தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

tamilnadu_temples_new

அருள்மிகு நன்னிலம் மதுவனேஸ்வரர் திருக்கோயில்

  • கோவில் விவரங்கள்

  • சிறப்புகள்

  • செல்லும் வழி மற்றும் வரைபடம்

வேறு பெயர்கள் :

மதுவனேஸ்வரர், கல்யாண சுந்தரர், பிரகதீஸ்வரர், பிரகாசநாதர்

ஊர் :

நன்னிலம்

வட்டம் :

நன்னிலம்

மாவட்டம் :

திருவாரூர்

சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :

சைவம்-சிவபெருமான்

மூலவர் பெயர் :

மதுவனேஸ்வரர்

உலாப் படிமம் பெயர் :

கல்யாணசுந்தரர்

தாயார் / அம்மன் பெயர் :

மதுவனநாயகி

தலமரம் :

வில்வம்

திருக்குளம் / ஆறு :

பிரம்ம தீர்த்தம், சூல தீர்த்தம்

ஆகமம் :

சிவாகமம்

பூசைக்காலம் :

காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்

திருவிழாக்கள் :

திருக்கார்த்திகை, வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை ஆகிய நாட்களில் இறைவன் திருவீதியுலா உண்டு. ஆடி சுவாதியில் சுந்தரருக்கு குருபூஜை நடைபெறுகிறது.

தலவரலாறு :

இந்திரன் முதலான தேவர்கள் விருத்திராசுரனால் துன்புறுத்தி துரத்தப்பட்டனர். தேவர்கள் பயந்து கொண்டு பூமிக்கு வந்தனர். இயற்கையழகும், நீர்வளமும் நிறைந்த நன்னிலத்தில் உள்ள இறைவனை வழிபட்டு வந்தனர். விருத்திராசுரன் தேவர்களை தேடி வர தூதர்களை அனுப்பினான். தேவர்களோ தேனீக்களின் வடிவங்கொண்டு ஆங்காங்கே கோயிலின் பகுதிகளில் மறைந்து கொண்டு அன்றாடம் மலரும் மலர்களின் தேனால் இறைவனை வழிபட்டு மீண்டும் சக்திபெற்று அசுரனை வென்று தேவலோகத்தை மீண்டும் பெற்றனர். இன்றும் தேன்கூடு இக்கோயிலில் யாருக்கும் துன்புறுத்தாமல் அடைகாத்து காணப்படுகின்றது.

பாதுகாக்கும் நிறுவனம் :

இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.

அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :

திருவாஞ்சியம், திருக்கொண்டீச்சுரம், திருமீயச்சூர்

சுருக்கம் :

சோழமன்னன் கோச்செங்கணான் காவிரிக்கரையின் இருமருங்கிலும் கட்டிய 70 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. திருக்குறுந்தொகையிலும், திருத்தாண்டகத்திலும் அப்பர் பெருமான் நன்னிலம் கோயிலைக் கூறியுள்ளார். சுந்தரர் நன்னிலம் பெருங்கோயில் நயந்தவனே என்று இக்கோயில் இறைவனை தமது பதிகத்தில் குறிப்பிடுகிறார். இயற்கை எழில் சூழ்ந்த நன்னிலம் நீர்வளத்திலும் சிறந்து விளங்கிய காவிரித்துறையாகும். இந்த நல்ல நிலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனைச் சுற்றி சோலைகள் அமைந்துள்ளன. அச்சோலைகளில் உள்ள மலர்களைச் சேகரிக்கும் வண்டுகள் இக்கோயிலில் கூடுகட்டி வாழ்கின்றன. தேன் சூழ்ந்த சோலையின் நடுவில் வீற்றிருப்பதாலேயே இறைவன் மதுவனேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். மதுவன நாயகி என்று அம்மை அழைக்கப்படுகிறார். சுந்தரர் தம் திருப்பதிகத்தில் நன்னிலம் பெருங்கோயில் என்று இதன் பரப்பளவை சுட்டிக் காட்டுகிறார். இக்கோயில் மாடக்கோயில் வகையைச் சார்ந்தது எனவே சிறு குன்றின் மீது இறைவன் வீற்றிருக்கும் நிலையை இது காட்டுகிறது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கோயிலில் தற்போது உள்ள சிற்பங்கள் யாவும் காலத்தால் பிற்பட்டவை. பல்லவர் காலத்திலிருந்து இக்கோயில் மண்டளியாக இருந்து பின் சோழர் காலத்தில் கற்றளியாக்கப்பட்டிருக்க வேண்டும். சோழர்களின் பல கொடைகளை இக்கோயிலை பெற்றிருக்க வேண்டும்.

