Primary tabs
-
பாடம் - 5
D05115: சிறுதெய்வக் கோயில்களும் பிறசமய கோயில்களும்இக்காலக் கோயிற் கட்டடக் கலை வரலாற்றுக்குத் துணை செய்யும் முன்னோடியாக நாட்டுப்புறவியல் அணுகுமுறை பற்றிக் கூறுகிறது. சிறுதெய்வக் கோயிலமைப்பும் அதனால் ஊருக்குக் கிடைக்கும் பாதுகாப்பும் பற்றிக் குறிப்பிடுகிறது.
பண்டைக் காலத்தில் சிறுதெய்வ வழிபாட்டுக்கு அடிப்படைக் காரணங்கள் எப்படி அமைந்தன என்பது கூறப்படுகிறது.
நாகர் வழிபாடு பண்டைக் காலத்திலிருந்தே வழிவழியே வந்துள்ளது என்பதும், பெருந்தெய்வக் கோயில்களிலும் அதன் தாக்கம் உள்ளது என்பதும் விளக்கப்படுகின்றன.
ஐயனார் கோயில்கள் கிராமங்களி்ல் அமைந்துள்ளன என்பது விவரிக்கப்படுகிறது. சாத்தனே ஐயனாராக வழிபடப்படுகின்றார் என்பதும் ஆராயப்படுகின்றது.
சுடலைமாடன், கருப்பசாமி, முனீசுவரன் கோயில்கள் எப்படியெல்லாம் சிற்றூர் மக்களுக்குக் காவல் நிறுவனங்களாக அமைந்துள்ளன என்பதும் விளக்கப்படுகின்றது.
இயக்கி எனும் பெண்தெய்வம் கோயில் கொண்டுள்ள இடங்கள் பற்றிக் கூறப்படுகின்றது.
சப்தமாதர் இடங்கொண்டுள்ள கோயிலும் கோயில்வளாகமும் பற்றிக் கிடைக்கும் வரலாற்றுச் செய்திகள் கூறப்படுகின்றன. சேட்டை வழிபாடு கோயிலில் இடங்கொண்டுள்ளமை பற்றி விவரங்கள் தரப்படுகின்றன.
பௌத்தர்கள் சமணர்கள் ஆகியோரின் வழிபாட்டிடங்கள் பற்றியும் ஆசிரமங்கள் பற்றியும் கிறித்துவர் இசுலாமியர் வழிபாட்டிடங்கள் பற்றியும் செய்திகள் தரப்படுகின்றன.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
-
நாட்டுப் பண்பாடு, பழக்கவழக்கங்கள் பற்றி அறிய, ஆராய்ச்சியினை நாட்டுப்புற ஆய்விலிருந்து தொடங்க வேண்டுமென்பது அறிஞர்களின் கொள்கை. அதற்கேற்ப நாட்டுப்புறவியல் நோக்கில் மக்கள் குடிசையினையும் தெய்வத்திற்குரிய சிறுகோயிலையும் கட்டிய பாங்கினைத் தெரிந்து கொள்ளலாம்.
-
நாட்டு நலத்துக்குச் சுற்றுப்புறச்சூழல் தூய்மையாக அமைதல் வேண்டும்; அதற்குரிய வாய்ப்பினைச் சிறுதெய்வக் கோயில்கள் அளிக்கின்றன என்பதை அறியலாம்.
-
சக்தியின் ஆட்சியே உலகைக் காக்கிறது என்பதற்கேற்பச் சிறுதெய்வங்களுள் பெண் தெய்வங்களே மிகுதியாக உள்ளன என்பது தெரிய வருகிறது.
-
நாடெங்கும் பரந்து பட்ட நிலையில் உள்ள நாகர் வழிபாடு, பெருந்தெய்வங்களிடத்தும் நாகர் தாக்கம் இருப்பது ஆகியவை பற்றிய சிந்தனைகள் ஒப்பீட்டாய்வுக்குத் துணை நிற்கும்.
-
ஐயனார், சுடலைமாடன், கருப்பசாமி, முனீசுவரன் கோயில்கள் ஊருக்குப் பாதுகாப்பளிக்கும் என்பது சமய நம்பிக்கையின் பயன்பாடாகும்.
-
இயக்கி, சப்தமாதர், சேட்டை முதலிய தெய்வங்களுக்குக் கோயில்களில் இடம் தருவது வரலாற்று அடிப்படையில் சிந்திக்கத்தக்க கருத்துகளாகும்; ஆக, இத்தகைய செய்திகளெல்லாம் மக்களின் மனவளர்ச்சியைப் பொறுத்து அமைந்தவை என்பது தெரிய வரும்.
-
பௌத்தம் , சமணம் , கிறித்துவம் , இசுலாமியம் ஆகிய சமய வழிபாட்டிடங்கள் குறித்து அறிவது சமய நல்லிணக்கத்தையும் சமயத்தாக்கங்களையும் அறிய வாய்ப்பளிக்கும்.
-