தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU--நம்பியகப் பொருள்

  • 1.5
    நம்பியகப் பொருள்

    தொன்மைத்தமிழ் நூலான தொல்காப்பியம் பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாக அகப்பொருளை விரிவாக விளக்கியுள்ளது. அடுத்துத் தோன்றிய இறையனார் அகப்பொருள் களவு - கற்பு எனும் இரு பிரிவுகளில் அகத்திணை குறித்த விளக்கம் வழங்குகிறது. அதன் பின் தமிழ்நெறி விளக்கம் என்னும் நூலொன்று சிறிய அளவில் அகப்பொருள் இலக்கணத்தைக் கூறுகின்றது. தொடர்ந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நம்பி அகப்பொருள் என்ற  நூலே  அகப்பொருள் இலக்கணத்துக்கென்று உள்ள ஒரு தனிப்பெரும் நூலாகத் திகழ்கிறது.

    இந்நூலின் ஆசிரியர் நாற்கவிராசநம்பி ஆவார். இவர் புளிங்குடி என்ற ஊரினர். உய்யவந்தான் என்பாரின் மைந்தர். சமண சமயத்தவர். தமிழ், வடமொழி இரண்டிலும் வல்லவர். ஆசுகவி - மதுரகவி - சித்திரக்கவி - வித்தாரக்கவி என்னும் நால்வகைப் பாக்களும் புனையும் ஆற்றல் பெற்றவர். அது கருதியே ‘நாற்கவிராசன்’ என அழைக்கப்பட்டவர். நம்பி, என்பதே இவரது இயற்பெயர்.

    நம்பி தம் அகப்பொருள் நூலுக்கு “அகப்பொருள் விளக்கம்” என்று பெயரிட்டுள்ளார். இவரே நூலுக்கு உரையும் எழுதியுள்ளார். தமது உரையில் பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைச் செய்யுட்களை உதாரணம் காட்டியுள்ளார். தம் நூலைப் பாண்டியன் குலசேகரன் அவையில் அரங்கேற்றியுள்ளார்.

    தொல்காப்பியர் வகுத்துரைத்த அகப்பொருள் இலக்கணத்தை மனத்தில் கொண்டு, சங்கப் புலவர் செய்யுட்களில் காணப்பட்ட கூற்றுகளையும் சேர்த்துச் சிந்தித்துச் சூத்திரம் யாத்து உரையும் வகுத்தார் நாற்கவிராச நம்பி என்று, இந்நூலின் சிறப்புப்பாயிரம் கூறுவது குறிப்பிடத்தக்கது.

    இந்நூல் சிறப்புப்பாயிரத்தோடு தொடங்குகிறது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என்னும் 5 பகுதிகளைப் பெற்றுள்ளது. 252 நூற்பாக்களைக் கொண்டது. இவற்றிலிருந்து அகத்திணை இயல் (116 நூற்பாக்கள்) களவியல் (54 நூற்பாக்கள்) என்னும் இரண்டு இயல்களும் இலக்கணம் 3 (D021) என்னும் தாளுக்குரிய பாடப் பகுதிகளாக உள்ளன. எஞ்சிய வரைவியல், கற்பியல், ஒழிபியல் ஆகிய 3 பகுதிகளும் இலக்கணம் 4 (D022) தாளுக்குரிய பாடப்பகுதிகள் ஆகும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:46:46(இந்திய நேரம்)