தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

4.7 அடைமொழி


     பேச்சு வழக்கில், இடம்பெறும் தொடர்களில், அடையும் சினையும் முதலும் இடம் பெறும். அவ்வாறு வருகையில் ஒர் அடையும் ஒரு சினையும் ஒரு முதலும் என வருதலும், இரண்டு அடை ஒரு முதலைச் சிறப்பித்து வருதலும் மரபாகும். செய்யுளில் இம் மரபை மீறி வருவதும் உண்டு.

     அடை என்பது அடைமொழியைக் குறிக்கும். இது இனமுள்ள அடைமொழி, இனமில்லா அடைமொழி என இருவகைப்படும்.

(எ-டு) நிலப்பூ

     பூக்கள் நிலத்திலும் நீரிலும் மலர்வன. இவ்வகைகளில் ஒன்றை மட்டும் பிரித்துக் காட்ட நிலப்பூ எனச் சொல்லப்பட்டது. பூ என்பதற்கு நிலம் அடையாக வந்தது. இது இனமுள்ள அடைமொழி எனப்படும்.

(எ-டு) செஞ்ஞாயிறு
     உப்பளம்

     ஞாயிறு ஒன்று மட்டுமே உண்டு. அதற்கு இனம் இல்லை. இனம் இல்லாதிருந்தும் செம்மை என்பது அடையாக வந்தது. அதே போல் அளம் என்னும் சொல் உப்பு விளைவிக்கும் இடத்தைக் குறிக்கும். இருந்தும் உப்பு என்னும் சொல் அளம் என்பதற்கு இனமில்லாத போதும் அடையாக வந்தது. எனவே செஞ்ஞாயிறு, உப்பளம் என்பன இனமில்லா அடைமொழி எனப்படும்.

     சினை என்பது zஒரு முதற்பொருளின் உறுப்பைக் குறிக்கும். இது பெயர்ச்சொல் வகைகளில் ஒன்று.

(எ-டு) கை, கால், தலை முதலியன.

முதல் என்பது ஒரு தொடரில் வினையை நிகழ்த்தும் பொருட்பெயர். சினைக்கும் இது முதற்பொருளாக அமையும்.

(எ-டு) செங்கால் நாரை
     கருஞ்சிறு காக்கை

முதற்தொடரில் நாரை முதற்பொருள். கால் என்பது நாரையின் உறுப்பாகிய சினை. அச்சினையாகிய கால் எத்தன்மையது என்பதைக் காட்டுவது செம்மை என்னும் அடைமொழி. இத்தொடர் அடை, சினை, முதல் என்னும் வரிசையில் அமைந்துள்ளது. இவ்வாறு அமைவதே மரபு.

    இரண்டாம் தொடரில் காக்கை என்னும் முதலுக்கு கருமை, சிறுமை என்னும் இரண்டு அடைமொழிகள் வந்துள்ளன. இவ்வாறு வருவதும் மரபாகும்.

செய்யுள் வழக்கு இவற்றிற்கு மாறாக இரண்டு அடைகள் சினையைச் சிறப்பித்து வருதலும், இவ்வரையறை கடந்து வருதலும் உண்டு.

அடைசினை முதன்முறை அடைதலும் ஈரடை
முதலோடு ஆதலும் வழக்கியல் ஈரடை
சினையொடு செறிதலும் மயங்கலும் செய்யுட்கே (நன்னூல்-403)


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:09:53(இந்திய நேரம்)