தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Aranoolgal-I-சிறுபஞ்ச மூலம்

  • 3.2 சிறுபஞ்சமூலம்

    இனி இரண்டாவது மருந்து நூலாகிய சிறுபஞ்சமூலம் பற்றிப் பார்ப்போமா?

    பஞ்ச என்ற சொல் ஐந்து என்ற எண்ணைக் குறிக்கும். மூலம் என்றால் வேர் என்று பொருள். மருத்துவ நூலில் கூறப்படும் ஐந்து வேர்கள் பின்வருவன: அவை

    1.
    கண்டங்கத்தரி வேர்
    2.
    சிறு வழுதுணை வேர்
    3.
    சிறுமல்லி வேர்
    4.
    நெருஞ்சி வேர்
    5.
    பெருமல்லி வேர்

    என்பனவாகும்.

    இந்த ஐந்து வேர்களும் மக்களின் உடல் நோயைத் தீர்க்க வல்லன. இது போல் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து பொருள்களும் மக்களின் பிறவி நோயைத் தீர்க்க வல்லன. அவை சிறந்த அற நெறிகள். நூலின் பெயர்க் காரணத்தை ஆசிரியர்,

    ஒத்த ஒழுக்கம் கொலைபொய் புலால்களவொடு
    ஒத்த இவையலவோர் நாலிட்டு - ஒத்த
    உறுபஞ்ச மூலந்தீர் மாரிபோல் கூறீர்
    சிறுபஞ்ச மூலம் சிறந்து

    (சிறுபஞ் - 1)

    என்று முதல் பாடலில் கூறுகிறார்.

    இதன் விளக்கமாவது:

    கொலை, பொய், புலால், களவு ஆகியவற்றுக்கு மாறான கொலை செய்யாமை, பொய் கூறாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை ஆகிய நான்குடன் ஒழுக்கம் என்பதையும் இணைத்து, ஐந்தின் கூட்டாகச் சிறுபஞ்சமூலம் என்னும் இந்நூல் அமைந்துள்ளது. பஞ்சத்தைப் போக்கும் மழைபோல. இந்நூல் மக்களின் அறியாமையைப் போக்கும். மக்கள் மனத்தில் பதியுமாறு இதனை எடுத்துச் சொல்லுங்கள்.

    • ஆசிரியர்

    சிறுபஞ்ச மூலம் நூலின் ஆசிரியர் காரியாசான். காரி என்பது இவரது இயற்பெயர். ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் வந்த பெயர்.

    இவர் மாக்காயன் என்பவருடைய மாணவர். ‘மழைக்கை மாக்காரி யாசான்’ என்ற தொடர் நூலாசிரியர் கொடை வள்ளல் என்பதைப் புலப்படுத்துகிறது. இவரது காலம் நான்காம் நூற்றாண்டு.

    ஆசிரியர் கொல்லாமையை வலியுறுத்திக் கூறுவதால் (சிறுபஞ். 51), அவர் சமண சமயத்தில் ஈடுபாடுடையவர் என்று கொள்ளலாம்.

    3.2.1 நூல் அமைப்பும் சிறப்பும்

    சிறுபஞ்ச மூலத்தில் பாயிரச் செய்யுள் உட்பட 100 செய்யுள்கள் உள்ளன. பாடல்கள் நேரிசை வெண்பாவால் ஆனவை. முன்பு கூறியது போல் ஐவகை வேர்களும் நோயை நீக்குகின்றன. அதைப் போல் இந்த நூலின் ஒவ்வொரு பாடலிலும் கூறப்படும் ஐந்து கருத்துகளும் மக்களை நல்வழிப்படுத்தும் அறநெறிகளாகும். அவற்றைக் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஆசிரியர் வலியுறுத்துகிறார். இந்த அறக்கருத்துகளே நூலில் பாடுபொருளாக விளங்குகின்றன. பல பாடல்கள் ‘மகடூஉ முன்னிலை’யாக அமைந்துள்ளன. ‘மகடூஉ முன்னிலை’ என்பது. ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போல, பாடலை அமைப்பது. எடுத்துக்காட்டாக, ‘கண்டல் அவிர்பூங் கதுப்பினாய்’ (சிறுபஞ். 14 தாழைமலர் அணிந்த கூந்தலையுடையவளே! என்பது இதன் பொருள்). பாடல்கள் 48,54,89,92 ஆகியவற்றிலும் இது போன்ற விளிகளைக் (அழைப்புகள்) காணலாம்.

