தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.2 இரட்சணிய யாத்திரிகம்

  • 1.2 இரட்சணிய யாத்திரிகம்

    இரட்சணிய யாத்திரிகப் பெருமை

    கிறித்துவத் தமிழ்க் காப்பியங்களுள் சிறப்பு வாய்ந்த காப்பியம் இரட்சணிய யாத்திரிகம். ஆங்கில நாட்டவரான ஜான் பனியன் என்பவர் எழுதிய திருப்பயணியின் முன்னேற்றம் (PILGRIM’S PROGRESS) என்னும் நூலைத் தழுவித் தமிழ்ப் பண்பாடு ஒரு சிறிதும் தவறாமல் எழுதப்பட்ட நூல் இரட்சணிய யாத்திரிகம்.

    காப்பியம் பிறந்த கதை

    இயேசு பெருமானின் திருவருளால் ஆட்கொள்ளப்பெற்று, கிறித்துவம் தழுவிய கிருஷ்ணபிள்ளை, யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் முதுமொழிக்கு ஏற்ப, தமது இறை அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள விரும்பினார். மேலும் இயேசு பெருமானின் பெருமையைப் புகழ்ந்து, அவரைப் போற்ற வேண்டும் என்ற விருப்பமும் அவர் உள்ளத்தில் எழுந்தது. இந்தப் பின்னணியில்தான் அவர், திருப்பயணியின் முன்னேற்றம் என்ற ஆங்கில நூலைப் படிக்க நேர்ந்தது. ஜான் பனியன் எனும் மேலை நாட்டு இறையடியார், தமது சிறைவாசத்தின்போது தாம் கண்ட கனவின் விளக்க நூலான திருப்பயணியின் முன்னேற்றம் என்ற ஆங்கில நூலை எழுதினார். இந்த நூல் கவிஞர் வாழ்ந்த காலத்தில் பெரும் புகழ் பெற்று, பலராலும் பாராட்டப்பட்டது. இந்நூலின் கருத்தாலும் செய்தியாலும் பெரிதும் கவரப்பட்ட கவிஞர், இந்நூலைத் தழுவித் தமிழில் காப்பியம் ஒன்று இயற்ற முற்பட்டார். அதுவே இரட்சணிய யாத்திரிகம்.

    இனி, இக்காப்பியத்தின் அமைப்பு, காப்பியத்தின் கருப்பொருள், காப்பியம் எழுதப்பட்ட நோக்கம், காப்பியத்தில் கூறப்படும் செய்தி அல்லது கதை, தமிழ்க் காப்பிய இலக்கணம் இந்நூலில் பொருந்தியுள்ள தன்மை முதலிய செய்திகளைக் காண்போம். இதனால் இக்காப்பியப் பண்புகளை நாம் ஒருவாறு அறிய முடியும்.

    1.2.1 காப்பிய அமைப்பு

    இரட்சணிய யாத்திரிகம் சிறப்புப் பாயிரம் எனும் பகுதியோடு தொடங்குகிறது. இப்பகுதியில் கடவுள் வாழ்த்து, நூல் இயற்றக் காரணம், நூலின் வழி, அதன் எல்லை, நுதலிய பொருள், நூற்பயன், யாப்பு, பதிகம் என்பவற்றுடன் சிறப்புப் பாயிரத்தின் பாடல்கள் முடிகின்றன. அதையடுத்து மூன்று பாடல்கள் இடம்பெறுகின்றன. நூலில் 3622 பாடல்கள் உள்ளன. இந்த நூல் ஐந்து பருவங்களாகவும் 47 படலங்களாகவும் பகுக்கப்பட்டுள்ளது. முதலாவது வரும் ஆதி பருவத்தில் 19 படலங்களும் (1097 பாடல்கள், தேவாரம் 31), தொடர்ந்து வரும் குமார பருவத்தில் 4 படலங்களும் (714 பாடல்கள், தேவாரம் 23), நிதான பருவத்தில் 11 படலங்களும் (803 பாடல்கள், தேவாரம் 10), ஆரணிய பருவத்தில் 10 படலங்களும் (739 பாடல்கள், தேவாரம் 12), இரட்சணிய பருவத்தில் 3 படலங்களும் (250 பாடல்கள், தேவாரம் 48), முடிவுரையில் 20 தேவாரங்களும் அமைந்துள்ளன. சிறப்புரை 19 (16+3) பாடல்களாகும்.

