தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Purananooru

தன் மதிப்பீடு : விடைகள் - I

4. புறநானூற்றின் இரண்டாம் பாட்டின் கருத்தைத்
தருக.

மண் செறிந்த நிலம், நிலத்திற்கு மேல் ஓங்கிய வானம்,
வான்வெளியைத் தடவி வரும் காற்று, அக்காற்றால்
இயக்கப்படும் தீ, அத்தீயோடு மாறுபட்ட நீர் ஆகியன
ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் குணங்களைப் போலப்
பகைவரது பிழையைப் பொறுத்தல், பகைவரை அழிக்கச்
சிந்திக்கும் ஆழ்ந்த சிந்தனையின் அகலம், மனவலி,
பிறரைத் தண்டிக்கும் ஆற்றல், பிறர்க்கு அருள் செய்தல்
ஆகிய குணங்களைக் கொண்ட சேரலாதனே !

அசைந்த கழுத்துமயிர் பொருந்திய குதிரையைக் கொண்ட
பாண்டவர் ஐவரோடு சினம் கொண்டு நிலத்தின்
உரிமையைத் தம்மிடத்தே கொண்ட பொன்னாலாகிய
தும்பைப் பூச்சூடிய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்,
போரிட்டுப்     போர்க்களத்தில்     வீழும் வரையில்
பெருஞ்சோறாகிய மிக்க உணவை நீ இருபடைக்கும்
அளவில்லாது கொடுத்தாய் !

பால் புளித்தாலும் பகல் இருண்டாலும், நான்கு வேத நெறி
மாறுபட்டாலும், வேறுபாடில்லாத சிந்தனைத் திறமைமிக்க
அலுவலர்களுடனே நீங்காமல்     நீ நெடுங்காலம்
நிலைபெறுவாயாக! பாறைகள் அடுக்கிய மலையிடத்தே
பெரிய கண்ணைக் கொண்ட மான் பிணைகள் தம்
குட்டிகளுடன், அந்தணர் வளர்க்கும் வேள்வீத்தீயின்
ஒளியில் தூங்கும்     பொற்சிகரங்களைக் கொண்ட
இமயமலையும் பொதியமலையும் போல நீ அசையாமல்
நிலைபெறுவாயாக ! இது பாட்டின் கருத்துரையாகும்.

முன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:37:31(இந்திய நேரம்)