    இனி, சிறுபஞ்ச மூலம் கூறும் நெறிமுறைகளைப் பார்ப்போமா? உலகில் பஞ்சத்தின் காரணமாக ஏற்படும் விளைவின்மையை மழை நீக்குகிறது. அதுபோல் உடலுக்கு ஏற்பட்ட நோயைச் சிறுபஞ்சமூலம் என்ற மருந்து நீக்குகின்றது. அங்ஙனமே உயிரைப் பற்றிய பிணிகளைச் சிறுபஞ்ச மூலம் போக்குகிறது.

    உயிரைப் பற்றிய பிணிகள் கொலை, பொய், புலால் உண்ணுதல், களவு செய்தல் என்பனவாகும். அவற்றிற்கு மருந்தாக அமையக் கூடியவை

    1.
    அருளுடைமை
    2,
    மெய்ம்மை
    3.
    புலால் உண்ணாமை
    4.
    திருடாமை

    ஆகிய நான்கும் மருந்தாக அமையும். இந்த மருந்துகளைச் சிறுபஞ்சமூலம் விளக்குகிறது.

    அறமும் அறச்செயல்களின் சிறப்பும் இந்நூலில் பேசப்படுகின்றன. வாழ்வில் பின்பற்ற வேண்டிய அறங்களை ஐந்து வகையாகப் பகுத்துரைக்கின்றார் காரியாசான். அறிவுடையார் செயல்கள், அறிவற்றோர் செயல்கள் ஆகியவை பகுத்துரைக்கப்படுகின்றன.

    எது அழகு என்பது சுட்டப்படுகிறது. ஆசிரியரும் மாணாக்கரும் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இவ்வுலகில் ஒரு நோயும் இன்றி வாழ்பவர் யார், எண்பதாண்டுகளுக்கு மேலும் வாழ்பவர் யார் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

    மக்கட்பிறவியும், அப்பிறவிப்பயனும் பற்றிக் கூறப்படுகிறது. யாருக்கு மீண்டும் பிறவி இல்லை என்பதை இரண்டு பாடல்கள் எடுத்துக் கூறுகின்றன. ஆண்டுக்கும் அறிவுக்கும் உள்ள தொடர்பு பற்றிய அருமையான பாடல்களும் சிறுபஞ்சமூலத்தில் உண்டு. அரசர், அமைச்சர், தலைவன், உழவர் ஆகியோர் இயல்புகள் வரையறுக்கப்படுகின்றன. பொது நல உணர்வுடையவன் சுவர்க்கம் புகுவான் என்ற கருத்தமைந்த பாடலும் உண்டு.

    குளத்தைத் தோண்டல், மரக்கிளைகளை வெட்டி நடல், பாதைகளை அமைத்தல், மேடான நிலங்களை உள் தோண்டல், உழுகின்ற வயலாக்குதல், வளம்படத் தோண்டி கிணற்றை உண்டாக்குதல் ஆகிய ஐந்தும் மிகுதியாகச் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்கிறார் காரியாசான் (சிறுபஞ்-66).

    காரியாசான் சிறுபஞ்சமூலம் என்ற நூலின் வாயிலாகப் பண்டைய தமிழரின் வாழ்வியல் மதிப்பீடுகளை எடுத்துக்காட்டுகிறார். அறநெறிகளே சிறந்த வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை விளக்குவதே இந்நூலின் நோக்கமாக அமைவதைக் காணலாம். அவ்வாறு விளக்கும் போது விலங்குகளையும், மரங்களையும், பறவைகளையும் ஒப்பிடுவது சிறப்பாக உள்ளது. பூவாது காய்க்கும் மரங்கள், பூத்தும் காய்க்காத மரங்கள், காக்கைகள், செவ்வெறும்புகள், நண்டு, சிப்பி, வேய், கதலி ஆகியவற்றின் இயல்புகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.

    நன்மை தருவன, தீமை தருவன, நகைப்புக்கு உரியன என்ற வாழ்வியல் உண்மைகளை எடுத்துக்காட்டுகிறார். உறுதிப் பொருள்களை எடுத்துரைக்கும் காரியாசான் அறவழியே நில்லுங்கள் என்று ஊக்கப்படுத்துகிறார். ஐந்து வேர்கள் உடல் நோயைத் தீர்க்கின்றன. அதுபோல இங்குக் கூறப்படும் உறுதிப் பொருள்கள் வாழ்வைத் தெளிவாக உணர்ந்து கொள்ளவும். வழி நடக்கவும் துணை புரிகின்றன. பிறவிப் பிணியைத் தீர்க்க வல்ல அருமருந்தாகவும் அது அமைகிறது. சிறு பஞ்சமூலம் சொல்லும் பெருநெறிகள் இவையே.