    பருவம் என்பது பெரும் பிரிவு, படலம் அப்பருவத்தினுள் அமையும் சிறுபிரிவு. எச்.ஏ. கிருஷ்ண பிள்ளை இந்த நூலில், பண்ணோடு பாடப் பெற்ற சைவத் தேவாரப் பாடல்களை அடியொற்றி 144 பாடல்கள் இயற்றியிருக்கிறார். தேவாரப் பண்ணையும், நடையையும் கையாண்டு தேவாரம் என்னும் தலைப்பிலேயே பருவந்தோறும் இடையிடையே அந்த இசைப் பாடல்களை அமைத்துள்ளார். இந்த நூலில், கீழ்க்குறிப்பிடுமாறு அப்பாடல்கள் அமைந்துள்ளன.


    ஆதி பருவம்

    தேவாரம்

    பண்

    சுமை நீங்கு படலம்

    11

    திருநாமப்பதிகம்
    காந்தாரம்
    ஜீவ புஷ்பகரணிப் படலம்

    10

    விசுவாசக் காட்சி
    காந்தாரம்
    உபாதி மலைப் படலம்
    10
    - - - - - - -
    இந்தளம்
    31

    குமார பருவம்

    விசிராந்திப் படலம்
    13
    கையடைப்பதிகம்
    தக்கராகம்
    10
    காலைத்துதி
    காந்தாரம்
    23

    நிதான பருவம்

    சிறைப்படு படலம்
    10
    வேட்கையின்
    விதும்பல்

    திருத்
    தாண்டகம்

    10

    ஆரணிய பருவம்

    விடாத கண்டப் படலம்
    12
    பிழை நினைந்திரங்கல்

    நேரிசை

    12

    இரட்சணிய பருவம்

    இகபர சந்திப் படலம்
    12

    கடைக்கணி

    இந்தளம்

    11
    போற்றித்திருவிருத்தம்
    பூர்வ சுருதி
    25

    உத்தர சுருதி

    48

    முடிவுரை

    10
    உண்மை வற்புறுத்தல்

    பழம்
    பஞ்சுரம்

    10
    அந்திப்பலி
    20
     
    144
     
     

    இவ்வாறாக, இந்நூலில் ஆங்காங்கே 144 தேவாரப் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    1.2.2 காப்பிய நோக்கம்

    காப்பியம் எழுதப்பட்டதன் நோக்கத்தை ஆசிரியரே நூலின் சிறப்புப் பாயிரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    நோக்கம்

    ‘இந்நூல் ஏதோ வெறும் பொழுதுபோக்குக்காகச் செய்யப்பட்ட புதுமையான கதையுமன்று; பாம்பின் நஞ்சை ஓர் அழகிய செப்புப் பாத்திரத்தில் வைத்துக் கொடுப்பதைப் போல, சிற்றின்பச் செய்திகளைக் கொடுக்கின்ற நூலும் அல்ல. இது மனிதச் சமுதாயத்துக்கு ஆத்தும மீட்பை வழங்குகிற அரிய மருந்து போன்ற படைப்பாகும்’ என்று இக்காப்பியத்தைத் தாம் இயற்றிய நோக்கத்தைக் கவிஞர் விளக்கியுள்ளார்.

    வெற்று நேரப் போக்காய்ப் புகல்வினோதமு மன்று
    புற்ற ராவிடம் பொதிந்த செப்பெனக் கவிபுனைந்து
    சிற்றின் பத்திறம் திருத்திய காதையு மன்று
    மற்றிது ஆத்தும ரட்சணை வழங்குமோர் மருந்தாம்

    (சிறப்புப் பாயிரம் 14)

    என்பது இக்கருத்தமைந்த கவிஞரின் பாடலாகும்.

    (வினோதம் = புதுமை; புற்றரா = புற்றில் உள்ள பாம்பு; ரட்சணை = மீட்பு)

    பொதுவாக, காப்பியங்களில் வாசகர்களுக்குச் சுவையூட்டுவதற்காக, சிற்றின்பச் சுவை வளர்க்கும் செய்திகள் கூறப்படுவதுண்டு. ஆனால், கவிஞர் இந்த நூலில் அப்படிப்பட்ட செய்திகளை விலக்கி, இறைவனை அடையும் நெறியையே முக்கியப்படுத்தும்வண்ணம் பாடியுள்ளார்.

