Primary tabs
-
6.4 தொகுப்புரை
பகுபத உறுப்புகளுள் விகுதி என்பது பகுபதத்தின் கடைசியில் நிற்கும் உறுப்பு என்பதும், எனவே அது இறுதிநிலை என்று அழைக்கப்படுகின்றது என்பதும் விளக்கப்பட்டது. நன்னூல் விகுதிகளின் எண்ணிக்கையை 40 என்று காட்டியுள்ளது எடுத்துக் காட்டுகளுடன் சுட்டப்பட்டது. இந்த விகுதிகள் தெரிநிலை வினைமுற்று விகுதிகள், தன்மை வினைமுற்று விகுதிகள், முன்னிலை வினைமுற்று விகுதிகள், வியங்கோள் வினைமுற்று விகுதிகள், குறிப்பு வினைமுற்று விகுதிகள், என்று வினைப்பகுபத விகுதிகளாக வகைப்படுத்தி விளக்கப்பட்டன. சில விகுதிகள் பெயர்ப்பகுபத விகுதிகளாகவும் அமைகின்ற விதமும் எடுத்துக் காட்டப்பட்டது. இவற்றுடன் பெயரெச்ச, வினையெச்ச விகுதிகளும், தொழிற்பெயர், பண்புப் பெயர் விகுதிகளும், தன்வினை, பிறவினை விகுதிகளும் விளக்கப்பட்டன. தொழிற்பெயர் விகுதிகளில் சில புணர்ந்து கெடும் தன்மையில் அமைந்துள்ளன என்பதும் சுட்டிக் காட்டப்பட்டது.
அடுத்ததாக, பகுபத உறுப்புகளில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் வந்து நிற்கும் உறுப்பான இடைநிலைகள் இருவகைப்படும் என்றும், அவை பெயர், வினை இடைநிலைகள் என்றும் கண்டோம். வினை இடைநிலைகள் இறந்த கால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகள் என்று மூன்று காலத்தைக் காட்டுவதற்குத் தனித்தனியே அமைந்துள்ளன என்பது விளக்கப்பட்டது.
மூன்றாவதாக, காலங்காட்டும் விகுதிகள் டு, டும், று, றும், து, தும், கு, கும், ஆகியவற்றோடு ஏவல் வினை விகுதிகளும், வியங்கோள் வினை விகுதிகளும் காலங்காட்டும் தன்மை, எடுத்துக்காட்டுகளோடு விளக்கப்பட்டது.
சில பகுதிகள் இரட்டித்துக் காலம் காட்டும் தன்மையுடையன என்பதையும் இப் பாடத்தில் கண்டோம்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - II