தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Saivam - 4.3 தடுத்தாட்கொண்ட புராணம்-4.3 தடுத்தாட்கொண்ட புராணம்

  • 4.3 தடுத்தாட் கொண்ட புராணம்

    முதற் படலத்தின் ஆறாவது பகுதி தடுத்தாட் கொண்ட புராணம். பெரிய புராணத்தின் மிக உன்னதமான பகுதி இது என்று கூறலாம். சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அவதாரம். திருவெண்ணெய் நல்லூர் அரசன் நரசிங்க முனையரையன் சுந்தரரை அரண்மனையில் அன்பு பாராட்டி வளர்த்தமை, புத்தூர் சடங்கவி சிவாசாரியார் மகளை மணம் பேசியமை,

    திருமணத்தில் சிவபெருமான் முதிய வேதியராய் எழுந்தருளி, ஓலை காட்டித் திருமணத்தைத் தவிர்த்துச் சுந்தரரைத் தடுத்து ஆட்கொண்டமை, திருவெண்ணெய் நல்லூர் சிவாலயமாகிய திருவருட்துறையில் சிவபெருமான் மறைந்து தம்மைப் பாடுமாறு பணித்தமை, எவ்வாறு பாடுவது என்று சுந்தரர் திகைத்து நின்ற போது ‘பித்தா’ என்று அடி எடுத்துக் கொடுத்துச் சிவபெருமான் பாடுமாறு செய்தமை என்றெல்லாம் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
    ................அன்பின் பெருகிய சிறப்பில் மிக்க
    அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
    சொல்தமிழ் பாடுக என்றார் தூமறை பாடும்வாயார்
    (216)
    (தூமறை = தூய்மைமிக்க வேதங்கள்)

    என்ற அழகிய, தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் இறைமை சார்ந்த மொழிகளும்,

    முன்பு எனைப் பித்தன் என்றே மொழிந்தனை ஆதலாலே
    என் பெயர் ‘பித்தன்’ என்றே பாடுவாய்
    (219)

    என்ற திருவருட் குறிப்பு மொழிகளும் இப்பகுதியில் இடம் பெற்றுள்ளன.

    4.3.1 பரவையார் திருமணம்

    மேலும் தலயாத்திரை மேற்கொண்ட சுந்தரர் திருத்துறையூரில் தவநெறி அருளப் பெற்றதும், திருவதிகை எல்லைப் பகுதியில் சிவன் திருவடி சூட்டப் பெற்றதும், தில்லைச் சிற்றம்பலவனை வணங்கிப் பேரின்ப வெள்ளத்துள் திளைத்ததும், தோணிபுரத்தில் (சீகாழி) இறைவன் திருக்காட்சி காட்டக் கண்டு மகிழ்ந்ததும், திருவாரூரில் இறைவன் தம்மைச் சுந்தரருக்குத் தோழமையாகத் தந்ததும், சுந்தரர் 'தம்பிரான் தோழர்’ என அழைக்கப்பெற்றதும், இறைவன் கட்டளைப் படி திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்தில் பிறந்திருந்த பரவையாரைக் கண்டு ஆரூர்ப் பெருமான் அருள் துணையோடு அவரை மணந்து மகிழ்ந்ததும் இப்பகுதியில் நிரல்பட விரித்துரைக்கப்பட்டுள்ளன.

    4.3.2 திருத்தொண்டத் தொகை

    திருவாரூரில் வாழ்ந்து வரும் நாளில் திருக்கோயில் முன்பகுதியில் அமைந்திருந்த தேவாசிரியன் மண்டபத்தில் சிவன் அடியார் பலர் கூடியிருக்கக் கண்ட சுந்தரர், தாம் அன்னாருக்கு அடிமை பூண வேண்டும் என்று விரும்பினார். திருவாரூர் இறைவன் சிவன் அடியார்களின் பெருமைகளை அசரீரியாக எடுத்துரைத்தான்.