    புண்ணியப் பயணப் படகு

    மேலும், தீயவழியில் சென்று, தீய செயல்களாகிய கடலில் மூழ்கி அழியும் மக்களை, அழிவில்லாத நிலைத்த வாழ்வை நல்கும் இறைவனின் வீட்டுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு ‘புண்ணியத் தனி மரக்கலம்’ இது என்றும் தம் நூலை அவர் வருணித்துள்ளார். இவ்வாறு கவிஞர் இந்நூலைப் படைத்ததன் நோக்கத்தை நன்கு வெளிப்படுத்தியுள்ளார்.

    தீமைகளும் குற்றங்களும் மலிந்த தீயவாழ்வை விட்டு அனைத்து நன்மைகளின் வடிவமாக விளங்கும் இறைவனைச் சேர்ந்து வாழவேண்டும் என்ற ஆசை மனிதர்கள் எவருக்கும் பொதுவாகவே உண்டு. ஆனால் அதற்கான வழியைத்தான் மனிதர்கள் பின்பற்றுவதில்லை. அவ்வழியைக் காட்டக்கூடிய நூல் இது என்று கவிஞர் இப்பாடலில் விளக்கியுள்ளார்.

    1.2.3 மூல நூல்கள்

    பல்வேறு பாவச் செயல்களிலும் அக்கிரமங்களிலும் ஈடுபட்டு அமைதி இல்லாமல் வாழும் ஒருவன், இறைவனின் நற்செய்தியை ஏற்று அவரது திருநாட்டைச் சென்று சேர்வதற்காக மேற்கொள்ளும் புனிதப் பயணத்தை ஜான் பனியனின் மூல நூல் விவரிக்கிறது.

    புனிதப் பயணத்தில் செல்பவன், சாத்தானும் பிறரும் ஏற்படுத்தும் பல்வேறு தடைகளையும் பிற சோதனைகளையும் கடந்து செல்கிறான். இது மெய்வழியைக் காண, அடைய விரும்பும் அனைத்து மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டமும் ஆகும். இது ஓர் ஆன்மிகப் பயணம், புனிதப் போர். இப்போரில் வெற்றி பெற்று இறைவனின் திருவடிகளையும் திருநாட்டையும் அடைதற்குரிய வழிமுறைகள், விவிலியத் திருமறை (The Bible)யிலும் விவரிக்கப்படுகின்றன. ஆகவேதான், இவ்விரு நூல்களின் கருத்துகளையும் தழுவி, கிருஷ்ணபிள்ளை இக்காப்பியத்தை இயற்றியுள்ளார்.

    1.2.4 காப்பியக் கதை

    ஐந்து பருவங்களில் காப்பியம் கூறிச் செல்லும் கதையை இங்குச் சுருங்கக் காண்போம்.

    ஆன்மிகனின் மனக்கலக்கம்

    இரட்சணிய யாத்திரிகக் கதைத்தலைவன் கிறித்தவன் அல்லது ஆன்மிகன் என வழங்கப்படுபவன். இவன் குற்றங்குறைகள் மிகுந்த ஒரு சாதாரண மனிதன். உலக வாழ்வின் ஆசாபாசங்களில் சிக்கித் தவிக்கும் இவன், தனது பாவ நிலையை உணர்ந்து மனம் வருந்துகிறான். தனது பாவ வாழ்வு இப்படியே தொடருமானால், தனக்கு அழிவு உறுதி என உணர்ந்து மனம் கலங்குகிறான். ஆனால் இந்தக் கேட்டில் இருந்து விடுதலை பெற வழி தெரியாமல் தவிக்கிறான். தனது குற்றங்குறைகளை உணருகின்ற உண்மையான ஒரு மனிதனுடைய மனப்போராட்டங்களைக் கவிஞர் இப்பகுதியில் வருணித்துள்ளார். இந்தத் தீமை நிறைந்த வாழ்வில் இருந்து விடுபட்டு நன்மைகள் நிறைந்த ஓரிடத்தை அடைய வேண்டுமென்ற ஏக்கத்தையும் புலப்படுத்துகிறார்.

