தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

5-5:3-மூடநம்பிக்கை ஒழிப்பு

5.3 மூடநம்பிக்கை ஒழிப்பு

சமுதாயத்தில் சில பழக்க வழக்கங்கள் ஏன் செய்கிறோம் என்ற சிந்தனை இல்லாமலே காலம் காலமாக மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.இத்தகைய "கண்மூடிப்
பழக்கமெல்லாம் மண்மூடிப் போகட்டும்" (பாழாகப் போகட்டும்) என்றார் வள்ளல் இராமலிங்க அடிகளார். தொடர்ச்சியாக வந்த சில பழக்க வழக்கங்களையும், பொய்மைச் சாத்திரங்கள் கூறும் தவறான செய்திகளையும் (சடங்குகளையும்) சுய சிந்தனை இல்லாமல் கண்மூடித்தனமாக நம்புவதும், செய்வதும் தவறு. புதுமைகளைச் சிந்தித்துச் சீர்தூக்கிப் பார்த்து நமக்கு ஏற்றதெனில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல காலவகையி னானே

(நன்னூல் - நூற். 462)

என்பது மொழியின் இலக்கண விதிக்குக் கூறப்பட்டது என்றாலும், நம்வாழ்க்கைக்கும் அது பொருந்தும். அதன் கருத்து, பழைய விதிகள் நீங்குதலும், புதிய விதிகள் ஏற்படுதலும் உண்டு; அது தவறல்ல; அது காலத்தின் தன்மைக்கேற்ப மாறும்.

பேய், பிசாசு

அச்சத்தின் அடிப்படையில் ஏற்படும் பேய், மந்திரம், தந்திரம் இவற்றைப் பற்றிய நம்பிக்கை ஒழிய வேண்டும் என்கிறார் பாரதியார்.

நெஞ்சு பொறுக்கு தில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி அஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார் ; அந்தக்குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார் ; மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்

(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை-1)

(அவனி = பூமி, துஞ்சுவது = தூங்குவது, தங்குவது, முகட்டில் =
மலை உச்சியில்)

என்று அச்சத்தில் உழன்று செய்வதறியாது திகைத்து நின்ற தம் சமகால இந்திய மக்களை எண்ணி நெஞ்சு வெதும்புகின்றார்.

தாம் பாடிய புதிய ஆத்திசூடியில்,

பேய்களுக்கு அஞ்சேல்
அச்சந் தவிர்

எனச் சிறுவர்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

நாள், நட்சத்திரம்

‘நல்லதைச் செய்ய நாள் பார்க்கத் தேவை இல்லை’ என்பது பழமொழி. என்றாலும் அச்சத்தின் காரணமாக நாள் நட்சத்திரம் பார்ப்பது, சோதிடம் பார்ப்பது என்பன நம் முயற்சியைக் கெடுக்கும்.

சோதிடம் பார்ப்பது தவறு என்பது பாரதியார் கருத்து, இதைப் புதிய ஆத்திசூடியில்,

சோதிடந் தனை இகழ்

என அவர் கூறுவதன் வழி அறியலாம்.

சுவர்க்கமும், நரகமும்

பாரதியார் சுவர்க்கம், நரகம் போன்ற மூடநம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிக் கிடப்பதைக் கண்டு வருந்துகிறார். சுவர்க்கம், நரகம் இரண்டும் நாமே ஏற்படுத்திக் கொள்ளக்கூடியன என்றும், அவை வேறெங்கும் இல்லை நம் உள்ளத்தில் தான் உள்ளன என்றும் கூறுகின்றார்.

கவலைப் படுதலே கருநரகு, அம்மா!
கவலை அற்றிருத்தலே முத்தி

(விநா.நா.ம.மாலை. 36)

எனக் கவலைப்படுவதுதான் நரகம், கவலையற்று மகிழ்ச்சியுடன் இருப்பதுதான் சுவர்க்கம் எனப் புது விளக்கம் தருகின்றார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 01:11:41(இந்திய நேரம்)