Primary tabs
- 5.1 வினா
தாம் எதிர்பார்க்கும் கருத்தைப் பெறுவதற்கு ஒருவரிடம் எவ்வாறு வினவ வேண்டும் என்பதை விளக்குவது வினாப்பகுதி. வினா ஆறு வகைப்படும். அவை,
1) அறிவினா
2) அறியாவினா
3) ஐயவினா
4) கொளல்வினா
5) கொடைவினா
6) ஏவல் வினாஎன்பனவாகும்.
ஒரு வினா, யாரிடம் யார் வினவுவது என்பதைப் பொருத்து வேறுவகையாக மாற்றம் பெறும் என்பது கவனிக்கத்தக்கது. இதனை விரிவாக வினா வகைகளை விளக்கும்போது காணலாம்.
அறிவறி யாமை ஐயுறல் கொளல்கொடை
ஏவல் தரும்வினா ஆறும் இழுக்கார்
(நன்னூல் - 385)விடையை நன்கு அறிந்த ஒருவர், மற்றவர்க்கு அந்த விடை தெரிந்திருக்கிறதா என்பதைக் கண்டறிய வினவும் வினா அறிவினா எனப்படும்.
எ-டு: திருக்குறளை எழுதியவர் யார்?
என மாணவர் ஆசிரியரிடம் கேட்பது இத்தகைய வினாவாகும். திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர் என ஆசிரியர் விடையை அறிந்திருந்தும், மாணவர் அதனை அறிந்திருக்கின்றனரா என்பதைக் கண்டறிய வினவுவதால் இதனை அறிவினா என்பர்.
தெரியாத ஒரு கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக, அக்கருத்தை நன்கு அறிந்த ஒருவரிடம் வினவி அறிதல் அறியாவினா எனப்படும்.
எ-டு: திருக்குறளை எழுதியவர் யார்?
என ஆசிரியர் மாணவரிடம் கேட்பது அறியாவினா எனப்படும். மாணவர் இவ்வினாவிற்கான விடை தமக்குத் தெரியாத நிலையில் அதன் விடையை அறிவதற்காக ஆசிரியரிடம் வினவி அறிவது அறியாவினா ஆகும்.
இதுவா அதுவா எனத் தெளிய முடியாத நிலையில் ஒரு பொருளை ஐயுற்று வினவும் வினா ஐயவினா எனப்படும்.
எ-டு: அங்கே கிடப்பது பாம்பா? கயிறா?
இவ்வெடுத்துக்காட்டில் கிடப்பது ஒரு பொருள் எனத் தெரிகிறது. ஆனால், அது பாம்பு போலவும் தெரிகிறது. கயிறு போலவும் தெரிகிறது. இவ்வாறு இரண்டில் எது எனத் தெளிவு பெற முடியாத நிலையில் அடுத்தவரிடம் தமக்கு ஏற்பட்ட ஐயத்தைத் தீர்த்துக் கொள்ள வினவப்படும் வினா, ஐயவினா எனப்படும்.
ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து பெறுவதற்காக வினவப்படும் வினா, கொளல்வினா எனப்படும்.
எ-டு: துவரம் பருப்பு உள்ளதா?
என ஒருவர் கடைக்காரரிடம் வினவுவதன் காரணம் அப்பருப்பை வாங்க வேண்டும் என்பதே ஆகும். இவ்வாறு ஒரு பொருளைக் கொள்வதற்காக வினவப்படும் வினா, கொளல்வினா எனப்படும்.
பிறருக்குக் கொடுப்பதற்காக ஒருவர் மற்றவரிடம் வினவுவது கொடை வினா எனப்படும்.
எ-டு: நண்பா, சாப்பிடுகிறாயா?
என ஒருவர் தன் நண்பனிடம் வினவுவதன் நோக்கம் அவர்க்கு உணவு அளிப்பதே ஆகும். இவ்வாறு கொடுக்கும் நோக்கத்தோடு வினவப்படும் வினா கொடைவினா எனப்படும்.
ஒருவர் ஒரு செயலை மற்றவரைச் செய்விக்க வேண்டும் என்பதற்காக வினவுவது ஏவல்வினா எனப்படும்.
எ-டு: எழிலா, பள்ளிக்குப் போகிறாயா?
எனத் தந்தை தன் மகனை வினவுவது ஏவல்வினா ஆகும். இவ்வினாவின் நோக்கம் தன் மகன் பள்ளிக்குப் போகிறானா என்பதை அறிவதற்காக வினவுவது அன்று. பள்ளிக்கு மகன் போக வேண்டும் என்பதே அவ்வினா வினவப்பட்டதன் நோக்கமாகும். எனவே, இத்தகைய வினா, ஏவல்வினா எனப்படும்.