தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நாடக மாந்தர்கள்

  • 4.3 நாடக மாந்தர்கள்

    மனோன்மணீய நாடகத்தில் இடம்பெறும் முக்கியப் பாத்திரப் படைப்புகளாகப் பின் வருபவர்களைக் கூறலாம்.

    சீவக வழுதி
    -
    பாண்டிய நாட்டு அரசன்
    மனோன்மணி
    -
    சீவக வழுதியின் மகள்
    சுந்தரமுனிவர்
    -
    சீவக வழுதியின் குலகுரு
    குடிலன்
    -
    சீவக வழுதியின் முதல் மந்திரி
    நிட்டாபரர் கருணாகரர்
    -
    சுந்தர முனிவரின் சீடர்கள்
    வாணி
    -
    மனோன்மணியின் தோழி
    நடராசன்
    -
    வாணியின் காதலன்
    நாராயணன்
    -
    சீவக வழுதியின் துணைவன்
    பலதேவன்
    -
    குடிலனின் மகன்
    சகடன்
    -
    வாணியின் தந்தை
    புருடோத்தமன்
    -
    சேரநாட்டு மன்னன்

    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை ஒவ்வொரு பாத்திரத்தையும் அதனதன் தேவைக்கு ஏற்பத் திட்டமிட்டு அமைத்து இருக்கிறார். கதைப் போக்கின்படி ஒவ்வொருவரும் எந்த எந்த இடத்தில் வரவேண்டுமோ அந்தந்த இடத்திலேயே வருகின்றனர்; எவ்வளவு பேச வேண்டுமோ அவ்வளவே பேசுகின்றனர். காதலனாய், காதலியாய், தூதுவனாய், இயற்கையின் இரசிகனாய், அருள் சுரக்கும் உள்ளத்தினனாய், அறிவுத் திறம் மிக்கோனாய், சூழ்ச்சியில் வல்லவனாய், சூதுமதி படைத்தவனாய் எனப் பல பண்புகள் கொண்ட பாத்திரப் படைப்புகள் நாடகத்துக்குள் அமைந்து அழகும் கலையும் சேர்க்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாகக் காண்போம்.

    4.3.1 மனோன்மணி
    மனோன்மணி

    இவள் நாடகக் காப்பியத்தலைவி; நற்குணங்களின் உறைவிடம்; நற்பண்புகள் நிறைந்தவள்; தியாகம் புரியத் தயங்காத மங்கை. நாடகத்தில் மனோன்மணியை அறிமுகப்படுத்தும் பொழுதே அவளது பண்பு நலன்கள் வெளியிடப்படுகின்றன. சுந்தரமுனிவர், நகரவாசிகள் என மற்றவர்களின் வாக்காகவே மனோன்மணி அறிமுகப்படுத்தப்படுகிறாள்.

    ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியர், வெனிஸ் வணிகன் (The Merchant of Venice) என்னும் தம் நாடகத்தில் நாடகத் தலைவியை நேரடியாக அறிமுகப்படுத்தாமல், அவள் காதலன் பெசானியோ (Bassanio) மூலம் அறிமுகப்படுத்துவார். மற்றவர்களைக் கொண்டு அறிமுகப்படுத்தும் இந்த உத்தி முறையைத் தான் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையும் கையாள்கிறார்.

    ஒரு நகரவாசி மனோன்மணியை எவ்வாறு உயர்வு படுத்திக் கூறுகிறான் என்பதை அறியலாம்.

    பாற்கடல் கீண்டு எழு மதி

    வையத்து அவள்போல் மங்கையர் உளரோ !
    அன்பே உயிராய் அழகே யாக்கையாய்
    மன்பேர் உலகுசெய் மாதவம் அதனால்
    மலைமகள் கருணையும் கலைமகள் உணர்வும்
    கமலையின் எழிலும் அமையவோர் உருவாய்
    பாண்டியன் தொல்குலம் ஆகிய பாற்கடல்
    கீண்டு எழு மதியென ஈண்டு அவதரித்த
    மனோன்மணி அன்னையை வாழ்த்தார் யாரோ
                  (அங்கம் 1 : களம் 1 : 128-135)

    (யாக்கை = உடல்; கமலை = இலக்குமி; எழில் = அழகு; ஈண்டு = இங்கு)

    என்று மனோன்மணியைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

    4.3.2 வாணி

    அறிவு, அழகு, அன்பு, காதல், இசைத்திறம், நட்பு என அனைத்து நற்பண்புக் கூறுகளையும் உடையவள் வாணி. மன்னன் சீவக வழுதி ஆனாலும், தவப் பெரியோர் சுந்தர முனிவர் ஆனாலும் எவரிடமும் தன் கருத்தைத் துணிச்சலாகக் கூறும் இயல்பினை உடையவள்.