    பெருமையால் தம்மை ஒப்பார்
        பேணலால் எம்மைப் பெற்றார்
    ஒருமையால் உலகை வெல்வார்
        ஊனம் மேல் ஒன்றும் இல்லார்
    அருமையாம் நிலையில் நின்றார்
        அன்பினால் இன்பம் ஆர்வார்
    இருமையும் கடந்து நின்றார்
        இவரை- நீ அடைவாய்
    (342)

    என்று அடியவர் பெருமையை இறைவன் எடுத்துக் கூறக் கேட்ட சுந்தரர் மகிழ்ந்தார். இறைவன் அடியார் பெருமைகளை விரித்து நீ பாடுக என்று ஆணையிட்டு, ‘தில்லை வாழ் அந்தணர்’ என்று அடி எடுத்தும் கொடுத்து அருளினார். சுந்தரர் சிவன் அருள் கட்டளையை ஏற்று 11 பாடல்களால் அடியவர் பெருமை கூறும் - வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தொண்டத்தொகை என்ற பதிகத்தைப் பாடி வழங்கினார். அதில் முன் குறித்தவாறு 60 தனியடியார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. அவ்வடியார் வரலாற்றை இனி நான் விரித்துரைப்பேன் என்று கூறிச் சேக்கிழார் நாயன்மார் வரலாறுகளை இரண்டாவது சருக்கம் முதலாக விரித்துரைத்துள்ளார்

    4.3.3 திருத்தொண்டத்தொகை - அமைப்பு

    திருத்தொண்டத் தொகையில் ஆண் அடியார்கள் 58 பேரும், பெண் அடியார்கள் இருவரும் இடம் பெற்றுள்ளனர். சேக்கிழார் காப்பிய நாயகராகிய சுந்தரர், அவர் தந்தை சடையனார், தாயார் இசை ஞானியார் ஆகிய மூவரையும் இணைத்து நாயன்மார் தொகையை 63 ஆக உயர்த்தியுள்ளார். பெண் அடியவர்கள் மூவருள் இசை ஞானியார் வரலாறுடன் இணைந்து வந்து விடுகிறது. மங்கையர்க்கரசியார் வரலாறு திருஞான சம்பந்தர் வரலாற்றுள் விரித்துரைக்கப்பட்டு விடுகிறது. எனவே, இவ்விருவர் வரலாறுகளும் தனியே மிகச் சுருக்கமாகவே பாடி அமைக்கப்பட்டுள்ளன. காரைக்கால் அம்மையார் வரலாறு ஒன்று மட்டுமே விரித்துரைக்கப்பட்டுள்ளது. திருத்தொண்டத் தொகையில் இடம் பெறாது அடியவர்கள் அருள் வரலாற்றில் இடம் பெற்றுள்ள திலகவதியார், திருவெண்காட்டு நங்கை, கமலவதி முதலாகிய பல பெண்களும் இந்நூலுள் பெரிதும் போற்றப் பட்டுள்ளனர்.

    பெரிய புராணத்துள் இடம் பெற்றுள்ள மதிப்பு மிக்க பெண்களைச் சேக்கிழார் ‘அவள்’ ‘வந்தாள்’ என்ற பெண் பால் விகுதிகளை விடுத்து, ‘அவர்’ ‘வந்தார்’ என்ற பலர்பால் விகுதிகளால் போற்றியிருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.


    பெண் அடியார்கள்

    4.3.4 தொகை அடியார்களும் தனி அடியார்களும்

    ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு கூட்டத்தினர் அல்லது குழுவினைத் தொகுத்துச் சுட்டுவதைத் தொகை அடியார்கள் என்பர். இவர் இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத வேறு பலரையும், தம் காலத்துக்கு முன்பும், பின்பும் வாழ்ந்தவர்களையும், வரவிருப்பவர்களையும் போற்றும் நோக்கில் தொகையடியார் வணக்கத்தைச் சுந்தரர் மேற்கொண்டுள்ளார். வரலாற்று எல்லைக்குள் உட்படாதவர்களையும், சிறப்பிக்கும் சுந்தரரின் இப்பண்பு பெருஞ்சிறப்புக்கு உரியது.  நால்வரில் ஒருவராகிய மாணிக்கவாசகர் பெயர் - திருத்தொண்டத் தொகையில் இடம் பெற வில்லை. காரணம் அவர் சுந்தரர் காலத்துக்குப் பின் வந்தவராதல் வேண்டும். இவ்வாறான தொகையடியார்களை ஒரு அட்டவணையின் வாயிலாக அறிந்து கொள்வது பயனுடையதாக அமையும்.

