Primary tabs
5.4 மடல் ஏறக் காரணம் கூறுதல்
திருமாலிடம் காதல் கொண்ட தலைவி, அவன் அழகில் மயங்கி, பலவாறு துன்பம் அடைகின்றாள். அவனை அடைவதற்காக மடல் ஏற முற்படுகின்றாள். அப்போது தான் மடல் ஏறுவதற்கு உரிய காரணங்களைக் கூறுகின்றாள்.
பல்வேறு திருத்தலங்களில் எழுந்தருளி இருப்பவன் திருமால். அப்படிப்பட்ட திருமால் மலை போன்ற தோள்களை உடையவன். அவனை நான் திருநறையூரில் கண்டேன். அவனை வணங்கினேன். என் நிலையை எடுத்துக் கூறினேன். இருந்தும் கூட அவன் தன் மார்பையும் திரு அருளையும் தரவில்லை. இதை எல்லா இடமும் சென்று கூறுவேன் என்கிறாள்.
மன்னு மணிமாடக் கோயில் மணாளனை
கல்நவில்தோள் காளையைக் கண்டுஆங்குக் கைதொழுது
என்நிலைமை எல்லாம் அறிவித்தால் எம்பெருமான்
தன்அருளும் ஆகமும் தாரானேல் - தன்னை நான்
மின்இடையார் சேரியிலும் வேதியர்கள் வாழ்இடத்தும்
தன்அடியார் முன்பும் தரணி முழுதுஆளும்
கொல்நவிலும் வேல்வேந்தர் கூட்டத்தும் நாட்டகத்தும்
தன்நிலைமை எல்லாம் அறிவிப்பேன்
(அடிகள் : 266-273)(நவில் = போன்ற; தாரானேல் = தராவிட்டால்; மின் இடையார் = மின்னலைப் போன்ற இடையை உடைய பெண்கள்; சேரி = ஊர்; தரணி = உலகம்)
திருமாலின் இச்செயலைப் பெண்கள் வாழும் ஊர்களிலும், அந்தணர்கள் வாழும் இடங்களிலும், அடியார்களிடத்தும், மன்னர்களிடமும் அறிவிப்பேன் என்கிறாள்.
முன்பு இவன் இடையர்கள் வாழும் ஊரில் சென்று வெண்ணெய் திருடச் சென்று ஆய்ச்சியர்களால் உரலுடன் கட்டப்பட்டான்.
ஆயர்கள் விழாவில் வண்டிகளில் கொண்டு வந்த உணவு முழுவதையும் உண்டான்.
துரியோதனனிடம் பாண்டவர்களுக்காகத் தூது சென்று, இகழப்பட்டான்.
குடக்கூத்து என்ற நடனம் ஆடினான்.
இராவணனின் தங்கையாகிய சூர்ப்பணகையின் மூக்கை அறுத்தான்.
விசுவாமித்திரர் என்ற முனிவருக்காகத் தாடகையைக் கொன்றான்.
இவற்றைப் போன்று பல்வேறு செயல்களை இவன் செய்துள்ளான். இச்செயல்களை உலக மக்கள் அறியும்படி வெளிப்படுத்துவேன். அதற்காக அழகிய பனை மடலைக் கொண்டு செய்த மடல் ஏறுவேன் என்கிறாள், தலைவி.
....................................................... மற்றுஇவைதான்
உன்னி உலவா உலகுஅறிய ஊர்வன்நான்
முன்னி முளைத்துஎழுந்து ஓங்கி ஒளிபரந்த
மன்னிய பூம்பெண்ணை மடல்(அடிகள் : 294-296)
(உன்னி = நினைத்து; உலவா = வருந்தி, குலைந்து; முன்னி = படர்ந்து; உலகு = உலகமக்கள்; பெண்ணை = பனை)
என்கிறாள்.