    வாணி எந்த அளவிற்குத் துணிவு உடையவள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டினைக் காணலாம்.

    ‘வாணி நடராசனைக் காதலிக்கிறாள். இது தெரியாமல் வாணியின் தந்தை சகடரின் சொல்லைக் கேட்டுச் சீவகன் வாணியிடம் அவள் காதலை விட்டு விடச் சொல்கிறான். தந்தையின் விருப்பப்படி மணம் செய்து கொள்வதே முறை என்கிறான். அடுத்த கணமே வாணி மன்னனுக்குப் பதில் கூறி விடுகிறாள். விருப்பம் இல்லாமல் செய்கின்ற திருமணம் நாசத்தையே விளைவிக்கும் என்னும் பொருளில்,

    நேசமில் வதுவை நாச காரணமே

    (வதுவை = திருமணம்)

    என்று கூறி மன்னன் கருத்தையே மறுத்து விடுகிறாள்.

    அன்பே ஆக்கப்படும் பொருள் ஆமோ

    என வாணி மன்னனிடம் கேட்கும் கேள்வியில், அவள் உள்ளத்தின் உறுதி வெளிப்படுகிறது. மேலும்

    இரும்பும் காந்தமும்
     

    நின்ற காதலின் நிலைமை நினைவில்
    இரும்பும் காந்தமும் பொருந்தும் தன்மைபோல்
    இருவர் சிந்தையும் இயல்பாய் உருகி
    ஒன்றாம் தன்மை அன்றி ஒருவரால்
    ஆக்கப்படும் பொருள் ஆமோ?

    என்று காதல் உணர்வின் சிறப்பினை மன்னனிடம் கூறுகிறாள். அரைக்கின்ற சந்தனம் தானே மணக்கும் என்று சீவகன் கூறினால் ‘கரையான் அரித்து எந்தச் சந்தனமும் மணப்பதில்லை’ என்று சுடச் சுடப் பதில் தருகிறாள். இவ்வாறு காதலின் பெருமையை வெளிப்படுத்துகிறாள்.
     

    4.3.3 சீவகனும் குடிலனும்

    ஒரு நாடகத்துக்குக் கூடுதலான கலையைச் சேர்ப்பவை முரண்கள் ஆகும். நாடகத்தில் ஒரு காட்சியை அழகுபடுத்துவதற்காகச் சில இயற்கைப் பின்னணியை முரணாக அமைப்பர். சில நேரங்களில் பாத்திரப் படைப்புகளையே முரணாக அமைப்பர்.

    மனோன்மணீயத்தில் சீவகன், குடிலன் பேச்சுக்கு மகுடியின் இசைக்கு மயங்கும் பாம்பைப் போல் கட்டுப் படுகிறான். ஆயினும் இருவரும் முரண்பட்ட பாத்திரப் படைப்புகளே.

    நடிக்கவே தெரியாதவன் சீவகவழுதி; நடிப்புக் கலையில் வல்லவன் குடிலன். உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாதவன் சீவகவழுதி. உள்ளத்தில் தனக்குச் சாதகமான திட்டத்தைத் தீட்டிக் கொண்டே வெளியே மன்னனுக்கு ஏற்றாற்போல் பேசுபவன் குடிலன். ஒவ்வொன்றையும் நேர்நிலையில் (Positive) பார்ப்பவன் சீவகன். ஒவ்வொன்றையும் எதிர்நிலை (Negative) யில் பார்ப்பவன் குடிலன்.

