக்கப்பட்ட நெஞ்சிற்குச் செலவு அழுங்குவித்தது.-இளங்கீரனார்

113. பாலை
உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர்சினைப்
புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசுங் காய்
கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம்
பெருங் காடு இறந்தும், எய்த வந்தனவால்-
5
'அருஞ் செயல் பொருட் பிணி முன்னி, யாமே
சேறும், மடந்தை!' என்றலின், தான் தன்
நெய்தல் உண்கண் பைதல் கூர,
பின் இருங் கூந்தலின் மறையினள், பெரிது அழிந்து,
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின்
10
இம்மென் பெருங் களத்து இயவர் ஊதும்
ஆம்பல்அம் குழலின் ஏங்கி,
கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே!

இடைச் சுரத்து ஆற்றானாய தலைவன் சொல்லியது.-இளங்கீரனார்

266. முல்லை
கொல்லைக் கோவலர் குறும்புனம் சேர்ந்த
குறுங் காற் குரவின் குவி இணர் வான் பூ
ஆடுடை இடைமகன் சூடப் பூக்கும்
அகலுள் ஆங்கண் சீறூரேமே;
5
அதுவே சாலும் காமம்; அன்றியும்,
எம் விட்டு அகறிர்ஆயின், கொன் ஒன்று
கூறுவல்-வாழியர், ஐய!-வேறுபட்டு
இரீஇய காலை இரியின்,
பெரிய அல்லவோ, பெரியவர் நிலையே?

தலைமகனைச் செலவுடன்பட்டது; கடிநகர் வரைப்பில் கண்டு மகிழ்ந்த தலைமகற்குத் தோழி 'நும்மாலே ஆயிற்று' என்று சொல்லியதூஉம் ஆம்.-கச்சிப்பேட்டு இளந்தச்சனார்

308. பாலை
செல விரைவுற்ற அரவம் போற்றி,
மலர் ஏர் உண்கண் பனி வர, ஆயிழை-
யாம் தற் கரையவும், நாணினள் வருவோள்,
வேண்டாமையின் மென்மெல வந்து,
5
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி,
வெறி கமழ் துறு முடி தயங்க, நல் வினைப்
பொறி அழி பாவையின் கலங்கி, நெடிது நினைந்து,
ஆகம் அடைதந்தோளே: அது கண்டு,
ஈர் மண் செய்கை நீர் படு பசுங் கலம்
10
பெரு மழைப் பெயற்கு ஏற்றாங்கு, எம்
பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே.

நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்ட தலைமகன், தலைமகளை எய்தி ஆற்றானாய், நெஞ்சினைச் சொல்லிச் செலவு அழுங்கியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்

346. பாலை
குண கடல் முகந்து, குடக்கு ஏர்பு இருளி,
தண் கார் தலைஇய நிலம் தணி காலை,
அரசு பகை நுவலும் அரு முனை இயவின்,
அழிந்த வேலி அம் குடிச் சீறூர்
5
ஆள் இல் மன்றத்து, அல்கு வளி ஆட்ட,
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை,
இன்று, நக்கனைமன் போலா-என்றும்
நிறையுறு மதியின் இலங்கும் பொறையன்
பெருந் தண் கொல்லிச் சிறு பசுங் குளவிக்
10
கடி பதம் கமழும் கூந்தல்
மட மா அரிவை தட மென் தோளே?

பொருள்வயிற் பிரிந்த தலைமகன் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-எயினந்தை மகன் இளங்கீரனார்