தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட முன்னுரை

  • 3.0 பாட முன்னுரை

    உலோகத்தால் செய்யப்படும் இறையுருவங்களையும் மனித உருவங்களையும் செப்புத் திருமேனிகள் எனப் பொதுவாகக் கருதுவர். தமிழகத்தில் பல்லவர், சோழர், பாண்டியர், விசய நகர நாயக்க மன்னர்கள் காலங்களில் பல்வகைப் பட்ட செப்புத் திருமேனிகள் வடிக்கப் பட்டன. இவை பொதுவாகக் கோயில் திருவிழாக்களின் போது திருவீதி உலா வருவதற்காக எடுத்துச் செல்லப் படுவதற்காகவே வடிக்கப் பட்டன. செம்பு, வெள்ளி, தங்கம், பித்தளை, தகரம் ஆகிய ஐந்து உலோகங்களின் கலவையினால் செய்யப் படுவதால் இவற்றைப் ‘பஞ்சலோகப் படிமங்கள்’ என்றும் கூறுவர்.

    சுடுமண் சிற்பங்கள் இந்தியாவில் தொன்று தொட்டுச் செய்யப் பட்டு வருகின்றன. சிந்து சமவெளி நாகரிகக் காலத்திற்குச் சற்று முந்திய காலத்திலேயே இவ்வகைச் சிற்பங்கள் செய்யப் பட்டன. இதனைப் பலுச்சிஸ்தானத்தில் குல்லி, ஜோப் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அகழ்வாய்வின் மூலம் அறிய முடிகிறது. சிந்து சமவெளிப் பகுதியிலும் ஏராளமான சுடுமண் சிற்பங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இந்தியாவின் பிற பகுதிகளிலும், தமிழகத்திலும் சுடுமண் சிற்பங்கள் செய்யப்பட்டன. இன்றும் அவை     வழக்கிலிருக்கின்றன. சுதைச் சிற்பங்கள் செய்து அவற்றிற்கு வண்ணம் தீட்டுவதும் தமிழகத்து மரபுகளில் ஒன்றாகும். சுதைச் சிற்பங்கள் இரண்டு வகையாகச் செய்யப் படுகின்றன. ஒன்று கோயில்களிலும், கோபுரங்களிலும் நிரந்தரமாகச் செய்து வைப்பது. மற்றொன்று திருவிழாக்களுக்காகத் தற்காலிகமாகச் செய்து திருவிழா முடிந்ததும் உடைத்தோ அல்லது நீரில் கரைத்தோ விடுவது என்று வகைப்படுத்திச் செய்யப் படுவதாகும். இவை தவிர நவ பாஷாணக் கலவை, கடு சர்க்கரைக் கலவைச் சிற்பங்களும் தமிழகத்தில் செய்யப்பட்டன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:51:12(இந்திய நேரம்)