    குருவின் அறிவுரையும் குடும்பத்தார் எதிர்ப்பும்

    இந்நிலையில் நற்செய்தியாளன் என்னும் ஒரு குரு அவனைச் சந்தித்து. அவனுக்கு மீட்சி (விடுதலை) பெறும் வழியை எடுத்துரைக்கிறார். இதனால் மனம் மாறிய ஆன்மிகன், தான் வாழும் நாச தேசத்தை விட்டு இறைவனின் முத்தித் திருநாட்டை நோக்கிப் புனிதப் பயணம் செல்ல முடிவு செய்கிறான்.

    இதனை அறிந்த அவனது மனைவி மக்களும், உற்றார் உறவினரும், நண்பர்களும் அவனைத் தடுக்கின்றனர். எனினும் மனம் தளராது அவன் பயணத்தைத் தொடங்குகிறான். மென்னெஞ்சன் என்னும் நண்பன் ஒருவனும் அவனுடன் கிளம்புகிறான். தீய வழியை விடுத்து நாம் நல்ல வழியில் செல்ல வேண்டுமானால் சான்றோர்கள் மற்றும் அறிஞர்களுடைய துணை எந்த அளவுக்கு நமக்குத் தேவைப்படுகிறது என்பதையும் கவிஞர் இதனால் வெளிப்படுத்துகிறார். நல்ல நண்பர்களின் துணையையும் நாம் நாடவேண்டிய அவசியத்தையும் கவிஞர் குறிப்பாக உணர்த்துகிறார்.

    வழியில் நேர்ந்த விபத்து

    ஆன்மிகனும் மென்னெஞ்சனும் சற்றுத்தூரம் சென்ற உடனேயே, வழிதெரியாது அவநம்பிக்கை என்னும் சேற்றில் விழுகின்றனர். இதனால் மனம் சோர்ந்த மென்னெஞ்சன், தான் தப்பிப் பிழைத்தால் போதுமென்று, தன் ஊருக்கே திரும்பிவிடுகிறான். ஆனால் ஆன்மிகனுக்கு, சகாயன் என்பானின் உதவி கிடைக்கிறது. அதனால் சேற்றிலிருந்து எழுந்து பயணத்தைத் தொடர்கிறான். இப்படிப் பல சோதனைகளும் எதிர்ப்புகளும் வழியிலே இவனுக்கு எதிர்ப்படுகின்றன. அவற்றை மன உறுதியோடு தாண்டி முன்னேறுகிறான். இடுக்க வாயில் என்னுமிடத்தில் வியாக்கியானி என்பவனைச் சந்திக்கிறான். அவனது ஊக்க உரைகளால் உரம் பெறுகிறான். நல்வழி நோக்கிச் செல்லுகின்ற பயணம், எளியதாக அமைவதில்லை; துன்பங்களும் தொல்லைகளும் அடுக்கடுக்காக வந்து, நம்மை வழி தவறச் செய்யும். எனினும் அசையாத ஊக்கத்தோடு நாம் அப்புனிதப் பயணத்தில் முன்னேறிச் செல்ல வேண்டும் என்னும் கருத்தை இப்பகுதிகள் உணர்த்துகின்றன.

    சிலுவைக் குன்று தந்த விடுதலை

    தனது பயணத்தில் கிறித்தவன் சிலுவைக் குன்றினைக் காணுகின்றான். அதனைக் கண்ட அளவில், அதுவரை அவனது முதுகை அழுத்திக் கொண்டிருந்த பாவச்சுமை அறுந்து விழுகிறது. இறைவனைத் துதித்தபடி முன்னேறும் அவன், இடையில் பயணிகள் இளைப்பாறும் ஒரு சத்திரத்தில் தங்கி ஒய்வு பெறுகிறான். அங்கு விவேகி, யூகி, பக்தி, சிநேகிதி என்னும் நான்கு நல்ல பெண்மணிகள் அவனை அன்புடன் உபசரிக்கின்றனர். அவர்களுள் பக்தி என்பவள், கிறித்து பெருமானின் சிலுவைப்பாடுகளையும் அதனால் மனிதர் பெறும் மீட்சியின் (விடுதலையின்) அருமையையும் விளக்கிச் சொல்கிறாள். பின்னர் அப்பெண்கள் தந்த போர் வீரனுக்குரிய உடைகளைப் பூண்டு, பயணம் தொடர்கிறான். மனிதர்களைப் பாவங்களின் பிடியிலிருந்து விடுதலை செய்ய வல்லவர், மனித குலத்துக்காகத் தம் உயிரைச் சிலுவையிலே தியாகம் செய்த கிறித்து பெருமான் என்னும் கிறித்துவக் கோட்பாட்டை ஆசிரியர் இப்பகுதியில் தெளிவுபடுத்திவிடுகிறார். பாவக் கட்டுகளில் இருந்து விடுதலை பெற்றுத் தன் மீட்சிப் பயணத்தை மனிதன் தொடர வேண்டும் என்னும் செய்தியையும் கவிஞர் வெளிப்படுத்துகிறார்.

