|
|
விரைப் பரி வருந்திய வீங்கு செலல்இளையர் |
|
அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ, |
|
வேண்டு அமர் நடையர், மென்மெல வருக! |
|
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு |
5 |
ஏமதி, வலவ, தேரே! உதுக் காண்- |
|
உருக்குறு நறு நெய் பால் விதிர்த்தன்ன |
|
அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் |
|
காமரு தகைய கானவாரணம் |
|
பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் |
10 |
புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி, |
|
நாள் இரை கவர மாட்டி, தன் |
|
பேடை நோக்கிய பெருந்தகு நிலையே! |
உரை |
|
வினை முற்றி மீள்வான்தேர்ப்பாகற்குச் சொல்லியது.-மருதன் இளநாகனார்
|
|
கொடிச்சி காக்கும் அடுக்கற் பைந்தினை |
|
முந்து விளை பெருங் குரல் கொண்ட மந்தி |
|
கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி, |
|
அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு, தன் |
5 |
திரை அணற் கொடுங் கவுள் நிறைய முக்கி, |
|
வான் பெயல் நனைந்த புறத்த, நோன்பியர் |
|
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் |
|
வந்தனன்; வாழி-தோழி!-உலகம் |
|
கயம் கண் அற்ற பைது அறு காலை, |
10 |
பீளொடு திரங்கிய நெல்லிற்கு |
|
நள்ளென் யாமத்து மழை பொழிந்தாங்கே. |
உரை |
|
வரைவு மலிந்த தோழி, தலைமகட்குச் சொல்லியது.
|
|
தொடி பழி மறைத்தலின், தோள்உய்ந்தனவே; |
|
வடிக் கொள் கூழை, ஆயமோடு ஆடலின், |
|
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே; கடிக் கொள |
|
அன்னை காக்கும் தொல் நலம் சிதைய, |
5 |
காண்தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் |
|
முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் |
|
சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் |
|
தெண் நீர் மலரின் தொலைந்த |
|
கண்ணே காமம் கரப்பு அரியவ்வே! |
உரை |
|
தலைவி துயர் ஆற்றாமை உணர்ந்த தோழி வரைவு கடாயது.-கணக்காயனார்
|
|
''பார் பக வீழ்ந்த வேருடை விழுக்கோட்டு |
|
உடும்பு அடைந்தன்ன நெடும் பொரி விளவின், |
|
ஆட்டு ஒழி பந்தின், கோட்டு மூக்கு இறுபு, |
|
கம்பலத்தன்ன பைம் பயிர்த் தாஅம் |
5 |
வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆர் இடைச் |
|
சேறும், நாம்'' எனச் சொல்ல-சேயிழை!- |
|
''நன்று'' எனப் புரிந்தோய்; நன்று செய்தனையே; |
|
செயல்படு மனத்தர் செய்பொருட்கு |
|
அகல்வர், ஆடவர்; அது அதன் பண்பே. |
உரை |
|
பொருட்பிரிவுக்கு உடன்பட்ட தோழியைத் தலைவி உவந்து கூறியது. -குன்றுகிழார் மகனார் கண்ணத்தனார் கணக்காயனார்
|
|
அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்தன்ன |
|
செவ் வரி இதழ சேண் நாறு பிடவின் |
|
நறுந் தாது ஆடிய தும்பி, பசுங் கேழ்ப் |
|
பொன் உரை கல்லின், நல் நிறம் பெறூஉம் |
5 |
வள மலை நாடன் நெருநல் நம்மொடு |
|
கிளை மலி சிறு தினைக் கிளி கடிந்து அசைஇ, |
|
சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன்; பெயர்ந்தது |
|
அல்லல் அன்று அது-காதல் அம் தோழி!- |
|
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா |
10 |
வண்டு ஓரன்ன அவன் தண்டாக் காட்சி |
|
கண்டும், கழல் தொடி வலித்த என் |
|
பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே! |
உரை |
|