காலம் / ஆட்சியாளர் :

கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு

கல்வெட்டு / செப்பேடு :

இரண்டு வரி சிதிலமடைந்த துண்டு பொருள் விளங்காத கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் உள்ளது. இக்கோயில் மடப்பள்ளியில் உள்ள கல்லில் உள்ள ஒரு கல்வெட்டில் கி.பி.10-ஆம் நூற்றாண்டில் நாரண்ணன் என்பவர் நன்னிலம் கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க பன்னிரண்டு கழஞ்சு பொன் கொடுத்த செய்தியும், இதனை மூன்று பேர் பெற்றுக் கொண்டு வட்டிக்கு விளக்கெரிக்க ஒப்புக் கொண்ட செய்தியும் கூறப்பட்டுள்ளது. மற்றொரு கல்வெட்டு மூலவர் கருவறையில் உள்ள தூணில் சிதைந்த நிலையில் உள்ளது.

சுவரோவியங்கள் :

இல்லை

சிற்பங்கள் :

கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவரில் உள்ள கோட்டங்களில் தென்பகுதியில் நர்த்தன விநாயகரும், தென்முகக்கடவுளும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கில் நான்முகனும், துர்க்கையும் அமைந்துள்ளனர். மதுவனேஸ்வரர் கருவறையில் இலிங்க வடிவில் உள்ளார். மதுவன நாயகி நின்ற நிலை சிற்பமாக நான்கு திருக்கரங்கள் கொண்டு திகழ்கிறார். சண்டேசர், சனீஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சிற்பங்கள் உள்ளன.

கோயிலின் அமைப்பு :

கோயிலின் உள் நடுவில் அமைந்த உயர்ந்த மாடத்தில் மதுவனேஸ்வரர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் இறைவன் இலிங்க வடிவில் உள்ளார். கருவறை சதுர வடிவமானது. கருவறையைச் சுற்றி ஒரு திருச்சுற்றும், நாற்புறமும் “திருநீற்றுச்சுவர்“ என்று போற்றப்படும் 12 அடி உயரமுள்ள மதிற்சுவரும் அமைந்துள்ளன. மதிற்சுவருக்கும், மூலட்டானத்திற்கும் இடையே வெளிச்சுற்று அமைந்துள்ளது. கோயில் 270 அடி நீளமும், 135 அடி அகலமும் கொண்ட பரப்பில் அமைந்துள்ளது. சோலைகள் சுற்றிலும் சூழ்ந்த நிலையில் கிழக்கு நோக்கி இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கிழக்குக் கோபுரம் கயிலைக்காட்சியையும், சுந்தரர் தேவாரம் பாடும் அழகுக் காட்சியையும் கொண்டு விளங்குகிறது. இக்கோயிலின் மதில் சுவரின் தென்பகுதியில் கூத்தாடும் விநாயகர், அகத்தியர் சிற்பங்கள் உள்ளன. ஐந்து கலசங்கள் கொண்ட கிழக்கு கோபுர வாசல் வழியே உள் நுழைந்தவுடன் முன்னே கணபதி காட்சி தருகிறார். கொடிமரமும், நந்தியும் அமைந்துள்ளன. கருவறையை சுற்றியுள்ள திருச்சுற்றில் வலது பக்கத்தில் சோமாஸ்கந்தர் தனிக்கோயிலாக காட்சி தருகிறார். கருவறை விமானத்தின் வெளிப்புறச் சுவர்களில் உள்ள கோட்டங்களில் சிற்பங்கள் அமைந்துள்ளன. மதுவனேஸ்வரர் கருவறையை தொடர்ந்து படிகள் இறங்கினால் பிரம்மபுரீசுவரர் தனிக்கோயிலும், அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளன.வடமேற்கில் கஜலெட்சுமியும், வடதிசையில் தெற்குநோக்கி சண்டீசரும் தனிக்கோயில் கொண்டுள்ளனர். அதனை அடுத்து தென்திசையில் மதுவனநாயகி கோயில் கொண்டுள்ளார்.

அமைவிடம் :

அருள்மிகு மதுவனேஸ்வரர் கோயில், நன்னிலம்-610 105, திருவாரூர்

தொலைபேசி :

9442682346, 9943209771

இணையதளம் :

மின்னஞ்சல் :

கோவில் திறக்கும் நேரம் :

காலை 7.00-12.00 முதல் மாலை 4.00-8.00 வரை

செல்லும் வழி :

திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 16 கி.மீ. தொலைவில் நன்னிலம் அமைந்துள்ளது. நன்னிலம் நகரின் மத்தியில் இக்கோயில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள பேருந்து நிலையம் :

நன்னிலம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :

நன்னிலம், மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம் :

சென்னை, திருச்சி

தங்கும் வசதி :

திருவாரூர் விடுதிகள்
சாலை வரைபடம்
புதுப்பிக்கபட்ட நாள் : 07-12-2016 18:19:47(இந்திய நேரம்)