தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

உறழ்ச்சி வெற்றி - 2

  • 2.4 உறழ்ச்சி வெற்றி - 2

    உறழ்ச்சி வெற்றி - 1 என்னும் பகுதியில் அரசனுடைய வெற்றிச் சிறப்புகள் குறித்துப் பார்த்தோம். உறழ்ச்சி வெற்றி -2 என்னும் இப்பகுதியில் பார்ப்பனர், வணிகர், வேளாளர், பொருநர் (ஒப்பு நோக்குபவர்), அறிவர், தாபதர் ஆகியோரது வெற்றிச் சிறப்புகள் குறித்து வெண்பா மாலை தரும் செய்திகளைக் காண்போம். போர்த்திணைகளில் அரசர் குறித்த செய்திகளே கூறப்படுகின்றன. வாகையில் அரசர்கள் பற்றிய செய்திகளோடு, பிறர் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. பார்ப்பன வாகை, வாணிக வாகை, வேளாண் வாகை, பொருந வாகை, அறிவன் வாகை, தாபத வாகை ஆகிய துறைகளில் அவரவர் குறித்த செய்திகள் கூறப்படுகின்றன.

    2.4.1 பார்ப்பன வாகை

    பார்ப்பனரது வெற்றிச் சிறப்பு என்பது இதன் பொருள்.

    கேள்வியால் சிறப்புஎய்தியானை
    வேள்வியால் விறல்மிகுத்தன்று          - (கொளு-9)

    கேள்வி அறிவு மிக்குச் சிறப்பெய்திய அந்தணன், வேள்வி செய்வதால் அடையும் பெருமையைக் கூறுதல்’ என்று பொருள். வேதத்தைக் கரைகண்டு அறவேள்வி செய்து தீவினைகளுக்கு தீயே போல நல்ல நெறியில் வாழும் இயல்பைச் சொல்லுதல்’ என வெண்பா அந்தணருள் வெற்றி பெற்ற அந்தணன் பெருமையை இது காட்டுகிறது.

    2.4.2 வாணிக வாகை

    வாணிகரது வெற்றிச் சிறப்பு என்பது பொருள்.

    செறுதொழிலின் சேண்நீங்கியான்
    அறுதொழிலும் எடுத்துஉரைத்தன்று         - (கொளு-10)

    ‘நெறியற்ற செயல்களைச் செய்ய நாணுகிற வாணிகருடைய அறுதொழில்களை வெற்றிகரமாகச் செய்தலைக் கூறுதல் என்பது பொருள். வெண்பா ஆறு தொழில்கள் எவையென விளக்குகிறது.

    உழுது பயன்கொண்டு ஒலிநிரை ஓம்பிப்
    பகுதிலாப் பண்டம் பகர்ந்து - முழுதுணர
    ஓதி அழல்வழிபட்(டு) ஓம்பாத ஈகையான்
    ஆதி வணிகர்க் கரசு.

    ‘உழுது பயன்கொள்ளல், ஆநிரை காத்தல், பண்டம் விற்றல், ஓதல், வேட்டல், ஈதல் ஆகியவற்றில் சிறப்படைந்தவன் வணிகர்களில் அரசன். இவ்வாறு வெண்பா, வணிக வெற்றியைக் குறிப்பிடுகிறது.

    2.4.3வேளாண் வாகை

    வேளாளர் வெற்றி என்பது பொருள்.

    மேல்மூவரும் மனம்புகல
    வாய்மையான் வழிஒழுகின்று            - (கொளு-11)

    மேற்பட்டவரான அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவரும் விரும்பும் வண்ணம் அவர்கள் இட்ட பணியைச் செய்து முடிக்கும் வேளாளர் வெற்றியைச் சொல்வது என்பது பொருள். மூவரின் ஏவலின்படி செயல்பட்டு, வயலுள் உழுவான் உலகுக்கு உயிர் என்று வெண்பா வேளாளன் சிறப்புரைக்கிறது.

    2.4.4 பொருந வாகை

    பொருநரது (ஒப்பிட்டு நோக்குபவரது) சிறப்பைக் கூறுதல் என்பது பொருள்.

    புகழொடு பெருமை நோக்கி யாரையும்
    இகழ்தல் ஓம்பென எடுத்துரைத் தன்று.         - (கொளு-12)

    புகழும் சிறப்பும் மிக்கவர்கள் பிறர் புகழையும் சிறப்பையும் ஒப்பு நோக்கி (பொருநுதல்) இகழ்தல் கூடாது எனல். அவ்வாறு இருப்பது வெற்றி என்பது கருத்து.