    3.2.2 அறச்சிறப்பு

    கொல்லாமை, பொய்யாமை, புலால் உண்ணாமை, களவு செய்யாமை இவை நான்குடன் இவை அல்லாத ஏனைய அறங்கள் எல்லாம் ஓர் அறமாகக் கொண்டால், இந்த ஐவகை அறங்களும் மக்கள் வினையைத் தீர்க்கும் வலிமை படைத்தன என்கிறார் காரியாசான் (சிறுபஞ்-1).

    குழந்தை நலன் காத்தல் நோயற்ற நல்ல சமுதாயத்தை உருவாக்குவதற்குரிய முதற்படி அல்லவா? அதனை விரிவாகப் பேசுகிறது சிறுபஞ்ச மூலம். ஈன்ற தாய் தன் குழந்தையை வளர்த்தல், தான் கொண்ட சூலை அழியாது காத்தல், வளர்ப்பார் இல்லாத குழவியை வளர்த்தல், சூல் ஏற்ற கன்னியையும் மிகவும் வருந்தியவனையும் தன் வீட்டில் வைத்துப் போற்றுதல் இவை பெரிய அறங்களாகும் என்பர் சான்றோர். இவை இக்காலத்துக்கும் மிகப் பொருந்துகின்றன அல்லவா?

    • இல்லறச் சிறப்பு

    மனைவியோடு கூடி வாழும் இல்வாழ்க்கை, துறவறத்திலும் நன்றாகும். நல்ல துறவறத்தார்க்கு உணவை ஆக்கியிட்டுத் தாமும் உண்ணும் சிறப்புடையவர்கள் இல்லறத்தார். இல்வாழ்க்கையைச் செம்மையாக நடத்தினால் அதுவே துறவற வாழ்க்கைக்கு ஒப்பாகும் என்கிறது சிறுபஞ்சமூலம் (92)

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
    போஒய்ப் பெறுவது எவன்
    (குறள் - 46)

    என்ற குறட்பாக் கருத்தை அடியொற்றி மேற்கூறிய கருத்து அமைவதைக் காணலாம்.

    • ஈகை

    இல்லறநெறியில் ஈகைக்கு இன்றியமையாத இடமுண்டு. ஈகைக்கு அடிப்படையாக அமைவது உள்ள நெகிழ்ச்சி. இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து அவர்க்குத் தேவையானதைத் தர வேண்டும். எதைப்போல் உள்ளம் நெகிழ வேண்டும் என்று காரியாசான் சொல்கிறார் என்று பார்க்கலாமா?

    நெருப்பைக் கண்ட வெண்ணெய், மெழுகு, நீர் சேர்ந்த மண், உப்பு, தன் அழகிய மகனைத் தழுவிய தந்தை என்று சொல்லப்பட்ட ஐந்தனுள் ஒன்றுபோல் இரவலரைக் கண்டால் உள்ளம் நெகிழ்ந்து ஈயவேண்டும். அவ்வாறு ஈயும் பொருள் சிறிதாயினும் அதனால் வரும் பயன் குன்று போலப் பெரிதாய்க் கூடும் என்று ஈகைச் சிறப்பு பேசப்படுகிறது. பாடலைப் பாருங்கள்,

    வெந்தீக்காண் வெண்ணெய் மெழுகுநீர்சேர் மண்உப்பு
    அந்த மகற்சார்ந்த தந்தையென்று - ஐந்தினுள்
    ஒன்றுபோல் உள்நெகிழ்ந்து ஈயிற் சிறிதெனினும்
    குன்றுபோல் கூடும் பயன்
    (சிறுபஞ்-65)

    (அந்த மகன் = அழகுடைய மகன்)

    3.2.3 வாழ்வாங்கு வாழ்வார்

    நம் கண் முன்னால் நோய்வாய்ப்பட்டுத் துன்புறுவார் பலரைக் காண்கிறோம். ஒரு சிலரே நோயற்று வாழ்கின்றனர். இதன் காரணம் என்ன என்று ஆராய்ந்து சொல்கிறார் காரியாசான்.