    இதோ! சீவகனையும் குடிலனையும் நாராயணன் எவ்வாறு மதிப்பிடுகிறான் பாருங்கள். சீவகனைப் பற்றிக் கூறும்போது,

    ............................................. சீவகா ! சீவகா !
    முற்றுநான் அறிவன் நின்குற்றமும் குணமும்
    குற்றம் மற்று என்உள கூறற்கு உன்வயின் !
    வித்தையும் உன்பெரும் சத்திய விருப்பும்
    உத்தம ஒழுக்கமும் எத்துணைத்து ஐயோ !
    வறிது ஆக்கினையே வாளா அனைத்தும்
    அறியாது ஒருவனை அமைச்சாய் நம்பி

    (வறிது = பயன்இன்மை; வாளா = அலட்சியம்)

    என்று சீவகனின்குணநலன்களையும் வெண்மையான உள்ளத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறான் நாராயணன்.

    சீவகனே ! சீவகனே ! உன்னிடம் இருக்கும் குற்றம் குணம் ஆகிய இரண்டு பண்புகளையும் முற்றும் நான் அறிவேன். உன்னிடம் குற்றம் என்று கூறுவதற்கு என்ன இருக்கிறது ! சத்தியத்தையே விரும்புபவன் நீ; உயர்ந்த ஒழுக்கம் உன்னிடம் எவ்வளவு இருக்கிறது ! ஐயோ ! இவை அனைத்தையும் பயன் இல்லாமல் ஆக்கிவிட்டாயே ! அலட்சியமாய் (நோக்கம் இல்லாமல்) இருந்து விட்டாயே ! நல்லது எதையுமே தெரியாத ஒருவனை அமைச்சனாய் நம்பி விட்டாயே ! என்று கூறிப் புலம்புகிறான்.

    குடிலனைப் பற்றிக் கூறும்போது இதற்கு எதிராக மதிப்பீடு செய்கிறான்.

    ............................ குடிலனோ
    சூதே உருவாய்த் தோன்றினன் அவன்தான்
    ஓதுவ, உன்னுவ, செய்குவ யாவும்
    தன்னயம் கருதி அன்றி மன்னனைச்
    சற்றும் எண்ணான் மற்றும் சாலமா
    நல்லவன் போலவே நடிப்பான்

    (சூது = சூட்சி, தீய எண்ணம்; ஓதுவ = படிப்பது, சொல்லித் தருவது, பேசுவது; உன்னுவ = நினைப்பது; தன்னயம் = சுயநலம்; சால = மிகவும்; மா = பெருமை, சிறப்பு) என்று கூறுகிறான்.

    குடிலன் தீய எண்ணமே வடிவானவன். அவனுடைய பேச்சும் நினைப்பும் செயலும் ஆகிய யாவும் தன்னலம் கருதியதே ஆகும். மன்னனின் நலத்தைச் சிறிதும் நினைக்காதவன். ஆனாலும் மிகவும் பெருமை உடையவன் போலவும், நல்லவன் போலவும் நடிப்பவன் என்று குடிலனின் குணநலன்களை மதிப்பீடு செய்கிறான்.

    சேரமன்னன் புருடோத்தமனுக்கும் பாண்டியன் சீவக வழுதிக்கும் இடையே நடந்த போரில் சீவகன் தோற்பது உறுதி என்று தெரிந்தவுடன் குடிலன் சேர மன்னனிடம் தான் அரசு அமைப்பதற்காகப் பேரம் பேசத் துணிகிறான். அதுவரை பாண்டியன் நிழலிலேயே அண்டிவாழ்ந்த குடிலன் இப்போது தானே அரசனாகும் முயற்சியில் ஈடுபடுகிறான். தான் செய்யும் செயலுக்கு உரிய நியாயத்தையும் கற்பிக்கிறான்.

    இராமாயணத்தில் வீடணன் இராமனிடம் சேர்ந்து அவனுக்குச் செய்ததை நினைவூட்டித் தானும் அவ்வாறே புருடோத்தமனுக்கு உதவி செய்வதாகக் கூறுகிறான்.