    செருக்கடையக் கூடாதென்ற கருத்து, வெற்றியைக் கருதியே சொல்லப்படுகிறது. வெண்பா இதனை விளக்குகிறது. வெண்பா அமைச்சர் கூற்றாக அரசனுக்கு வெற்றி பெறும் வழி சொல்வதாக அமைந்துள்ளது.

    வெள்ளம்போல் தானை வியந்து விரவாரை
    எள்ளி உணர்தல் இயல்பன்று - தெள்ளியார்
    ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார்
    நீறுமேல் பூத்த நெருப்பு.

    கடல் போல் பெரிய படையை உடையேம் என்று எண்ணிப் பகைவரை இகழ்தல் நல்ல இயல்பன்று. அறிவு மிக்கோர் நீறுபூத்த நெருப்பை அது ஆறிவிட்டது என உறுதிசெய்த பின்பே கையில் எடுப்பர். தம் வலிமை யொன்றையே பெரிதெனக் கருதாது பிறர் வலிமையையும் ஆராய்ந்து செயல்பட வேண்டும்; அப்போதுதான் வெற்றி கிட்டும் என்பது இதன் கருத்து.

    2.4.5 அறிவன் வாகை

    முக்கால உணர்வு பெற்ற சான்றோர் வெற்றி என்பது இதன் பொருள்.

    புகழ்நுவல முக்காலமும்
    நிகழ்புஅறிபவன் இயல்பு உரைத்தன்று.         - (கொளு-13)

    ‘உலகோர் புகழும் வண்ணம் முக்காலத்தையும் உணர்ந்த அறிவனுடைய இயல்பைச் சொல்லுதல் என்று பொருள். இறப்பு, நிகழ்வு, எதிர்வு எனும் மூன்று கால நிகழ்ச்சிகளையும் உணர்ந்து கூறும் ஆற்றலுடையவரை அறிவன் என்பர். வெண்பா, அறிவரை கீழ், மேல், நடு என்னும் மூன்று உலகத்திற்கும் ஒளி ஊட்டும் கதிரவனோடு ஒப்பிட்டுப் பேசுகிறது; இவர்கள் சொல் என்றும் தவறுடையதாகாது என்றும் கூறுகிறது.

    2.4.6 தாபத வாகை

    தாபதர் வெற்றி என்று பொருள். தாபதர் எனில், தவம் செய்யும் முனிவர். தாபதம் எனில் நோன்பு (புலனடக்கம்) என்று பொருள்.

    தாபத முனிவர் தவத்தொடு முயங்கி
    ஓவுதல் அறியா ஒழுக்குரைத் தன்று        - (கொளு-14)

    ‘தவம் செய்பவர்கள் தாம் செய்யும் தவத்தோடு பொருந்தி, அவ்வொழுக்கத்திலிருந்து பிறழாத தன்மை என்பது பொருள். வெண்பா, தவம் செய்யும் முறை குறித்தும் பெறும் சிறப்புக் குறித்தும் பேசுகிறது.

    நீர்பலகால் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடையாச்
    சோர்சடை தாழச் சுடர்ஓம்பி - ஊரடையார்
    கானகத்த கொண்டு கடவுள் விருந்தோம்பல்
    வானகத்(து) உய்க்கும் வழி.

    நீரில் பலகாலும் மூழ்கி, தரையிலே படுத்து, மரவுரியை உடுத்து, நெகிழ்ந்த சடை தொங்க, தீயைப் பேணி, மக்கள் வாழும் ஊரின் கண் காட்டிலுள்ள காய், கனி, கிழங்கு, இலை முதலியவற்றை உணவாகக் கொண்டு, கடவுள் வழிபாடும், துறவோர் வழிபாடும் செய்தல் தம்மைத் துறக்க உலகத்திற்குச் செலுத்தும் வழியாகும். தவச்சிறப்பும் வெற்றியும் வெண்பாவில் கூறப்பட்டுள்ளது.

     

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    வாகை என்ற பெயர் ஏற்படக் காரணம் என்ன?
    2.
    மறக்கள வழி என்றால் என்ன? அத்தன்மையில் அமைந்த இலக்கியம் எது?
    3.
    பின் தேர்க்குரவை என்பது யாது? அதை வெண்பா எந்த உவமையால் விளக்குகிறது?
    4.
    அறிவன் என்பவர் யார்?
    5.
    தாபதர் வாகை என்பதனை விளக்குக.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 18:59:41(இந்திய நேரம்)