Primary tabs
- 6.5 தொகுப்புரை
-
பழந்தமிழ் நூல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போலவே வைணவம் பற்றிய காப்பியங்களிலும் இராம அவதாரம், கிருஷ்ண அவதாரம் முக்கியத்துவம் பெறுகின்றன.
-
இராமாயணம் பற்றிய செய்தி கம்பன்விழா எடுப்பதன் மூலம் தமிழகம் எங்கும் இன்று வரை செல்வாக்குப் பெற்றிருக்கின்றது. மகாபாரதத்தின் கதை கிராமங்களில் தனித் தனியாக, கிளைக்கதைகளாகக் கூத்து வடிவத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
-
மொழி பற்றிய செய்தி அல்லது இலக்கியக் கோட்பாடுகள் மட்டுமே இடம் பெறும் இலக்கணத்தில் கூடத் திருமாலின் பெருமையைப் பாடி வைத்துள்ள பாங்கு இலக்கணப் புலவனைத் திருமால் பக்தனாகச் சித்திரிக்கின்றது.
-
சிற்றிலக்கிய வகைகளில் உள்ள பல வடிவங்களை எடுத்துக் கொண்டு பெருமாளின் அருளைப் போற்றுகின்றனர் வைணவப் புலவர்கள்.
-
இறைவனைப் போற்ற ஆழ்வார்களைப் போலவே அந்தாதி வகையை அதிகமாகக் கையாண்டுள்ளனர்.
-
நாதமுனிகள் காலம் முதல் எம்பெருமானார் காலம் வரை வைணவ வியாக்கியானங்கள் குரு சீடர் பரம்பரை வழி நினைவாற்றல் மூலம் இரண்டு நூற்றாண்டுகள் தக்க வைக்கப்பட்டன அல்லது மனத்தில் எழுதிப் பாதுகாத்தனர் எனக் கொள்ளலாம்.
-
10 ஆம் நூற்றாண்டில் வரி வடிவத்தில் அரும்பத் தொடங்கிய உரை 13-ஆம் நூற்றாண்டில் வைணவத் தொண்டர்களால் செழித்து வளர்ந்தது. மணிப்பிரவாள நடையில் அமைந்த இவ்வுரைகள் 18-ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்குப் பெற்றிருந்தன.
-
எனவே தான் மணிப்பிரவாள நடையைத் தமிழ் நடையாக மாற்றுவதற்கும் அல்லது மொழிபெயர்ப்புச் செய்வதற்கும் அல்லது எளிமைப் படுத்துவதற்கும் முயன்றனர் சான்றோர்கள்.
-
மணிப்பிரவாள நடை உரைகாரர்களிடம் செல்வாக்குப் பெற, அக்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் வடமொழியிலும் தமிழிலும் வல்லுநர்களாக விளங்கியதும் ஒரு காரணம்.
-
வைணவம் பற்றிய இராமாயணம் இராமனைத் தென் சொல் கடந்தான், வடசொல் கலைக்கு எல்லை தேர்ந்தான் என நகர் நீங்கு படலத்தில் அவதார புருடனுக்கு இருமொழிப் புலமையை ஏற்றிக் காட்டுகின்றது என்பதும் நினைவு கூரத்தக்கது.
-
வைணவ சமயத்தாரிடம் காணப்பட்ட பரம்பரை, குரு சீடர் தொண்டு, நம்மாழ்வாரிடம் கொண்ட ஈடுபாடு, இராமானுசரிடம் பக்தி, திருவாய்மொழியைப் பரப்பும் நோக்கம், இப்படிப் பல காரணங்கள் பக்தி இயக்கத்திற்குப் பின் பல வகை வைணவ நூல்கள் தோன்ற உதவின.
-
நம்மாழ்வார் பரம்பரையில் வந்த திருக்குருகைப் பிரான் கவிராயர் நம்மாழ்வார் பெயரில் கோவையும் இலக்கண நூலும் அருளியுள்ளார்.
-
கலம்பகம், மறக்குடிப் பெண்ணை, திருமாலை வழிபாடு செய்பவளாகக் காட்டுகின்றது. தூது, திருமாலின் மீது மையல் கொண்டு மாலை விரும்பும் பெண்ணாகச் சித்திரிக்கின்றது. பள்ளு, திருமாலுக்காகச் சண்டை போடும் பெண்ணாக - திருமாலை உயர்வான கடவுளாகக் காட்டும் போராட்டக்காரியாகக் காட்டுகின்றது. ஆக, பெண்களும் பெருமாள் மீது ஈடுபாடு கொண்டவர்களாக வாழ்ந்த செய்தியைச் சிற்றிலக்கியம் காட்டுகின்றது.
-
உரை அருளிய சான்றோர்களும் திருமால் பற்றிய பல இலக்கியங்களைப் படைத்து உரைவளத்தோடு திருமாலின் திருவடிப்பேற்றில் ஈடுபட்டுக் கிடந்துள்ளனர்.
-
புறச்சமயங்களான சமணம், பௌத்தம் ஆகியவற்றின் செல்வாக்கைக் குறைப்பதில் வெற்றி கண்டனர் வைதிக சமயத்தார். ஆனால் காலப்போக்கில் சைவர், வைணவர் ஆகியோரிடையே சமயத்தைப் பரப்புவதில் - மக்களிடம் தங்கள் மதத்தின் செல்வாக்கைப் பதிய வைப்பதில் கடும்போட்டி ஏற்பட்டது. எனவே கோயில்கள், வழிபாடுகள், வழிபாடு செய்யும்போது சொல்லும் இசைப்பாடல்கள், அவற்றின் பொருளைக் கதாகாலாட்சேபம் செய்யும் முயற்சி என்பன போன்ற நடவடிக்கைகளும் திவ்வியப் பிரபந்தம் அல்லாத பிற காப்பியங்கள், வைணவ நூல்கள், வைணவ உரைகள் போன்றவை தோன்றக் காரணமாயின.
-
எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிக மிகக் குறைவாக வாழ்ந்த கால கட்டத்தில் இராமாயண, பாரதக் கதைகள் ஒருவரால் சொல்லப்பட்டன. அல்லது நடித்துக் காட்டப்பட்டன. எனவே இப்படிப்பட்ட செய்திகள் மக்களிடம் செல்வாக்குப் பெற்று, படைப்பாளிகளை ஊக்கப்படுத்தின. அது மட்டுமல்லாமல் படிக்காதவர்களிடம் வைணவக் கொள்கையைப் பரப்பும் சாதனமாக - அல்லது ஓர் ஊடகமாக அவை அமைந்தன.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் பாடு பொருள், பாடும் முறை, வடிவம் ஆகியவை பக்தி இயக்கத்தின் பின் ஒரு தொண்டர் படை உருவாகக் காரணமாயின. வைணவப் பெருமக்கள் நாலாயிரம் என்னும் காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அவற்றை வளப்படுத்தும் முயற்சியில் மூழ்கி வெற்றியும் பெற்றனர்.
வானம்பாடிக்குத் தான் மழையின் அருமை தெரியும்; பக்தனுக்குத் தான் பெருமாளின் பேரன்பின் சுவை தெரியும்; பக்திச் சுவை தெரியும்; ஞானச் சுவை தெரியும்.
-