Primary tabs
-
1.3 போர்ச் சூழல்
போர் எனில் அதற்கான ஏற்பாடுகளும் பரபரப்பான பேச்சுகளும் இருக்கும். தும்பைப் போர் குறித்த சூழலைத் தும்பை அரவம், தானை மறம், யானை மறம், குதிரை மறம், தார் நிலை, தேர் மறம் முதலான துறைகள் உணர்த்துகின்றன. தும்பை சூடுதலையும், படைவீரர்கள், யானைகள், குதிரைகள், தனி வீரர்கள், தேரின் வலிமை ஆகியன குறித்துப் பேசுதலையும் இப்பகுதி குறிப்பிடுகிறது.
தும்பைப் போரைத் தொடங்கும் ஆரவாரம் என்பது தும்பை அரவம் எனப்படுகிறது. தும்பை சூடிப் போரினை மேற்கொள்ளும் அரசன், தன் படை வீரர்களுக்குப் பரிசில்கள் கொடுத்து உற்சாகப்படுத்துதலை இத்துறை காட்டுகிறது.
பொன்புனைந்த கழல்அடியோன்
தன்படையைத் தலையளித்தன்று (கொளு - 2)‘பொற்கழல் புனைந்த மன்னன் தன் படைவீரர்களுக்குத் தலையளி (சிறப்பு) செய்வான் என்பது கொளுவின் கருத்து. சிறப்புச் செய்தல் என்பது ஊக்கப்படுத்துவதற்கேயாகும். எத்தகைய பொருள்கள் கொடுத்து மன்னன் ஊக்கப்படுத்துவான் என்பதைத் துறைக்குரியை வெண்பா விளக்கமாகக் காட்டுகிறது.
வெல்பொறியும் நாடும் விழுப்பொருளும் தண்ணடையும்
கொல்களிறும் மாவும் கொடுத்தளித்தான் . . . .
. . . . . . . . . . . . . . .. . . . . . . . . . . . .என வெண்பா சிறப்புகளைச் சுட்டுகிறது. போர்ப் பூவாகிய தும்பையையும், நாடுகளையும், சிறந்த பொருள்களையும், மருத நிலத்தையும், களிறு, குதிரை முதலானவற்றையும் பரிசிலாக வழங்குவான். இந்த ஆரவாரமே தும்பை அரவம் எனப்படுகிறது.
காலாட் படைகளின் வீரத்தன்மை என்பது தானை மறம் எனப்படுகிறது. போரின் வெற்றிக்குக் காலாட் படையின் வலிமை இன்றியமையாதது. இத்துறை படைவலிமை குறித்து அரசனுக்கு எடுத்துரைப்பதைக் காட்டுகிறது. இத்துறைக்கு மூன்று கொளுக்கள் தரப்பட்டுள்ளன; மூவகை விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. படைவலிமை குறித்த மாறுபட்ட கருத்துப் பரிமாற்றத்தை இவ் விளக்கங்கள் காட்டுகின்றன.
தாம்படைத் தலைக்கொள்ளாமை
ஓம்படுத்த உயர்புகூறின்று - (கொளு - 3)என்பது முதல் விளக்கம். ‘போரை மேற்கொண்ட இருபடைகளும் தாம் போர் செய்து மடியாமல் காத்த உயர்வைக் கூறுதல்’ என்பது கொளுவின் பொருள். அதாவது, இருபடைகளும் வலிமையில் சமமானவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்பது இதன் நோக்கம் எனலாம். இதனை வெண்பா,
கழுதார் பறந்தலைக் கண்ணுற்றுத் தம்முள்
இழுதார்வேல் தானை இகலில் - பழுதாம்
செயிர்காவல் பூண்டொழுகும் செங்கோலார் செல்வம்
உயிர்காவல் என்னும் உரைஎனக் காட்டுகிறது. ‘பேய்கள் நடமாடும் போர்க்களத்தில் இருபக்க வேற்படையினரும் மோதுதல் தீங்காகும். இத்தீங்கு நடக்காமல் காக்கும் மன்னர்கள் பல உயிர்களையும் காப்பாற்றிய பெருமை உடையவர்கள்.’ போர் மேற்கொள்கையில் இத்தகைய கருத்துகள் கூறப்படுதலுக்கு மாறான கருத்துகளைப் பின்னிரண்டு விளக்கங்கள் காட்டுகின்றன.
இரண்டாம் விளக்கம் படை மடியும் என்றெல்லாம் கருதாமல் போரில் வெற்றி கிடைக்கும் என்பதையே கருத வேண்டும் என்கிறது. இதற்கான கொளு,
பூம்பொழில் புறம்காவலனை
ஓம்படுத்தற்கும் உரித்துஎனமொழிப - (கொளு - 4)‘அரசன் போரினை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம்’ என்பதும் இதன் கருத்து. இதனை வெண்பா,
. . . . . . . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . உயிர்மேல்
பலகழியு மேனும் பரிமான்தேர் மன்னர்க்(கு)
உலகழியும் ஒர்த்துச் செயின்நன்கு சிந்தித்துப் போரில் ஈடுபட்டால் பகைவர் அழிவர் என்பது இதன் கருத்து. அதாவது, அழிவு பற்றிக் கவலை கொள்ளாமல் போரில் ஈடுபடவேண்டும் எனத் தூண்டுவதை இது காட்டுகிறது.
