தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

மொழி பெயர்ப்பில் பல்கலைக்கழகங்கள் - நிறுவனங்களின் பங்களிப்பு

  • 3.3 மொழிபெயர்ப்பில் பல்கலைக்கழகங்கள் - நிறுவனங்களின் பங்களிப்பு

    மொழிபெயர்ப்பை, தனி ஆட்கள் செய்வதற்கும் நிறுவனங்கள் செய்வதற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இந்தப் பணியை நிறுவனங்கள் செய்யும்போது மொழிபெயர்ப்பின் தரத்தை மதிப்பிடலாம். பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுக்கும் போதோ, கலைச்சொற்களைத் தேர்வு செய்யும்போதோ குழு அமைத்து அவற்றில் சிறந்த முடிவுக்கு வர வாய்ப்பு ஏற்படும். இந்த வகையில் பல்கலைக்கழகங்களின் பங்களிப்புப் பற்றியும் குறிப்பாக அறிவியல் நூல்கள் மொழிபெயர்ப்புப் பற்றியும் பிற நிறுவனங்கள் மொழிபெயர்ப்புத் துறையில் ஆற்றும் பணிகள் குறித்தும் பார்க்கலாம்.

    3.3.1 அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    அறிவியல் நூல்களை மொழிபெயர்ப்பதிலும், பாட நூல்களைத் தமிழில் உருவாக்குவதிலும் தொடக்க காலத்திலேயே தனது பங்களிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செய்துள்ளது. குறிப்பாக அறிவியல் தமிழ் வளர்ச்சியில் அது காட்டிய அக்கறை என்று கூட மதிப்பிடலாம்.

    1938ஆம் ஆண்டிலேயே கல்லூரி நிலையில் தமிழில் அறிவியலைப் பாடமாகப் பயிற்றும் வகையில் வேதியியல் (Chemistry) நூல்களின் இரண்டு தொகுதிகளை மொழிபெயர்ப்பாகவும், தழுவலாகவும் தமிழில் தயாரித்து வெளியிட்டது.

    அவ்வாறே 1941ஆம் ஆண்டு இயற்பியல் (Physics) நூலின் இரு தொகுதிகளை அதேபோன்று தயாரித்து வெளியிட்டது.

    3.3.2 பிற பல்கலைக்கழகங்கள்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்றவை, அறிவியல் தமிழ் நூல்களை உருவாக்குவது, கலைச்சொற்களைத் துறை வாரியாக உருவாக்குவது, அவற்றைக் கொண்டு தமிழ் நூல்களை அந்தந்தத் துறை வல்லுநர்களைக் கொண்டு எழுதுவிப்பது, கருத்தரங்குகளை நடத்தித் தமிழாக்கப் பணிகளை ஊக்குவிப்பது, ஆதார நூல்களை வழங்குவது போன்ற பல வழிகளில் பணியாற்றி வருகின்றன.

    டாக்டர். வா.செ.குழந்தைசாமி அவர்கள் துணைவேந்தராக இருந்தபோதிலிருந்து அண்ணா பல்கலைக்கழகம் வழியாக ‘களஞ்சியம்’ என்ற காலாண்டு இதழும் வெளிவருகிறது. ‘அறிவியல் இலக்கியக் கழகம்’ என்ற அமைப்பும், அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து, 1987இல் அறிவியல், தொழில்நுட்பச் செய்திப் பரிமாற்றம் என்ற இருவாரக் கருத்தரங்கை நடத்தி எந்தெந்த வகைகளில் அறிவியல் தமிழை வளர்க்கலாம் என்று ஆய்ந்தன. அதில் மொழிபெயர்ப்புக் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    3.3.3 நிறுவனங்கள்

    பிற துறை மொழிபெயர்ப்பு என்ற நிலையில் குறிப்பாக அறிவியல் செய்திகளை மொழிபெயர்ப்பது என்ற பணியில் ‘தமிழ்க் கலைக்களஞ்சியங்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பணியாற்றியுள்ளன. 1954-1963 ஆகிய ஒன்பது ஆண்டுகளில் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் 9 தொகுதிகளாக வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தில் ஏராளமான துறைகளில் மொழிபெயர்க்கப்பட்ட செய்திகள் வெளியிடப்பட்டன.

    அதேபோன்று குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளும் பெரியசாமித் தூரனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளியிடப்பட்டன.

    இதே காலக்கட்டத்தில் 1954இல் தொடங்கப்பட்ட தென்மொழிகள் புத்தக நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை, மூலவடிவத்திலும், மொழிபெயர்ப்பாகவும் வெளியிட்டுள்ளது. பொதுமக்களும் படிக்கும் அளவிற்கு எளிய நடையில் அவை எழுதப்பட்டுள்ளன. முதல்முறையாகத் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான பற்றவைப்பு (Welding), உருவமைக்கும் பொறி (Shaping machine), தச்சுத் தொழில் (Carpentry) போன்ற நூல்களைத் தமிழில் பட விளக்கங்களுடன் அந்த நிறுவனம் வெளியிட்டது.

    1951இல் தொடங்கப்பட்ட நியூசெஞ்சுரி புத்தக நிறுவனம் பல அரசியல் நூல்களையும் ரஷ்ய, சீன நூல்கள் பலவற்றையும் மொழி பெயர்த்துள்ளது. அத்துடன் அறிவியல் போன்ற புதுத்துறைகள் சார்ந்த தொடக்க நூல்கள் பலவற்றையும், மருத்துவ நூல்கள், WHO சார்பில் வெளிவந்த சுகாதார நூல்கள், செவிலியருக்கான கையேடுகள் எனப் பல நூல்களை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. மின்னணுவியல், மின் பாதுகாப்பின் அடிப்படைகள் போன்ற ரஷ்ய நூல்களை மொழிபெயர்த்து மொழிபெயர்ப்புத் துறையில் பங்காற்றியுள்ளது.

    கல்லூரி மாணவர்களுக்குப் பயன்படும் வகையில் பல்வேறு துறைகள் சார்ந்த பாடநூல்களைத் தமிழில் வெளியிடுவதற்கு என்று அமைக்கப்பட்ட தமிழ் நூல் வெளியீட்டுக் கழகம் (Bureau of Tamil Publications) என்ற நிறுவனம், கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல் பாமரரும் படித்துப் பயனடையும் வகையில் நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் 30க்கும்மேல் அறிவியல் நூல்களாகும். அவை மொழிபெயர்ப்பாகவும் மூல நூலாகவும் அமைந்துள்ளன.

    இந்த நிறுவனம் பிற்காலத்தில் தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனமாக மாறியது. மத்திய அரசின் நிதியுதவியுடன், கல்லூரி மாணவர்கள் தமிழில் கற்பதற்காக எல்லாத் துறைகளிலும் மொழிபெயர்ப்பாகவும், மூலநூலாகவும், தழுவலாகவும் பெருமளவில் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 12-09-2017 12:45:52(இந்திய நேரம்)