Primary tabs
-
1.3 தொடர் பாகுபாடு
தொடர்மொழி ஆனது முற்றுத்தொடர்மொழி, எச்சத் தொடர்மொழி என இரண்டு வகைப்படும்.
முற்றுத் தொடர்மொழி என்பது, எழுவாயும் பயனிலையும் செயப்படுபொருள் முதலியவைகளோடு சேர்ந்தும் சேராதும் பொருள் முடிவு பெற்று நிற்கும் தொடராகும். இதனை வாக்கியம் என்றும் கூறுவர்.
எ.டு.
நன்னன் வந்தான்.
புலி மானை வேட்டையாடியது.முதல் தொடரில் ‘நன்னன்’ எழுவாய். அந்த எழுவாய் ‘வந்தான்’ என்னும் வினைமுற்றைப் பயனிலையாகக் கொண்டு பொருள் முடிவு பெற்றது. அதேபோல் ‘புலி’ என்னும் இரண்டாம் தொடரின் எழுவாய் ‘மான்’ என்னும் செயப்படுபொருளையும் ‘வேட்டையாடியது’ என்னும் வினைப் பயனிலையையும் பெற்றுப் பொருள் முடிவு பெற்றது.
எச்சத் தொடர்மொழி என்பது, பொருள் முடிவு பெறாது முற்றுத் தொடர்மொழிக்கு உறுப்பாக வரும் தொடராகும்.
(எ.டு.)
யானைத் தந்தம்
ஓடிய குதிரைஇவ்விரு தொடர்களும் எதற்காகக் கூறப்பட்டன என்னும் விளக்கம் பெறாமல் பொருள் எஞ்ச நின்றன. ‘யானைத் தந்தத்தை’ப் பற்றியும், ‘ஓடிய குதிரையை’ப் பற்றியும் கூறவேண்டிய காரணம் என்ன என்னும் வினாவிற்கான விடைப் பொருள் எஞ்சி நிற்க இத்தொடர்கள் அமைந்துள்ளன.