தலைமகளைத் தோழி குறை நயப்புக் கூறியது.- பேரி சாத்தனார்
|
|
நோகோ யானே; நெகிழ்ந்தன வளையே- |
|
செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை |
|
விண்டுப் புரையும் புணர் நிலை நெடுங் கூட்டுப் |
|
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய, |
5 |
சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழுங் காய் |
|
முட முதிர் பலவின் அத்தம், நும்மொடு |
|
கெடு துணை ஆகிய தவறோ?-வை எயிற்று, |
|
பொன் பொதிந்தன்ன சுணங்கின், |
|
இருஞ் சூழ் ஓதி, பெருந் தோளாட்கே. |
உரை |
|
தலைவி பிரிவு உணர்ந்து வேறுபட்டமை சொல்லி, தோழி செலவு அழுங்குவித்தது.-சாத்தந்தையார்
|
|
நீயும் யானும், நெருநல், பூவின் |
|
நுண் தாது உறைக்கும் வண்டினம் ஓப்பி, |
|
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் |
|
கழி சூழ் கானல் ஆடியது அன்றி, |
5 |
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை; உண்டு எனின், |
|
பரந்து பிறர் அறிந்தன்றும்இலரே-நன்றும் |
|
எவன் குறித்தனள் கொல், அன்னை?-கயந்தோறு |
|
இற ஆர் இனக் குருகு ஒலிப்ப, சுறவம் |
|
கழி சேர் மருங்கின் கணைக் கால் நீடி, |
10 |
கண் போல் பூத்தமை கண்டு, ''நுண் பல |
|
சிறு பாசடைய நெய்தல் |
|
குறுமோ, சென்று'' எனக் கூறாதோளே. |
உரை |
|
சிறைப்புறமாகத்தோழி செறிப்பு அறிவுறீஇயது.-குடவாயிற் கீரத்தனார்
|
|
என் கைக் கொண்டு தன் கண்ஒற்றியும், |
|
தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும். |
|
அன்னை போல இனிய கூறியும், |
|
கள்வர் போலக் கொடியன்மாதோ- |
5 |
மணி என இழிதரும் அருவி, பொன் என |
|
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து, |
|
ஆடு கழை நிவந்த பைங் கண் மூங்கில் |
|
ஓடு மழை கிழிக்கும் சென்னி, |
|
கோடு உயர் பிறங்கல், மலைகிழவோனே! |
உரை |
|
பிரிவின்கண்ஆற்றாளாகிய தலைவிக்குத் தோழி சொல்லியது; குறை நயப்பும் ஆம்.-முதுகூற்றனார்
|
|
நின்ற வேனில் உலந்த காந்தள் |
|
அழல் அவிர் நீள் இடை, நிழலிடம் பெறாஅது, |
|
ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்தென, |
|
மான்ற மாலை, வழங்குநர்ச் செகீஇய, |
5 |
புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி |
|
யாங்கு வல்லுநள்கொல்தானே-யான், ''தன் |
|
வனைந்து ஏந்து இள முலை நோவகொல்!'' என |
|
நினைந்து, கைந்நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் |
|
பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ, |
10 |
வெய்ய உயிர்க்கும் சாயல், |
|
மை ஈர் ஓதி, பெரு மடத்தகையே? |
உரை |
|
மகள்போக்கிய தாய்சொல்லியது.- பூதனார்
|
|
கண்டனென்-மகிழ்ந!-கண்டு எவன்செய்கோ?- |
|
பாணன் கையது பண்புடைச் சீறியாழ் |
|
யாணர் வண்டின் இம்மென இமிரும், |
|
ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின் |
5 |
மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர் |
|
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி- |
|
கால் ஏமுற்ற பைதரு காலை, |
|
கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி, உடன் வீழ்பு, |
|
பலர் கொள் பலகை போல- |
10 |
வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே. |
உரை |
|
பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன், ''யாரையும் அறியேன்'' என்றாற்குத் தோழி சொல்லியது.-கொற்றனார்
|
|