    மாயாபுரிக் கலவரம்

    வழியில், நிதானன் என்னும் சான்றோனுடைய நட்பு வாய்க்கிறது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டே சென்று, மாயாபுரி என்னும் நகரத்தை அடைகின்றனர். பல்வேறு அக்கிரமச் செயல்களில் அச்சமின்றி மூழ்கியுள்ளனர் அந்நகர மக்கள், அவர்களுக்கு இவர்கள் இருவரும் அறிவுரை கூறுகின்றனர். இதனால் சினம் கொண்டு இவர்களை அந்நகர மக்களும் போர்ச் சேவகர்களும் நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்கின்றனர். இவர்கள் இருவரும் சிறையில் தள்ளப்படுகின்றனர். நிதானன் தீயிட்டுக் கொளுத்தப்படுகிறான். இறையருளால் ஆன்மிகன் எப்படியோ தப்பி, தன் பயணத்தைத் தொடர்கின்றான். தீயவழிகளில் மனம் துணிந்து செல்லும் மனிதர்களை நாம் நல்வழிப்படுத்த முயலும் பொழுது, நாம் அடையக் கூடிய பல்வேறு துன்பங்களை இப்பகுதி உணர்த்துகிறது.

    மீட்சிப் பயணத்தின் வெற்றி முடிவு

    மீண்டும், பயணத்தில் நம்பிக்கை என்னும் இன்னொரு நண்பனின் துணையைப் பெறுகிறான். பற்பல துன்பங்களைத் தாண்டி இறுதியில் மரண ஆற்றையும் கடந்து, உச்சிதப் பட்டணம் சேருகின்றனர். அங்கு இவர்களை இறைத்தூதர்கள் வரவேற்கின்றனர். இயேசு பெருமான் அரியணையில் வீற்றிருக்கும் கோலத்தைக் கண்டு களிக்கின்றனர். நீடு வாழ்வு பெறுகின்றனர். ஆகவே தான் இந்நூல் இரட்சணிய யாத்திரிகம், அதாவது மீட்சிப் பயணம் எனப் பெயர் பெற்றது. இரட்சணியம் என்றால் மீட்சி அல்லது ஆன்ம விடுதலை என்றும் யாத்திரிகம் என்றால் புனிதப் பயணம் என்றும் பொருள்படும். மனிதன் இறைவனது ஒளிபொருந்திய திருநாட்டை நோக்கி மேற்கொள்ளும் மீட்சிப் பயணம், தடைகளும் இடர்களும் மிகுந்தது. எனினும் மன உறுதியோடும் நம்பிக்கையோடும் பயணம் செய்யும் மனிதர்க்கு அது தோல்விப் பயணம் ஆகாது. மாட்சி மிகுந்த வெற்றி தரும் மகிழ்ச்சிப் பயணமே ஆகும் என்னும் மிகப் பெரிய உண்மையை இக்காப்பியம் உணர்த்துகிறது.

    1.2.5 காப்பியத் தன்மை

    தமிழில் காப்பியத்தைப் பெருங்காப்பியம் என்றும், சிறுகாப்பியம் என்றும் இரு வகையாகப் பகுப்பது மரபு. பெருங்காப்பிய இலக்கணத்தைத் தண்டியலங்காரம் என்னும் இலக்கண நூல் விரிவாகக் கூறுகிறது. பெருங்காப்பியம் வாழ்த்து, வணக்கம், வருபொருள் இவற்றுள் ஏதாவதொன்று முன்வர, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்கள் பற்றிப் பேச வேண்டும். மலை, கடல், நாடு, நகர், பருவம் முதலியவற்றை வருணிக்க வேண்டும். பல உட்பிரிவுகள் கொண்டிருக்க வேண்டும். சிறப்பாகத் தனக்குச் சமமானவர் இல்லாத தலைவனைப் பாட வேண்டும். இவ்வாறு பல விதிகளை அந்த இலக்கண நூல் வகுக்கிறது.