    நோயுற்றவர் கலங்கித் துன்புறுகின்றனர். மருத்துவர் சிலரோ கல் நெஞ்சம் உடையராகி நோயுற்றாரிடம் மிகுதியான பணம் கேட்கின்றனர். இரக்கமுள்ள மருத்துவர் நோயுற்றவரிடம் இனிமையாகப் பேசி நன்மருந்து தந்து அவர் உடல் நோயினைத் தீர்க்கின்றனர். மிகக் கொடிய தலைநோய் உற்றார், பித்தேறியவர், வாய்ப்புற்று உடையவர், சயநோய் உடையவர், மூலநோய் கண்டவர் ஆகியோர் நோய்களைத் துடைத்த அருளாளரே ஒரு நோயும் இன்றி வாழ்கின்றனர் என்கிறார் காரியாசான். (சிறுபஞ்-76)

    • நீண்ட நாள் வாழ்வார்

    பஞ்ச காலத்திலும் பகுத்து உண்பவர். மற்றவர்க்குக் கொடுத்து உண்பவர், படையுடைந்த காலத்து அஞ்சாது புகுந்து பலரையும் காக்கின்றவன், எந்நாளும் மற்றவர்க்குக் கொடுத்த பின்னரே உண்கின்றவன், பசித்த குழந்தைகளுக்குச் சோறளிப்பவன் ஆகியோர் எண்பது ஆண்டுகளுக்கு மேலும் வாழ்வார் என்று கூறுகிறது. (சிறுபஞ்-79)

    3.2.4 மரங்களும் மக்கள் வாழ்க்கையும்

    பலா முதலிய மரங்கள் வெளிப்படையாகத் தெரியும் வகையில் பூக்காமல் காய்க்கின்றன. பூத்தாலும் காயாத பாதிரி முதலான மரங்களும் இருக்கின்றன. நூல்களைக் கற்றுவல்ல மேதையர் வயதில் இளையராயினும் அறிவினால் மூத்தவரே. நூல்களைக் கற்றுத் தெளியாத பேதையர் வயதில் முதிர்ந்தவர் ஆயினும் அறிவில் சிறியவரே.

    ஆண்டில் இளைஞராயினும் அறிவினால் மூத்தவர் சிலர் வெளிப்படையாகப் பூக்காமல் காய்க்கும் மரம் போன்றவர்கள் (அத்தி, ஆல், பலா, அரசு போன்ற மரங்கள்). பிறர் அறிவிக்காமலேயே அறிவுடைய அறிவுடையோரும் உள்ளனர். இவர்கள் பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கின்ற விதை போன்றவர்கள் என்று கூறுகிறது சிறுபஞ்ச மூலம் (22).

    வயதும் அறிவும் பற்றி விளக்கும் பாடல்களைப் பாருங்கள்.

    பூவாது காய்க்கும் மரமுள நன்றறிவார்
    மூவாது மூத்தவர் நூல்வல்லார் - தாவா
    விதையாமை நாறுவ வித்துள மேதைக்கு
    உரையாமை செல்லும் உணர்வு
    (சிறுபஞ் - 22)

    (நாறுவ = முளைப்பன)

    பூத்தாலுங் காயா மரம்உள நன்றறியார்
    மூத்தாலும் மூவார்நூல் தேற்றாதார் - பாத்திப்
    புதைத்தாலும் நாறாத வித்துள பேதைக்கு
    உரைத்தாலும் செல்லா துணர்வு
    (சிறுபஞ் - 23)

    (நாறாத = முளையாத, பேதை = அறிவில்லாதவன்)

    3.2.5 பிறவியற்றவர்

    உலகில் பிறப்பற்று வாழ்பவர் யார் என்று காட்டுகிறார் காரியாசான். கள் உண்ணாமலும், சூதாடாமலும் கயவருடன் நட்புக் கொள்ளாமலும், பிறர் மனம் வருந்த வன்சொல் கூறாமலும் , ஊன் உண்ணாமலும் இருப்பவர் மீண்டும் பிறத்தல்இல்லை என்பது ஆசிரியர் எண்ணம். (சிறுபஞ்-21)

    மக்களாய்ப் பிறந்தும் இரண்டு கால் மாடுகள் என்று யாரைச் சொல்கிறார் காரியாசான் என்று பார்ப்போமா? முன்பு பொருள் உடைமையால் துன்பமில்லாமல் வாழ்ந்தோம் என்போரும், முன்பு யாமே அழகு உடையராய் இருந்தோம் என்று செருக்கித் திரிவோரும் இரண்டு கால்களோடு உலவும் மாடுகளுக்கு ஒப்பாவார் என்று கூறுகிறார். (சிறுபஞ்-20)

    3.2.6 வாழ்வியல் உண்மைகள்

    வாழ்வியல் உண்மைகள் பலவற்றைக் காரியாசான் நூலின் இடையிடையே எடுத்துரைக்கின்றார். எது நன்று? எது நன்றன்று? எது வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுவதைப் பார்ப்போமா?

