தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-3:1-இயற்கை வழிபாடு

3.1 இயற்கை வழிபாடு

மனிதன் வாழ்வதற்கு நீர், காற்று, முதலியவை தேவை. இவையே இயற்கையாகும். இயற்கையில்லாமல் அவனால் தனித்து வாழ முடியாது. இயற்கை தன்னை விட வலிமையுடையது எனக் கருதினான் மனதன். அந்த இயற்கை பாரதிக்குத் தெய்வமாய்த் தோற்றமளித்தது

இயற்கைப் பொருள்களான சூரியனைப் பற்றிச் சூரியதரிசனம், ஞாயிறு
வணக்கம், ஞானபானு

என்னும் பாடல்களும், நிலவைப் பற்றிச் சோமதேவன் புகழ்,
வெண்ணிலாவே
என்னும் பாடல்களும் பாடியுள்ளார். பகலில் சூரியனும் இரவில் நிலவும் இருளைப் போக்கி மனித குலத்திற்கு ஒளி தருகின்றன. மனித குலத்திற்கு உதவும் இவை பற்றிப் பாரதி பாடுவதைப் பாருங்கள்.

3.1.1 சூரியன்

உலகிலுள்ள பொருள்கள் யாவிற்கும் அடிப்படையான, முதல் பொருளாகச் சூரியனை காண்கிறார். தாய் தந்தையாய்க் கருதி வணங்குகிறார் பாரதி.

பரிதியே! பொருள் யாவிற்கும் முதலே!

(சூரிய தரிசனம் - 1)

(பரிதி = சூரியன்)

ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கே
ஆயிரந் தரம் அஞ்சலி செய்வேன்

(ஞாயிறு வணக்கம் - 3)

உலகிற்கு ஒளி வழங்கத் தினந்தோறும் உதிக்கிறது சூரியன். இதைப் பூமி மீது கொண்ட காதலால் சூரியன் தினமும் தோன்றுகிறது என்று கற்பனை செய்து பாடியுள்ளார்.

காதல் கொண்டனை போலும் மண்மீதே
கண்பிறழ் வின்றி நோக்குகின் றாயே!
மாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்
மண்டினாள் . . . . . . .

(ஞாயிறு வணக்கம் - 3)

(மண்டினாள் = நெருங்கினாள் )

புற இருளை நீக்க ஒளி வேண்டும். அறியாமை என்னும் அக இருளை நீக்க அறிவாகிய ஞானம் வேண்டும். கவலை, சிறுமை முதலியவை அறிவிலாமை என்ற இருளில் காணப்படும் பேய்கள். இந்தப் பேய்களை ஞானமாகிய ஒளி நெருங்கினால் அறிவிலாமை என்ற இருள் நீங்கும் என்று பாரதி ஞானத்தைச் சூரியனாக உருவகித்துள்ளார்.

கவலைகள், சிறுமை, நோவு, கைதவம், வறுமைத் துன்பம்
இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்
நவமுறு ஞானபானு நண்ணுக தொலைக பேய்கள்

(ஞானபானு : 1,2)

(கைதவம் - வஞ்சகம், நவம் - புதுமை, ஞானபானு-அறிவாகிய கதிரவன்)

சூரியனின் தோற்றத்தைப் பலர் பாடியுள்ளனர். ஆனால் அதை ஞானமாகவும் அறிவுத் தெய்வமாகவும் பாரதியே பாடியிருக்கிறார். அறியாமை இருளில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டு மக்கள் ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் பாடினாரோ?

3.1.2 வெண்ணிலா

நிலவைப் பாடாத புலவர்களில்லை. பாரதியின் கண்களுக்கு இன்பம் அளிக்கும் தீவாக நிலவு தென்படுகிறது. வானமாகிய கடலின் நடுவில் உள்ள தீவு நிலவு என்பது பாரதியின் கற்பனை.

....................................விழிக்கு
இன்பம் அளிப்பதோர் தீவென்று இலகுவை வெண்ணிலாவே

(வெண்ணிலாவே - 1)

(இலகுவை - விளங்குவாய்)

மேலும்,

மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர் வெண்ணிலாவே அஃது
வயதிற் கவலையின் நோவிற் கெடுவது வெண்ணிலாவே!

(வெண்ணிலாவே - 2)

என்று பெண்கள் முகத்தை நிலவுக்கு ஒப்பிடுகிறார். பெண்கள் முகம் வயதால் மூப்படையும், கவலையினாலும் நோயினாலும் அழகு கெடும். ஆனால் இந்த நிலை நிலவுக்கு இல்லை. அது என்றும் குறையாத அழகு உடையது.

நிலவு தன் ஒளியை நல்லவர், தீயவர் என்ற பாகுபாடு இல்லாமல் வழங்குகிறது. ஆகையால் அது உயர்வானது. அது போல் எல்லோரையும் சமமாகக் கருதும் மலோன மனநிலையை உடையவர்கள் மேலோர் என்று குறிப்பிடுகிறார்

தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும் வெண்ணிலாவே! - நலம்
செய்தொளி நல்குவர் மேலவ ராம் அன்றோ. . . . .

(வெண்ணிலாவே - 4,5)

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:08:15(இந்திய நேரம்)