    இராமன்

    பண்டு இராகவன் பழம்பகை செற்று
    வென்றதோர் இலங்கை விபீஷணன் காத்தவாறு
    இன்றுநீ வென்றநாடு இனிது காத்திடுவேன்
    (அங்கம் 5 : களம் 1, 142-144)

    (செற்று = அழித்து)

    என்று கூறுகிறான். குடிலன் இராமாயணத்தில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசுவதைச் சாத்தான் திருமறையில் இருந்து மேற்கோள் காட்டிப் பேசுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இவ்வாறு, குடிலன் தீய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளான்.

    4.3.4 சுந்தர முனிவர்
    சுந்தர முனிவர்

    சுந்தர முனிவரின் படைப்பு மிகவும் கண்ணியமாக அமைந்த ஒன்றாகும். கருணையே வடிவானவராக அவர் படைக்கப் பட்டு இருக்கிறார். இவர் துறவியர் என்பதற்காக எங்கோ காடு மேடுகளில் அலைந்து கடும் தவம் புரிபவராக நாடகத்தில் காட்டவில்லை. மக்களுடன் மக்களாகக் கலந்து மக்கள் நலம் விரும்புபவராகவே படைக்கப் பட்டிருக்கிறார். அதனால்தான் நாடகத்தின் தொடக்கமே சுந்தர முனிவரை வைத்தே தொடங்குகிறது.

    சுந்தர முனிவர் தன் அரண்மனைக்கு வருகை புரிவது கண்ணபிரானே வருவதைப் போன்றது என்று கூறிச் சீவக வழுதி மகிழ்கிறான்.

    சிவந்த அடிகள்; மலர்ந்த மதிமுகம்; கருணைஒழுகும்
    கண்கள்; பரிவு காட்டும் புன்னகை; பால்போல் நரைத்த தலை;
    குற்றமற்ற பேச்சு; கருணையைத் தாங்கிய உடல்

    என்று சுந்தர முனிவரைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை படம் பிடித்துக் காட்டுகிறார். சீவகன் மீதும், வாணியின் மீதும் அன்பும், கருணையும் கொண்டுள்ள ஒரு சிறந்த பாத்திரப்படைப்பு.

    4.3.5 நடராசன்

    வாணியின் காதலன் நடராசன். இவன் இயற்கையின் இரசிகன். இறைமையின் தத்துவத்தை இயற்கையில் கண்டு களிப்பவன். அறிவுமிக்கவன்; நுண் அறிவு உடையவன்; சிறுமை கண்டு பொங்கி எழுபவன்; சுந்தர முனிவரின் அன்புக்கும் அருளுக்கும் உரிமை உடையவன். அரண்மனையில் இரகசிய வழி அமைக்க சுந்தர முனிவர் நினைத்த போது அதைச் செயல்படுத்திக் காட்டியவன் நடராசனே. இத்தகைய பேராற்றல் அவனுக்கு எங்கு இருந்து வந்தது என்பதைச் சொல்ல வந்த நாடக ஆசிரியர் அவனது காதல் உணர்வே அப்பேராற்றலை வழங்கியது என்கிறார்.

    பின்னிய கூந்தல் பேதையின் இளமுகம்
    என்உளத்து இருந்துஇங்கு இயற்றுவது இப்பணி
    அதனால் அன்றோ இதுபோல் விரைவில்,
    இவ்வினை இவ்வயின் இனிதின் முடிந்தது

    என்று நடராசனே கூறுவதாகப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை கூறுகிறார்.

    காதல் உணர்வில் மட்டுமன்றிப் போர்க்களத்திலும் நடராசன் வீரத்துடன் போராடுகிறான். அஃறிணைப் பொருள்கள் முதல் ஆறறிவு படைத்த மாந்தர் வரை அனைவரையும் ஆழமாக அறிந்தவனாக நடராசன் விளங்குகிறான்.

    4.3.6 நாராயணன்

    நாராயணன் உண்மையைப் போற்றிப் பொய்யைத் தூற்றும் உள்ளத்தவன். குடிலனின் தீய எண்ணத்தை நன்கு உணர்ந்தவன். அதனால் குடிலனுக்கு நாராயணனைப் பிடிக்காது. குடிலனின் பொய் வேடத்தையும் போலி வாழ்வையும் வஞ்சக நெஞ்சத்தையும் நாராயணன் நன்கு உணர்ந்தவன். அதனால் தான் குடிலன் நாராயணனை வெறுக்கிறான்.

