குன்றியனார்

50. மருதம்
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

உரை

கிழவற்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது. - குன்றியனார்

51. நெய்தல்
கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கும் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர்வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

உரை

வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவுகூறியது - குன்றியனார்

117. நெய்தல்
மாரி ஆம்பல் அன்ன கொக்கின்
பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு
கண்டல் வேர் அளைச் செலீஇயர், அண்டர்
கயிறு அரி எருத்தின், கதழும் துறைவன்
வாராது அமையினும் அமைக!
சிறியவும் உள ஈண்டு, விலைஞர் கைவளையே.

உரை

வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகட்குத் தோழி சொல்லியது. - குன்றியனார்

238. மருதம்
பாசவல் இடித்த கருங் காழ் உலக்கை
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி,
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும்
தொண்டி அன்ன என் நலம் தந்து,
கொண்டனை சென்மோ-மகிழ்ந!-நின் சூளே.

உரை

தலைமகன் பரத்தையின் மறுத்தந்து, வாயில் வேண்டித் தோழியிடைச் சென்று, தெளிப்பான் புக்காற்குத் தோழி சொல்லியது. - குன்றியன்

301. குறிஞ்சி
முழவு முதல் அரைய தடவு நிலைப் பெண்ணைக்
கொழு மடல் இழைத்த சிறு கோற் குடம்பைக்
கருங் கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப் பெடை அகவும் பானாட் கங்குல்,
மன்றம் போழும் இன் மணி நெடுந் தேர்
வாராதுஆயினும், வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால்-தோழி!-என் கண்ணே.

உரை

வரைவிடை வைப்ப, 'ஆற்றகிற்றியோ?' என்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது.- குன்றியன்

336. குறிஞ்சி
செறுவர்க்கு உவகை ஆக, தெறுவர,
ஈங்கனம் வருபவோ?-தேம் பாய் துறைவ!-
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக்
கடு மா நெடுந் தேர் நேமி போகிய
இருங் கழி நெய்தல் போல,
வருந்தினள், அளியள்-நீ பிரிந்திசினோளே,

உரை

தலைமகன் இரவுக்குறி நயந்தானைத் தோழி சொல்லியது மறுத்தது. - குன்றியன்