தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 2.3 ஒன்பதாம் திருமுறை-2.3 ஒன்பதாம் திருமுறை

  • 2.3 ஒன்பதாம் திருமுறை
    E

    2.3.1 திருவிசைப்பா

    திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் ஒன்பதாம் திருமுறையாகக் கொள்ளப்படுகின்றன. திருவிசைப்பாவை, திருமாளிகைத் தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பி காடநம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருடோத்தம நம்பி, சேதிராயர் என்னும் ஒன்பதின்மர் பாடியுள்ளனர். திருப்பல்லாண்டு சேந்தனாரால் பாடப்பட்டுள்ளது. ஒன்பதாம் திருமுறையுள் திருவிசைப்பா 28 பதிகங்களையும், திருப்பல்லாண்டு ஒரு பதிகத்தையும் கொண்டுள்ளது. இந்நூலுள் 14 சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன. 6 பண்களில் இவ்விசைப்பாடல்கள் அமைந்துள்ளன. தேவாரப் பதிகங்களுள் காணப்படாத சாளரபாணி என்ற பண் திருவிசைப்பாவில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இருநூல்களும் 201 பாடல்களைக் கொண்டுள்ளன. தேவாரப் பாடல் பெறாத கங்கை கொண்ட சோழபுரம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை இராசராசேச்சரம், திருவிடைக்கழி ஆகிய எட்டுத்தலங்கள் திருவிசைப்பா ஆசிரியர்களால் பாடப்பெற்றுள்ளன.

     

    திருவிசைப்பாவில் திருமாளிகைத் தேவர் பாடிய பதிகங்கள் நான்கு. இவை அனைத்தும் தில்லைக்கு உரியன. சேந்தனார் பாடிய பதிகங்கள் மூன்று. திருவீழிமிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி ஆகிய மூன்று தலத்திற்கு இவரது திருவிசைப்பா அமைந்துள்ளது. கருவூர்த்தேவர் பாடிய பதிகங்கள் பத்து. இவை கோயில், திருக்களந்தை, திருக்கீழ்க் கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கைகொண்ட சோழபுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை, திருவிடைமருதூர் முதலிய பத்துத் தலங்களுக்கும் தலத்துக்கு ஒன்றாக அமைந்துள்ளன. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவாரூர், கோயில் எனும் இரு தலங்களையும் ஒவ்வோர் பதிகத்தால் பாடிச் சிறப்பித்துள்ளார். கண்டராதித்தரும், வேணாட்டடிகளும் கோயில் மீது ஒவ்வோர் பதிகம் பாடியுள்ளனர். திருவாலியமுதனார் கோயில் குறித்து நான்கு பதிகங்கள் பாடித் தந்துள்ளார். கோயில் குறித்துப் புருடோத்தம நம்பி இரண்டு பதிகங்களும், சேதிராயர் ஒரு பதிகமும் பாடியுள்ளனர். ‘கோயில்’ என்ற தனிச்சொல் சைவ சமயத்தில் எப்பொழுதும் தில்லைக் கோயில் ஒன்றையே குறிக்கும். தில்லையைச் சிதம்பரம் என்றும் இக்காலத்து வழங்குவர்.

     

    திருவிசைப்பா

    ஆசிரியர்

    தலம்

    பதிகம்

    திருமாளிகைத்
    தேவர்

    தில்லை

    4

    சேந்தனார்

    திருவீழிமிழலை
    திருவாவடுதுறை
    திருவிடைக்கழி

    3

    கருவூர்த் தேவர்

    கோயில்
    திருக்களந்தை
    திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
    திருமுகத்தலை
    திரைலோக்கிய சுந்தரம்
    கங்கை கொண்ட சோழபுரம்
    திருப்பூவணம்
    திருச்சாட்டியக்குடி
    தஞ்சை
    திருவிடைமருதூர்

    10

    பூந்துருத்தி நம்பி
    காடநம்பி

    திருவாரூர்
    கோயில்

    2

    கண்டராதித்தர்

    கோயில்

    1

    வேணாட்டடிகள்

    கோயில்

    1

    திருவாலியமுதனார்

    கோயில்

    4

    புருடோத்தம நம்பி

    கோயில்

    2

    சேதிராயர்

    கோயில்

    1

    28


    திருப்பல்லாண்டு

    சேந்தனார்

    கோயில்

    1

    2.3.2 திருவிசைப்பாவில் முருகன்

     

    ஒன்பதாம் திருமுறை, திருவிசைப்பாப் பதிகங்கள் பலவும் தேவாரப் பனுவல்களைப் போலவே சிவன் பெருமை பேசி நின்றன. இத்திருமுறையுள் புதுவரவாய் சேந்தனார் பாடிய திருவிடைக்கழிப் பதிகம் சிவகுமாரனாகிய முருகன் மீது பாடப்பட்டுள்ளது. பஞ்சமம் என்ற பண்ணில் அமைந்த இப்பதிகத்தில் பதினொரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஒன்பதாம் திருமுறையில் இப்பதிகம் இணைக்கப் பெற்றமை, பின் வந்த பதினொராம் திருமுறையுள் விநாயகர் மற்றும் சிவன் அடியார்கள் மீது பாடப்பட்ட பாடல்களும், பனுவல்களும் இணைக்கப்படுவதற்கு வழிகோலியதாகக் கொள்ளலாம். இப்பதிகத்தில் முருகன் சிறப்புகள் பலவாறு விரித்துரைக்கப்பட்டுள்ளன. பாடல்கள் அந்தாதித் தொடை மரபில், செவிலி ஒருத்தியின் கூற்றாக அமைந்துள்ளன.