    வ.எண்
    தொகை அடியார்
    பாடல்கள்
    1.
    2.
    3.
    4.
    5.
    6.
    7.
    8.
    9.
    தில்லைவாழ் அந்தணர்
    பொய்யடிமை இல்லாத புலவர்
    பத்தராய்ப் பணிவார்கள்
    பரமனையே பாடுவார்
    சித்தத்தைச் சிவன் பால் வைத்தார்
    திருவாரூர்ப் பிறந்தார்
    முப்போதும் திருமேனி தீண்டுவார்
    முழு நீறு பூசிய முனிவர்
    அப்பாலும் அடிச்சார்ந்தார்
    10
    3
    8
    2
    1
    2
    3
    6
    2

    பெரியபுராணப் பெண் அடியார்கள் மற்றும் தொகை அடியார்கள் அறிமுகத்திற்குப் பின்னர் ஆண் அடியவர்கள் வரலாறுகளைக் காணலாம். இரண்டாவது சருக்கம் தொடங்கிப் பின்னர் வரும் சருக்கங்களில் 60 ஆண் அடியார்களின் வரலாறுகளும், திருத்தொண்டத் தொகை வரிசையில் விரித்துரைக்கப் பட்டுள்ளன,

    4.3.5 நாயன்மார் - குலமரபு

    திருஞானசம்பந்தர் அருள் வரலாறே இந்நூலுள் அதிகப் பாடல்களால் விரித்துரைக்கப்பட்டுள்ளது. 4287 பாடல்களில் திருஞானசம்பந்தர் புராணம் மட்டும் 1256 பாடல்களால் பாடப்பெற்றுள்ளது, திருநாவுக்கரசர் வரலாறு 429 பாடல்களால் நடையிடுகிறது. ஏனைய வரலாறுகள் கிடைத்திருக்கும் செய்திகளின் அளவிற்கு ஏற்ப விரித்தும் - சுருக்கியும் பாடப் பெற்றுள்ளன. நாயன்மார்கள் அக்காலத்தில் நிலவிய பல்வேறு குலங்களையும், சாதிகளையும் சார்ந்தவர்கள். சைவம் என்ற ஒரு பெரிய வட்டத்துள் சாதி வேறுபாடுகள் கருதாது மனித குலத்தை ஒருங்கிணைக்கும் அரிய முயற்சி பெரிய புராணத்துள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடியவர்களுள் வேளாளர் 13, அந்தணர் 12, முடியரசர் 6, மரபு இன்னது என்று தெரியாதவர் 6, குறுநில மன்னர் 5, வணிகர் 5, ஆதிசைவர் 4, இடையர் 2, ஏனைய குலத்தோர் 10. இவர்கள் சோழ நாடு, நடுநாடு, தொண்டை நாடு, பாண்டிய நாடு, மலைநாடு, கோனாடு, மழநாடு என்ற பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இன்ன நாட்டினர் என்ற குறிப்பு 9 அடியவர் வரலாறுகளில் இல்லை.

     


    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    சோழ மன்னன் சேக்கிழார் காலத்தில் விரும்பிப் படித்த காப்பியம் எது?
    2.
    சேக்கிழாருக்கு வழங்கப்பட்ட இரண்டு பட்டப் பெயர்களைக் குறிப்பிடுக.
    3.
    திருத்தொண்டத் தொகையுள் குறிக்கப்பட்டிருக்கும் ஆண் அடியார்,பெண் அடியார் எண்ணிக்கையைக் குறிப்பிடவும்.
    4.
    தொகை அடியார்களில் இரு குழுவினர் பெயரை எடுத்துக்காட்டவும்,
புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2017 14:37:03(இந்திய நேரம்)