தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5.2

  • 5.2 முதல் வேற்றுமை

    திரிதல் இல்லாத (எந்த மாற்றமும் ஏற்படாத) பெயரே முதல் வேற்றுமை ஆகும். இதனை, எழுவாய் வேற்றுமை எனவும் கூறுவர். இதற்கு உருபு இல்லை. இது தானே தன்னை வினைமுதல் (வினையைச் செய்தவன்) பொருளாக வேற்றுமை செய்கிறது.

    வளவன்’ - இது என்ன சொல்? பெயர்ச்சொல். இச்சொல் என்ன பொருளில் வந்தது? பெயர்ப் பொருளில் வந்தது.

    வளவன் படித்தான் : தனியே நின்றபோது பெயர்ப்பொருளில் வந்த வளவன் என்னும் சொல் இத்தொடரில் படித்தல் தொழிலைச் செய்த வினைமுதல் பொருளாக வேறுபட்டது. படித்தான் என்னும் வினை, வளவனை வினைமுதல் பொருள் ஆக்கியது.

    இவ்வாறு பெயர்ப் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை. படித்தான் என்பது இத்தொடரின் பயனைத் தெரிவிப்பதால் அதனைப் பயனிலை என்பர்.

    எட்டு வேற்றுமைகளுள் திரிபு இல்லாத (மாறுபாடு இல்லாத) பெயரே முதல் வேற்றுமையின் உருபு ஆகும். இது வினையையும், பெயரையும் வினாவையும் பயனிலையாகக் கொண்டு முடியும். பயனிலை (பயன் + நிலை) வாக்கியத்தின் கருத்தை முடித்து நிற்கும் சொல் ஆகும்.

    எடுத்துக்காட்டு

    குமணன் கொடுத்தான்
    வினையைப் பயனிலையாகக்
    கொண்டு முடிந்தன.
    குமணன் வாழ்க
    குமணன் பெருவள்ளல்
    பெயரைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன.
    குமணன் இவன்
    குமணன் அரசனா?
    வினாவைப் பயனிலையாகக் கொண்டு முடிந்தன.
    குமணன் கொடுப்பானா?

    அவற்றுள்,
    எழுவாய் உருபு திரிபுஇல் பெயரே
    வினை பெயர் வினாக்கொளல் அதன் பயனிலையே

    (நன்னூல் : 295)

    (திரிபுஇல் = மாற்றம் இல்லாத)

    எழுவாய் வேற்றுமைக்குத் தனி உருபு இல்லை. என்றாலும், இக்காலத்தே ஆனவன், ஆனவள், ஆனவர், ஆனது, ஆனவை என்பனவும், என்பவன், என்பவள், என்பவர், என்பது, என்பவை என்பனவும் சொல் உருபுகளாக வரும் என உரையாசிரியர் கூறுவர்.

    எடுத்துக்காட்டு

    குமணனானவன் கொடுத்தான்
    ஒளவை என்பவர் பெரும்புலவர்
    கோயிலென்பது குளிர்பொழில் தில்லை
    யானையானது வந்தது

    என வரும்.

    மேலும், எல்லாப் பெயர்களும் எழுவாய்த் தன்மை பெற்று நிற்பதால் எல்லாப் பெயர்களுமே எழுவாய் வேற்றுமைகள் ஆகும்.

    சுருங்கக்கூறின்.

    முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை) கருத்தாப் பொருளை (வினைமுதலை) உணர்த்தி வரும். பெயர்ச்சொல் எத்தகைய வேறுபாடும் அடையாமல் வரும்.

    வினை முதல், செய்பவன், கருத்தா என்பன ஒரே பொருளை உணர்த்தும் சொற்கள் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-07-2017 12:55:44(இந்திய நேரம்)