    மாலுலா மனம்தந்து என்கையில் சங்கம்
        வௌவினான் மலைமகள் மதலை
    சேல்உலாம் தேவர்குலம் முழுது ஆளும்
        குமரவேள் வள்ளி தன் மணாளன்
    சேல்உலாம் கழனித் திருவிடைக் கழியில்
        திருக்குரா நீழல்கீழ் நின்ற
    வேல்உலாம் தடக்கை வேந்தன் என்சேந்தன்
        என்னும் என் மெல்லியல் இவளே

    (ஒன்பதாம் திருமுறை - 69)

    (மாலுலா மனம் = மயக்கம் நிகழ்கின்ற மனம், வௌவினான் = கவர்ந்தான், சங்கம் = சங்கு வளையல், குரா = ஒருவகை மரம். மலைமகள் = உமை, மதலை = குழந்தை, சேந்தன் = முருகன்) முருகன் மீது காதல்கொண்ட இளமகள் ஒருத்தியின் காதல் மிகுந்த கலக்க மொழிகளைச் செவிலி எடுத்துரைப்பதாக இப்பதிகம் அமைந்துள்ளது.

    2.3.3 திருப்பல்லாண்டு

    ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருப்பல்லாண்டு 13 பாடல்களைக் கொண்டது. ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்தும் வாழ்த்தினைப் ‘பல்லாண்டு’ என்று முதற்குறிப்பில் வழங்கியுள்ளனர். வைணவத்தில் பல்லாண்டு கூறும் பாடல்கள் உண்டு. அவற்றைப் பின்பற்றிச் சைவத்திலும் பல்லாண்டு பாடும் வழக்கம் வந்திருக்கக்கூடும். திருப்பல்லாண்டு உரையாசிரியர்,

    இறைவன் என்றும் உள்ளவன்
    ஆதலின்,வாழ்த்துவார்வாழ்த்தும்
    வாழ்த்தினானாதல், வைவார் வையும்
    வைவினானாதல்
    அவனுக்கு வருவது ஒன்று
    இல்லையாயினும்,வெகுளியுற்றார்க்கு
    அவ்வெகுளி காரணமாக அவனை வைதல்
    இயல்பாதல் போல,
    அன்புற்றார்க்கும் அவ்வன்பு காரணமாக
    அவனைவாழ்த்தலும்
    இயல்பாதலின், அடைக்கும்தாழ்
    இல்லாதஅவ்வன்பின்செயல்
    அவர்மாட்டு இயல்பானே வெளிப்படுவதாம்’

    என இப்பதிகம் தோற்றம் கொண்டதற்கான காரணத்தை ஒருவாறு ஆராய்ந்து உரைத்துள்ளார். கோபம் கொண்டவர் ஏசுதல் போல, அன்பு கொண்டார் வாழ்த்துதல் இயல்பேயாகும். அவ்வாழ்த்தே பல்லாண்டு என வந்தது என்பது இதன் கருத்து.

    2.3.4 பல்லாண்டு - அழகிய தொடர்கள்

    பல்லாண்டுப் பாடல்கள் யாவும் நிறைவில் ‘பல்லாண்டு கூறுதுமே’ என ஒரேமாதிரியாக அமைந்துள்ளன. தில்லை அம்பலவன் சிறப்புரைத்தலே அதிகமாகப் பதிகத்துள் நிறைந்துள்ளது. சிவன்

    ‘பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தன்’

    என்றும்,

    ‘அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்’

    என்றும்,

     


    ‘சிற்றம்பலமே இடமாகப் பாவித்து நடம் பயிலவல்லான்’



    என்றும்,

    ‘பாதகத்துக்குப் பரிசு வைத்தான்’

     

    என்றும் வரும் அழகிய தொடர்கள் திருப்பல்லாண்டில் இடம்பெற்றுள்ளன.

    மிண்டு மனத்தவர் போமின்கள்:
    மெய் அடியார்கள் விரைந்து வம்மின்:
    கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசர்க்குஆட்
    செய்மின்: குழாம் புகுந்து
    அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர்
    ஆனந்த வெள்ளப் பொருள்
    பண்டும் இன்றும் என்றும் உள்ள
    பொருள்என்றே பல்லாண்டு கூறுதுமே
        

    (ன்பதாம் திருமுறை: திருப்பல்லாண்டு - 2)

    (மிண்டு மனம் = இளகாத மனம், குடிகுடி = குடும்பம் குடும்பமாக, குழாம் = கூட்டம்) என்ற அழகிய பாடலில் இறைவனாகிய சிவன் என்றும் நிலைபேறுடையவன் என்பது தெளிவுறுத்தப்பட்டுள்ளது.



    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    திருமுறை என்பதன் பொருள் யாது?
    2.
    பஞ்சபுராணம் என்பவை யாவை?
    3.
    ஒன்பதாம் திருமுறையுள் இடம்பெற்றுள்ள இரு நூல்கள் யாவை?
    4.
    திருவிசைப்பா பாடப்பெற்ற புதிய தலங்கள் நான்கினைக் குறிப்பிடுக.
    5.
    ஒன்பதாம் திருமுறையுள் இடம்பெற்ற முருகனுக்கு உரிய தலம் எது? பாடிய ஆசிரியர் பெயர் என்ன?
    6.
    திருப்பல்லாண்டு - ஆசிரியர் - பாடப்பெற்ற தலம் - பாடல் தொகை குறிப்பிடுக.
புதுப்பிக்கபட்ட நாள் : 15-09-2017 15:54:24(இந்திய நேரம்)