மூன்றாம் விளக்கம் ‘நமது படை போர் செய்தால் பகைப் படை அழிவது உறுதி’ என்கிறது. இதனைக் கொளு,
வேல்தானை மறம்கூறி மாற்றாரது அழிபுஇரங்கினும்
ஆற்றின் உணரின் அத்துறை யாகும் - (கொளு-5)‘வேல் படையின் வீரத்தைச் சொல்லிப் பகைவருடைய அழிவை உறுதிப்படுத்துதல்’ என்பது இதன் பொருள். இதனை வெண்பா,
ஒன்னார் நடுங்க உலாய் நிமிரின் - என்னாங்கொல்
. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .
பாழித்தோள் மன்னர் படைஎனக் காட்டுகிறது. ‘நம்படை எழுந்தால் பகை மன்னர் படை என்னாவது?’ என ஊக்கப்படுத்துதலை இது உணர்த்துகிறது.
போரின் தொடக்க நிலையில் இத்தகைய மாறுபட்ட கருத்துகள் மன்னர்களிடம் கூறப்படுவதைத் தானை மற என்ற துறையில் வெண்பா மாலை ஆசிரியர் காட்டியுள்ளார்.
யானையினது வீரம் என்பது இதன் பொருள். படைப் பிரிவில் யானைப் படையும் பண்டைக் காலம் முதல் இடம் பெறுவதைத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் உணர்த்துகின்றன. படையில் உள்ளவர்கள் தம் படைப்பிரிவிலுள்ள யானைகளின் திறனைப் பேசுவதும் போர் ஊக்கம் தருவதாகும். இத்துறையின் கொளு,
எழும்அரவக் கடல்தானையான்
மழகளிற்றின் மறம்கிளர்ந்தன்று. - (கொளு-6)என்று விளக்குகிறது. ‘கடல் போன்று பரந்ததாகவும் ஆரவாரம் மிக்கதாகவும் இருக்கின்ற படையினைக் கொண்ட மன்னனின் இளம் களிற்றின் வீரத்தைச் சொல்லுதல்’ என்பது இதன் பொருள்.
இதனை வெண்பா,
. . . . . . . . . . . . . . . . . கடற்படையுள்
பேயும் எருவையும் கூற்றும்தன் பின்படரக்
காயும் கழலான் களிறு.என நயம்பட விளக்குகிறது. ‘நம் யானை போரிடப் புகின் உறுதியாக எதிரிகள் அழிவர்; அதனால் உண்ண ஊன் கிடைக்குமெனப் பேய்களும் கழுகுகளும் பின்தொடர்கின்றன. பற்றுவதற்கு உயிர்கள் கிடைக்கும் என கூற்று (எமன்) பின் தொடர்கிறது.’ இவ்வாறு வெண்பா யானையின் வீரத்தைப் போற்றுகிறது. இவ் வெண்பா காண்போர் கூற்றாக அமைந்துள்ளது. அரசனும் வீரர்களும் இத்தகைய கூற்றால் ஊக்கம் கொள்வர்.
குதிரையினது வீரம் என்பது இதன் பொருள். இத்துறை படையிலுள்ள குதிரைப் படைப் பிரிவின் வீரத்தைச் சிறப்பிப்பது. இப்படைப் பிரிவு குறித்தும் தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் குறிப்புகள் உள்ளன.
எறிபடையான் இகல்அமருள்
செறிபடைமான் திறம்கிளந்தன்று - (கொளு-7)‘கொல்லும் படைகளைக் கொண்ட அரசனின் குதிரை போர் செய்யும் திறத்தைச் சொல்லுதல்’ என்பது இதன் பொருள்.
குதிரையின் விரைவு வெண்பாவில் பாராட்டப்படுகிறது.
. . . . . . . . . . . . . வாள்அமருள் - வெந்திறல்
ஆர்கழல் மன்னன் அலங்குளைமா வெஞ்சிலை
வார்கணையின் முந்தி வரும்.‘போர்க்களத்தில் அரசனின் குதிரை, எய்யப்பட்ட அம்பினைப் போல விரைந்து பாயும்’ என்று சிறப்பிக்கிறது வெண்பா. இதுவும் அரசனுக்கும் வீரருக்கும் போர் ஊக்கம் தருவதாகும். குதிரை மறம் என்ற துறை நொச்சித் திணையில் இடம் பெற்றிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
படைவீரரின் வீரநிலை என்பது இதன் பொருள். இத்துறைக்கு இரண்டு விளக்கங்கள் தரப்பட்டிருக்கின்றன. முதல் விளக்கம் வீரன் தன் வீரப் பெருமையைக் கூறுவதாக அமைந்துள்ளது.