    • எது நன்று? எது நன்றன்று?

    பிறர் செய்த பிழையைப் பொறுத்தல் நன்று. பிறர் செய்த தீங்கை எண்ணிக் கொண்டிருத்தல் நன்றன்று. பிறர் பகை கெடவாழ்தல் நன்று (சிறுபஞ்-16).

    • எது வேண்டும்? என்ன செய்ய வேண்டும்?

    பிறவி நீங்கத் தவம் செய்க. புகழ் வேண்டும் எனில் ஈதலைச் செய்க. இரக்கம் வேண்டுமெனில் பிறர் மனை விரும்பாமை வேண்டும். தினம் சிறிதேனும் பொருள் சேர்த்தால் செல்வம் பெருகும் என்று ஒருவர் செய்ய வேண்டிய செயல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் ஆசிரியர். (சிறுபஞ்-5).

    ஒருவனுடைய நாவில் தோன்றும் வசை மொழிகளே அவனுக்கு எமனாகும் என்ற கருத்தை எப்படிச் சொல்கிறார் காரியாசான் என்று பாருங்கள்.

    சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
    விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
    மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
    நாவிற்கு நன்றல் வசை
    (சிறுபஞ் - 11)

    (கூற்றம் = எமன், கோடு = கொம்பு, வலம் = வெற்றி, மா = மான், ஞெண்டு = நண்டு, பார்ப்பு = குஞ்சு)

    1.
    சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டை எமன்
    2.
    மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகள் எமன்
    3.
    கவரிமானுக்கு அதன் மயிர் எமன்
    4.
    நண்டுக்கு அதன் குஞ்சு எமன்
    5.
    ஒருவன் நாவில் தோன்றும் வசைமொழியே அவனுக்கு
    எமன் என்கிறார்.

    நண்டு, சிப்பி, வேய், கதலி ஆகியவை நாசமுறும் காலத்தில் கொண்ட கருவழிக்கும் என்ற (நல்வழி-36) பாடல் அடி இந்த நான்கிற்கும் அவற்றின் குஞ்சே எமன் ஆகும் என்ற கருத்தை அரண்செய்யும் வகையில் உள்ளது.

    • எல்லாச் செயலும் யார்க்கும் எளிதன்று

    1.
    வலிய தூக்கணாங் குருவி செய்யும் கூடும்
    2.
    பேரெறும்புகளால் செய்யப்படும் அரக்கும்
    3.
    தூய உலண்டு (ஒருவகைப் புழு) என்னும் புழுக்களால்
    நூற்கப்பட்ட நூலும்.
    4.
    கோல் புழுவால் செய்யப்பட்ட கோல் கூடும்
    5.
    தேனீக்களால் திரட்டப்பட்ட தேன் பொதியும்

    மற்றவர்களாலே செய்ய முடியாது. அவற்றாலேயே எளிதாக உருவாக்க முடியும். கற்றவர் அவற்றைத் தம்மால் செய்ய முடியும் என்று செய்ய முற்படார் . ஒவ்வொருவர்க்கும் அவரவர் செய்யும் செயல் எளிது. பிறர் செய்யும் செயல் அரிது என்பதை எவ்வளவு எளிமையாகச் சொல்கிறது சிறுபஞ்சமூலம் (27)!

    • உறுதிப் பொருள்கள்

    சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து உறுதிப் பொருள்களும் மக்களை எச்சரிக்கை செய்து வாழ்வை நெறிப்படுத்துவனவாய் அமைகின்றன. அவை:

    1.
    நற்குணம் உடையவரைச் சேருங்கள்
    2.
    பிறர் பொருளைக் கவர நினைக்காதீர்கள்
    3.
    தீக்குணம் உடையவரை ஒழியுங்கள்
    4.
    தீய சொற்களைப் பேசாதீர்கள்
    5.
    இயமன் வருவது உறுதி

    என்பனவாகும்(26).

புதுப்பிக்கபட்ட நாள் : 23-08-2017 12:47:41(இந்திய நேரம்)