    பாண்டிய மன்னன் சீவக வழுதிக்கு உள்ளும் புறமுமாய் மிகப் பெரும் காவலாய் விளங்கியவன் நாராயணன். இருப்பினும் குடிலனின் கொடிய போதனையால் சீவகன் நாராயணனை வெறுத்துக் கழுவேற்றிக் கொல்லும்படி ஆணையிடுகிறான்.

    வெருவிலேன் சிறிதும்; வேந்தேநின் விதிக்கே
    அறியாய் ஆயின் இதுகா றாயும்
    வறிதே மொழிகுதல் ! வாழ்க நின் குலம் !
    (அங்கம் 4 : களம் 4, 136-138)

    (வெருவுதல் = அச்சம்; வறிது = பயனின்மை)

    என்று தன் இறப்பைப் பற்றிக் கூடக் கவலைப் படாமல் மன்னர் குலம் தழைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறான். இத்தகைய சிறப்பு மிகுந்த பாத்திரமாக நாராயணன் படைக்கப் பட்டுள்ளான்.
     

    4.3.7 புருடோத்தமன்

    இவன் சேரநாட்டு வேந்தன். மனோன்மணீய நாடகத்தில் மூன்று களங்களில் மட்டுமே இவன் வருகிறான்.

    1) குடிலனின் மகன் பலதேவன் புருடோத்தமன் அரசவைக்குத் தூதுபோன களம்.

    2) இரகசிய வழியில் சென்ற குடிலன் எதிர்பாராமல் படைவீட்டிற்கு அருகில் புருடோத்தமனைச் சந்தித்த களம்.

    3) மனோன்மணி புருடோத்தமனுக்கு மாலையிட்டு அவன் தோள்களில் சாய்ந்து மயங்கிய களம்.

    இந்த மூன்று களங்களிலேயே நாடக ஆசிரியர் புருடோத்தமனைக் கதை நாயகனாக்கி விடுகிறார்.

    குடிலன் புருடோத்தமன் பேரழகைப் பின்வருமாறு கூறுகிறான்.

    புருடோத்தமன் என்னும் பொருநைத் துறைவன்
    காண்டகும் ஆண்தகை என்றும், ஞானம்
    மாண்ட சிந்தையன் என்றும், யாண்டும்
    திரியும் தவசிகள் உரைசெய, யானும்
    கேட்டதுண்டு.......................................
    (அங்கம் 2 : களம் 1, 18-21)

    (பொருநை = தாமிரபரணி ஆறு; துறைவன் = அரசன்; ஆண்டகை = பெருமையில் சிறந்தவன்; மாண்ட= சிறப்பு பொருந்திய தவசிகள் = தவம் செய்வோர்)

    மேலும் சிறந்த வீரன், கனவில் கண்ட காதலியையே மணக்க விரும்பிய மாண்புடையவன். ஒரு சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் மனத்தில் நிலைத்து நிற்கும் பாத்திரம்.

    4.3.8 பலதேவன்

    குறுமதி படைத்த குடிலனின் மகன்; சிற்றின்பமே வெற்றி என்னும் சிறுமதி படைத்தவன்; காமக் களியாட்டத்தில் மயங்கிக் கிடப்பவன்; இவை எவற்றையும் அறியாமல் சீவகன் அவனைப் பலவாறு புகழ்கிறான்.

    தந்தையின் சூழ்ச்சித் திறம் பலதேவனுக்கு இல்லை. ஆனால் காமவெறி ஓங்கி நிற்கிறது. புருடோத்தமனிடம் தூதுவனாகச் சென்று நிகழ்த்திய முதல் உரையாடலிலேயே தான் ஒரு முட்டாள் என்பதை உறுதிப்படுத்தி விடுகிறான். எந்தக் காமம் பலதேவனை ஆட்டிப் படைத்ததோ அதுதான் அவனைப் போர்க்களத்தில் தாக்குகிறது. தான் கற்பழித்துக் கைவிட்ட ஒருத்தியின் மகனால் இவன் தாக்கப்படுகிறான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2018 15:57:10(இந்திய நேரம்)