முன்எழுதரு படைதாங்குவன்என
மன்னவற்கு மறம்கிளர்ந்தன்று - (கொளு-8)(முன்எழுதருபடை = தூசிப்படை)
‘பகைவரின் தூசிப்படையை நானே தடுத்துவிடுவேன் என அரசனிடம் வீரன் ஒருவன் கூறுதல்’ என்பது இதன் பொருள். போர்க்களத்தில் போரிடுவதற்கு முன்னே வரும் படை ‘தூசிப்படை’ எனப்படும்.
இச்செய்தியை வெண்பா,
உறுசுடர் வாளோ டொருகால் விலங்கில்
சிறுசுடர்முன் பேரிருளாம் கண்டாய் - எறிசுடர்வேல்
தேன் குலாம் பூந்தெரியல் தேர்வந்தே நின்னொடு
பாங்கலா மன்னர் படை.எனச் சுவையான உவமை மூலம் விளக்குகிறது.’
‘வாளுடன் பகையரசனின் பெரும்படையை நான் தடுப்பேன். என் முன் அப்பெரும் படை சிறு விளக்கின் முன் இருள் ஓடுவது போல ஓடும்’ என அரிய உவமை மூலம் வெண்பா புலப்படுத்துகிறது. இது வீரன் கூற்றாக உள்ளது.
இத்துறைக்கான மற்றொரு விளக்கமும் முதல் விளக்கம் போன்றதே. போரில் ஒரு வேந்தனை வேந்தர் பலர் சூழ்ந்து கொள்ளுமிடத்துத் தனி ஒருவனாக வீரன் அவர்களை எதிர்கொள்ளுதல் என்பது தார் நிலை ஆகும்.
ஒருகுடை மன்னனைப் பலகுடை நெருங்கச்
செருவிடைத் தமியன் தாங்கற்கும் உரித்தே - (கொளு-9)என்பது இதற்கான கொளு. இதற்கான வெண்பாவும் சுவைபட இதனை உவமை மூலம் விளக்குகிறது. பகை மன்னர்கள் யானைகளில் மீதிருந்து அவற்றைச் செலுத்தி மன்னனைச் சூழ்ந்து கொள்ள, வீரன் தடுத்து யானைகளை வீழ்த்துவது.
காலால் மயங்கிக் கதிர்மறைத்த கார்முகில்போல்
வேலான்கை வேல்பட வீழ்ந்தனவே.என்னும் அடிகளில் காட்டப்படுகிறது. ‘மேகங்களைக் காற்று கலைப்பதைப் போல, யானைகளைத் தனி வீரன் வீழ்த்தினான்’ என்று அரிய உவமை கூறப்படுகிறது. தொல்காப்பியர் தும்பைத் திணையில் இத்தார் நிலை என்னும் துறையைக் கூறியுள்ளார்.
தேர் மறம் என்பது தேரினது ஆற்றல் என்பது பொருள். யானை, குதிரை முதலானவை மனிதர்களால் இயக்கப்படுவதோடு தாமும் இயங்கும் ஆற்றலுள்ளவை. ஆனால், தேர் அப்படி அன்று; தானாக இயங்காதது. எனவே, தொல்காப்பியர் இது பற்றிக் கூறவில்லை. ஆனால் வெண்பா மாலை ஆசிரியர் காலத்தில் இது ஆற்றல் மிக்க படைப்பிரிவாக இருந்ததால் அவர் தும்பைத் திணையில் இதைச் சேர்த்திருக்கலாம் எனலாம். அரசனது தேரின் சிறப்பை இத்துறை காட்டுகிறது.
முறிமலர்த்தார் வயவேந்தன்
செறிமணித்தேர்ச் சிறப்புரைத்தன்று. - (கொளு-10)(முறி = தளிர், வய = வலிமை)
‘தளிர்கள் கலந்து தொடுக்கப்பட்ட பூமாலையை அணிந்த வலிமை மிக்க வேந்தனுடைய மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரினது சிறப்பைக் கூறுதல்’ என்பது பொருள்.
இந்தத் துறையை விளக்கும் வெண்பா, ‘அரசன் செலுத்தும் தேர், பகைவர்களது முதுகின்மேலே ஊர்ந்து செல்கையில் பகைவரது குருதி பெருகித் தேரின் சக்கரம் செல்லும் வழியிலேயே ஓடி வரும்’ என விளக்குகிறது.
. . . . . . . . . . . . . . . செங்குருதி வெள்ளம்
அருமுரண் ஆழி தொடர - வரும் அரோ
. . . . . . . . . . . . . . ...
ஒட்டார் புறத்தின்மேல் ஊர்ந்து.என்பது வெண்பா அடிகள். தேரின் சிறப்பைக் கூறுவதும் போர் ஊக்கம் தருவதாகும்.