    தனக்கு இணையானவர் இல்லாத தலைவன்

    இரட்சணிய யாத்திரிகத் தலைவனாக விளங்கும் ஆன்மிகனைத் தனக்கு இணையில்லாத தலைவனாகக் கருதமுடியாது. அவன் அன்றாட மனித வாழ்வின் ஆசையின் கட்டுகளில் சிக்கித்தவிக்கும் ஒரு சாதாரண மனிதனே. எனினும் உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் (உள்ளுவது = எண்ணுவது) என்ற குறளுக்கு ஏற்ப, தனது இழிந்த பாவ வாழ்க்கையை வெறுத்து உயர்ந்த பேரின்ப வாழ்வை அடைய விரும்புகிறான். அதனை அடையக் குடும்பத்தார், உற்றார், நண்பர்கள் ஆகிய அனைவரது எதிர்ப்பையும் மீறி, மீட்சிப் பயணம் மேற்கொள்ளத் துணிகின்றான். நீண்ட தனது புனிதப் பயணத்தில் தடைகள் பலவும் தாண்டி, துன்பங்கள் பலவும் பொறுத்து, இறுதியில் வான வீட்டை அடைகிறான். அவ்வகையில் தன்னேரில்லாத் தலைவனாகவே அவன் இறுதியில் உயர்கிறான். அதனால் இந்தக் காப்பியம் அந்த இலக்கணத்தைத் தழுவி எழுதப்பட்டது எனலாம்.

    பிற கூறுகள்

    அவ்வாறே இரட்சணிய யாத்திரிகத்தில் கடவுள் வாழ்த்துப் பகுதியில் தந்தை, மைந்தர், தூய ஆவியார் என விளங்கும் திரியேக (மூவொருமை)க் கடவுள் வணக்கம் இடம் பெறுகிறது. நூல் இயற்றிய காரணத்தை இரு பாடல்களால் ஆசிரியர் கூறுகிறார். மேலும் நூல் சொல்லும் பொருள், நூலின் பயன், யாப்பு முதலிய செய்திகளையும் தனித் தனிப் பாடல்களால் ஆசிரியர் சிறப்பாக எடுத்துக் கூறுகிறார்.

    நூலின் உட்பிரிவுகளை இவ்வாசிரியர் பருவம், படலம் என அமைத்துக் கொள்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களையும் கொடுக்கும் நடையினதாக இரட்சணிய யாத்திரிகம் விளங்குவதைக் காப்பியக் கதைப் போக்கால் நன்கு உணரலாம். காப்பியத்தில் உச்சநிலை, காப்பியத் தலைவன் வீடுபேறு அடைவதாகவே விளங்குகிறது.

    வருணனைகள்

    மேலும் காப்பியத்தில் நாட்டு வருணனை, நகர வருணனை, ஆற்று வருணனை ஆகியன ஆதிபருவத்தில் பரம ராச்சியப் படலத்தில் சிறப்புற இடம்பெற்றுள்ளன. விண் நாட்டில் பாயும் ஆற்றைச் சீவ கங்கை என்றே ஆசிரியர் சுவைபட வருணிக்கிறார்.

    காப்பியத்தில் திருமணம், முடிசூடுதல், போர், வெற்றி முதலியன அமைந்திருக்க வேண்டுமெனத் தண்டியலங்காரம் கூறுகிறது. இவற்றுள் பயணம், போர், முடிசூடல் முதலியன இக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ளன. எனினும் முக்தியை நோக்கி நடக்கும் இப்பேரின்பக் காப்பியத்தின் கதைப் போக்குக்கு ஒவ்வாத நிகழ்ச்சிகள் இதில் இல்லை. ஆசிரியர் பாயிரத்திலே தெரிவித்தபடி, இது சிற்றின்ப வருணனைகளை நீக்கிய நூலாகவே படைக்கப்பட்டுள்ளது. எனவே பெருங்காப்பிய இலக்கணங்கள் பலவற்றை நிறைவு செய்யும் ஓர் அரிய பெரிய காப்பியமாகவே இரட்சணிய யாத்திரிகம் திகழ்கிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:31:56(இந்திய நேரம்)