தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

New Page 1-2.8 வினாவிடைப் போக்கு உரைநடை

  • 2.8 வினாவிடைப்போக்கு உரைநடை

    இது, பண்டைய இலக்கிய இலக்கண உரையாசிரியர்கள்பால் காணலாகும் ஒருபொதுப்பண்பு ஆகும். உரையை ஒரு மாணவனுக்குக் கூறுவது போன்று அமைக்கும் வினாவிடைப்போக்கு ஆகும். ஒருவினாவையும் அதற்கு இருக்கும் விடையையும் ஒருங்கு சேர்த்து உரைநடையில் அமைக்கும் போது அவற்றை ‘எனின்’ என்ற சொல்லாலே தொடுத்து ‘என்பது’ என்ற சொல்லால் முடிப்பதுபண்டைக் காலத்தில் பெரு வழக்காக இருந்தது என்பர்.
     

    ஆசிரியன் மாணவனுக்கு ஒன்றை விளக்கும் போது எழுப்பும்கடாக்களும் (வினாக்களும்) அவற்றிற்கு அவன் கூறும் விடைகளும்பேச்சில் எவ்வாறு அமையுமோ, அவ்வாறே எழுத்திலும் அமைதலைமேலே காட்டிய (இறையனார் களவியல் உரை ப.9) உரைப்பகுதியிற் காணலாம் என்று அறிஞர் வி.செல்வநாயகம் கூறிவிட்டுப் பின்வருமாறு அவ்வுரைப் பகுதியினை வினா-விடையாக அமைத்துக் காட்டுவார்.
     

    ஆசிரியன்

    :

    இனிப் பயனென்பது இது கற்க இன்னது பயக்கும்.

    மாணாக்கன்

    :

    இது கற்க இன்னது பயக்கு மென்பதறியேன் ; யான் நூற்பொருள் அறிவல்.

    ஆசிரியன்

    :

    சில்லெழுத்தினான் இயன்ற பயன் அறியாதாய், பல்லெழுத்தினான் இயன்ற நூற்பொருள் எங்ஙனம் அறிதியோ பேதாய்? இன்னது பயக்குமென்பது அறிய வேண்டும்.

    மாணாக்கன்

    :

    என் பயக்குமோ இது கற்க?

    ஆசிரியன்

    :

    வீடுபேறு பயக்கும்.

    இவ்வாறு அமையும் உரைநடையும் ஒரு வகையில்நயமுடையதாகவே அமைகின்றது எனலாம். மிக நீண்ட உரைப்பகுதிகளையும் வினாவிடையான முறையில் அமைத்துக்காட்டுதல் உரையாசிரியரின் பண்பாக அமைந்துள்ளது.
     

    கேட்கப்படும் வினாவே விடையாக அமையும் வண்ணம் அண்ணாவின் நடை அமைந்திருப்பதைக் காணலாம்.
     

    ‘அவர் (பெரியார் ஈ.வெ.ரா) பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித் திணறாத பழமை உண்டா? எதைக் கண்டு அவர் திகைத்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது? எனவேதான், பெரியாருடைய பெரும்பணியை நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல ஒரு சகாப்தம், ஒரு காலகட்டம், ஒரு திருப்பம் என்று கூறுகிறேன்.’ இளைஞரைக் கவர்வதற்கு நீண்ட வாக்கிய அமைப்பைத் தமது நடையில் அண்ணா கையாண்டார்.
     

    அறிஞர் அண்ணா அவர்களின் மதுரைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாச் சொற்பொழிவின் ஒரு பகுதியைக் காண்போம் :
     

    “பட்டம் பெற்றிடுகின்றீர் ! பல்கலை வல்லுநர் ஆகின்றீர் ! பல்கலைக்கழகம் ஈன்றெடுத்து நன்மணிகளாகுகின்றீர் ! ஆம் ! ஆயின் இஃது முடிவா, தொடக்கமா? அஃதே கேள்வி ! பட்டம் பெற்றுள்ளீர்! பாராட்டுக்குரியீர். ஐயமில்லை. ஆயின் பட்டம் எதற்கு? காட்டிக் களித்திடவா? அன்றிப் பணி செய்திடக் கிடைத்த ஆணையெனக் கொண்டிடவா? நுமக்கா? நாட்டுக்கா? பொருள் ஈட்டிடவா? நாட்டுப் பெருமையினைக் காத்திடவா? எதற்கு இப்பட்டம் பயன்பட இருக்கிறது? அஃதே கேள்வி ! விழாத் தந்திடும் மகிழ்ச்சியுடன் இழைந்து நம் செவி வீழ்ந்திடும் கேள்வி, பட்டம் பெற்றிடும் சிறப்புடையீர் ! நீவிர் திருவிளக்கு, பொற்குவியல், புள்ளிக் கலாப மயில்-கார்மேகம்-நாட்டைச் செழிக்கச் செய்திடும் வல்லுநர்கள், இசைபட மக்கள் வாழ உமது ஆற்றலை ஈந்திட வந்துள்ளீர்.”
     

    இளைஞர் தாம் பெற்ற பட்டத்தை எதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.
     

    அடுக்குமொழி நடை அண்ணாவுக்கு இயல்பாக அமைந்ததொன்றாகும். இவ்வாறு வினா எழுப்பி விடைகூறும் நடைக்கு அண்ணாவின் மொழிநடையை உதாரணமாகக் கருதலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2018 17:08:13(இந்திய நேரம்)