நொச்சி

115. முல்லை
மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர்,
அன்னையும் சிறிது தணிந்து உயிரினள்; 'இன் நீர்த்
தடங் கடல் வாயில் உண்டு, சில் நீர்' என,
5
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ,
கார் எதிர்ந்தன்றால், காலை; காதலர்
தவச் சேய் நாட்டர்ஆயினும், மிகப் பேர்
அன்பினர்-வாழி, தோழி!-நன் புகழ்
10
உலப்பு இன்று பெறினும் தவிரலர்;
கேட்டிசின் அல்லெனோ, விசும்பின் தகவே?

பிரிவிடை ஆற்றாளாய தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறுத்தியது.

184. பாலை
ஒரு மகள் உடையேன் மன்னே; அவளும்
செரு மிகு மொய்ம்பின் கூர்வேற் காளையொடு
பெரு மலை அருஞ் சுரம் நெருநல் சென்றனள்;
'இனியே, தாங்கு நின் அவலம்' என்றிர்; அது மற்று
5
யாங்ஙனம் ஒல்லுமோ? அறிவுடையீரே!
உள்ளின் உள்ளம் வேமே-உண்கண்
மணி வாழ் பாவை நடை கற்றன்ன என்
அணி இயற் குறுமகள் ஆடிய
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே.

மனை மருட்சி

200. மருதம்
கண்ணி கட்டிய கதிர அன்ன
ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி,
யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்,
'சாறு' என நுவலும் முது வாய்க் குயவ!
5
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ-
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப்
பொய்கை ஊர்க்குப் போவோய்ஆகி,
'கை கவர் நரம்பின் பனுவற் பாணன்
செய்த அல்லல் பல்குவ-வை எயிற்று,
10
ஐது அகல் அல்குல் மகளிர்!-இவன்
பொய் பொதி கொடுஞ் சொல் ஓம்புமின்' எனவே.

தோழி தலைமகளது குறிப்பு அறிந்து, வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, குயவனைக் கூவி, 'இங்ஙனம் சொல்லாயோ?' என்று குயவற்குச் சொல்லியது.-கூடலூர்ப் பல் கண்ணனார்

267. நெய்தல்
'நொச்சி மா அரும்பு அன்ன கண்ண
எக்கர் ஞெண்டின் இருங் கிளைத் தொழுதி,
இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர்
உணங்கு தினை துழவும் கை போல், ஞாழல்
5
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன்-
தன்னொடு புணர்த்த இன் அமர் கானல்,
தனியே வருதல் நனி புலம்பு உடைத்து' என,
வாரேன்மன் யான், வந்தனென் தெய்ய;
சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப,
10
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக்குரல்,
'இவை மகன்' என்னா அளவை,
வய மான் தோன்றல் வந்து நின்றனனே.

தோழி காப்புக் கைமிக்குக் காமம் பெருகிய காலத்துச் சிறைப்புறமாகச் சொல்லியது;வரைவு கடாயதூஉம் ஆம்.-கபிலர்

293. பாலை
மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடி,
பலிக் கள் ஆர் கைப் பார் முது குயவன்
இடு பலி நுவலும் அகன்தலை மன்றத்து,
விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப்
5
பூங் கண் ஆயம் காண்தொறும், எம்போல்,
பெரு விதுப்புறுகமாதோ-எம் இற்
பொம்மல் ஓதியைத் தன் மொழிக் கொளீஇ,
கொண்டு உடன் போக வலித்த
வன்கண் காளையை ஈன்ற தாயே.

தாய் மனை மருண்டு சொல்லியது; அவரிடத்தாரைக் கண்டு சொல்லியதூஉம் ஆம்.- கயமனார்

305. பாலை
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண் வரத் தோன்ற,
தமியே கண்ட தண்டலையும் தெறுவர,
5
நோய் ஆகின்றே-மகளை!-நின் தோழி,
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி,
உருப்பு அவிர் அமையத்து, அமர்ப்பனள் நோக்கி,
இலங்கு இலை வெள் வேல் விடலையை
10
விலங்கு மலை ஆர் இடை நலியும்கொல் எனவே.

நற்றாய், தோழிக்குச் சொல்லியது; மனை மருட்சியும் ஆம்.-கயமனார்