தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Diploma Course - D02144- காஞ்சிப் பொதுவியல்

  • 4.5. காஞ்சிப் பொதுவியல்

    அரசனுக்குரிய உறுதிப்பொருள்களின் இயல்பு இப்பகுதியில் கூறப்படுகிறது. இதனால் பொதுவியல் திணையில் இவை இடம் பெறுகின்றன. அவை முதுமொழிக் காஞ்சி, பெருங்காஞ்சி, பொருள்மொழிக்காஞ்சி, புலவர் ஏத்தும் புத்தேள் நாடு, முதுகாஞ்சி, காடுவாழ்த்து ஆகிய துறைகளில் விளக்கப் படுகின்றன.

    4.5.1. முதுமொழிக் காஞ்சி

    இதனைக் கொளு,

    பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
    உலகியல் பொருள்முடி(பு) உணரக்கூ றின்று

    என விளக்குகிறது. ‘பலராலும் புகழப்படும் அறிவுடையோர் மாசற்ற அறம் முதலிய உறுதிப் பொருள்களின் இயல்பு இன்னதென. ஆராய்ந்து கூறிய செய்திகளைக் கூறுதல்’ என்பது பொருள். வெண்பா, சில உறுதிப் பொருள்களை எடுத்துக்காட்டுகிறது. ‘அருளுடைமையே அறம்; சேர்த்து வைக்காமல் வறியவர்களுக்குக் கொடுப்பதே செல்வம்; கணவன் விருப்பப்படி செயல்படும் கற்புடைய பெண்ணுடன் வாழ்வதே உண்மையான இன்பம்’ ஆகியவற்றை வெண்பா குறிப்பிடுகிறது.

    4.5.2. பெருங்காஞ்சி

    இதனைக் கொளு,

    மலைஓங்கிய மாநிலத்து
    நிலையாமை நெறிஉரைத்தன்று

    என விளக்குகிறது. ‘மலைகள் ஓங்கிய இம்மாநிலத்தின் நிலையாத தன்மையைச் சொல்லுதல்’ என்பது பொருள். ‘இவ்வுலகம் நிலையற்றது. இன்றோ நாளையோ எமன் நம்மைத் தேடி வரக்கூடும்; பாடுபட்டுப் பெரும்பொருளைச் சேர்த்து வைத்து, வறியோர்க்கு வழங்காது வாழ்க்கையைப் பாழாக்கிக் கொள்ள வேண்டாம்’ என வெண்பா நிலையாமை உணர்ந்து, நிலைத்ததைச் செய்ய வேண்டுகிறது.

    4.5.3. பொருள்மொழிக் காஞ்சி

    கொளு இதற்கு,

    எரிந்(து) இலங்கு சடைமுடி முனிவர்
    புரிந்து கண்ட பொருள்மொழிந்(து) அன்று

    என விளக்கமளிக்கிறது. ‘சடைமுடி முனிவர் தெளிந்து கூறும் உண்மையைச் சொல்லுதல்’ என்பது பொருள். ‘தீதான மயக்கத்திலே இருக்காமல் அகன்ற பூமியில், பெருமைமிக்க சடை தாங்கிய முனிவரின் வழியில் சென்று அருள் பெறுவாய் நெஞ்சே’ என வெண்பா இதனை மேலும் விளக்குகிறது.

    4.5.4. புலவர் ஏத்தும் புத்தேள் நாடு

    புலவர் போற்றும் மேலுலகம் என்பது பொருள். கொளு,

    நுழைபுலம் படர்ந்த நோய்அறு காட்சி
    விழைபுலம் கடந்தோர் வீடுஉரைத்(து) அன்று

    என விளக்குகிறது. ‘நுண்ணிய அறிவினால் புலனடக்கம் மிக்கவர்கள் விரும்பும் மேல் உலகத்தைப் பற்றிச் சொல்லுதல்’ என்பது பொருள். வெண்பா மேலுலகத்தின் தன்மையை விளக்குகிறது.

    பொய்யில் புலவர் புரிந்துறையும் மேலுலகம்
    ஐயம் ஒன்று இன்றி அறிந்துரைப்பின் - வெய்ய
    பகலின்(று) இரவின்று பற்றின்று துற்றின்(று)
    இகலின்(று) இளிவரவும் இன்று

    ‘உண்மை ஞானிகள் எய்தும் வீட்டு உலகம் இரவும்பகலும் அற்றது; பாசம் அற்றது; உணவு அற்றது; மாறுபாடற்றது; தாழ்வற்றது’ என அதன் தன்மையை விளக்குகிறது வெண்பா.

    4.5.5. முதுகாஞ்சி

    நிலையாமை பற்றியது இத்துறை. இதனைக் கொளு,

    தலைவரும் பொருளைத் தக்காங்(கு) உணர்த்தி
    நிலைநிலை யாமை நெறிப்பட உரைத்தன்று

    என்று விளக்குகிறது. ‘மலோன உறுதிப் பயன்களை நன்கு உணர்த்தி வீடுபேற்றின் நிலைத்த சிறப்பினையும் பிறவற்றின் நிலையாமையையும் உணர்த்தல்’ என்பது பொருள். இளமைப் பருவம் தளர, மூப்பினால் உடலில் கூனல் தோன்ற, இளமை நிலையாமை, யாக்கை நிலையாமை இவற்றை உணர்ந்து பற்று அறுத்து உலகத் தொடர்பினின்றும் விலகிப் போதலே மேம்பட்ட செயலாகும்’ என வெண்பா விளக்குகிறது.

    4.5.6. காடுவாழ்த்து

    சுடுகாட்டை வாழ்த்துதல் என்பது பொருள். கொளு இதனை,

    பல்லவர்க்(கு) இரங்கும் பாடுஇமிழ் நெய்தல்
    கல்என ஒலிக்கும் காடுவாழ்த் தின்று

    பலருக்கும் சாவின்போது ஒலிக்கப்படும் சாப்பறை, சுடுகாட்டை வாழ்த்துவது போன்று இருப்பதைக் கூறுதல் என்பது பொருள். ‘இவ்வுலக இயல்பை நமக்கு உணர்த்தும் சுடுகாடு, பலரும் அழியவும், தான்மட்டும் அழியாமல் நிற்கிறது’ என நிலையாமையின் நிலைத்த தன்மையை வெண்பா உணர்த்துகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 05:18:00(இந்திய நேரம்)