Primary tabs
-
5.4 உத்திகள்
கொள்வோன் கொள்வகை அறிந்து, சொல்ல வரும் கருத்தையும் படைப்போன் பெற வேண்டிய உணர்ச்சியையும் கருத்தில் கொண்டு பாடலியற்றும் முறைகளே உத்திகள் எனப்படும்.
மரபுக்கவிதைகளில் காலங்காலமாகப் பொருள்கோள் முறையும், அணியிலக்கணங்களும் சிறந்த உத்திகளாகப் பயன்படுத்தப் பெற்று வந்துள்ளன.
புதுக்கவிதைகளில் பொருள்கோள் வகைகள் இடம் பெறுவதில்லை. அணியிலக்கணக் கூறுகள் பலவற்றைக் காண முடிகின்றது. பொருளை நேரடியாக அணுகுதல், தேவையற்ற ஒரு சொல்லைக் கூடப் பயன்படுத்தாமல் இருத்தல், கடினமான யாப்பு முறைகளை விட்டொழித்து இசையின் எளிமையைப் பின்பற்றுதல் ஆகியன புதுக்கவிதைக்கான சிறந்த உத்திகள் என்பர்.
இருவகைக் கவிதைகளையும் ஒப்பிடும் நிலையில் உவமை, உருவகம், முரண், அங்கதம், சிலேடை, பிறிதுமொழிதல், தற்குறிப்பேற்றம், தொன்மம், உரையாடற்பாங்கு, இருண்மை ஆகியவற்றின் அடிப்படையில் இங்குச் சிந்திப்போம்.
- உவமை
மரபுக்கவிதை
தெரிந்த பொருளைக் கொண்டு, தெரியாத பொருளைப் புரியவைப்பதற்காக உவமை தோன்றியது. பின்னர் அணிநயத்தின் பொருட்டும் பயன்படுத்தப்படலானது. அணிகளுக்கெல்லாம் தாயாக விளங்குவது உவமையணியே ஆகும். உவமவியலை மட்டும் தொல்காப்பியர் படைத்துள்ளமையும் இதனை உணர்த்தும்.
நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் ; - பூக்குழலாய் !
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம் (நன்னெறி)எனவரும் சிவப்பிரகாசரின் பாடலை, பிரிந்து சேர்ந்த நட்பின் உறுதிக்குலைவுக்கு, நெல்லின் உமி பிரிந்து சேர்தல் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உவமைக்கென்று தனியிடம் உண்டு. ‘கோடை மேகம் சேர்த்து வைத்திருக்கும் மழைத்துளி, ஒரு கருமி, பஞ்சத்தில் காக்கும் பணப்பையின் காசுகள் போன்றது’ என்கிறார் வைரமுத்து.
ஓர் உலோபி
பஞ்சத்தில் காக்கும்
பணப்பையைப் போல்
கோடைமேகம்என்னும் அக்கவிதையில் கோடைகால மேகமாவது மழையைச் சிந்திவிடுகிறது. கருமி தன் காசுகளைத் தருவதேயில்லை என்னும் கருத்தும் புலனாகின்றது.
- உருவகம்
மரபுக்கவிதை
உவமையும் பொருளும் ஏதோ ஒரு பகுதி மட்டும் ஒப்புடையனவல்ல; முழுமையும் ஒன்றானவை என்பதாக அமைவது உருவகம் ஆகும். உவமையினும் செறிவும் நெருக்கமும் உடையது உருவகம். ‘சிவபெருமான், வேதமாகிய உணவை வெறுத்து, தேவார மூவர்தம் திருப்பாடல் ஆகிய உணவுக்கு உழலும் செவியுடையவன்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
வேத உணவு வெறுத்துப் புகழ்மூவர்
ஓதுதமிழ் ஊணுக்கு உழல்செவியான் (திருவெங்கை உலா)என வரும் கண்ணியில் இக்கருத்து இடம்பெறுகின்றது.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் உருவகங்கள் இடம்பெறக் காண்கிறோம். ரோஜாவைப் பாத்திகட்டி, நட்டு, நீர்பாய்ச்சி மலர வைத்தாலும், மலரைப் பறிக்கும்போது வளர்த்தவரையே முள்ளால் கீறி வடுப்படுத்துவதும் உண்டு. தொழிலாளர்களின் நிலைமையை ரோஜாவோடு உருவகப்படுத்துகின்றார் இன்குலாப்.
தொழிற்சாலைப் பாத்திகளில்
வியர்வைநீர் ஊற்றி
இயந்திர ரோஜாக்களை
மலரவைத்தோம்
இருந்தும்
வறுமை முட்கள்
கீறிய வடுக்களே
பாடுபட்டதற்குக் கிடைத்த
பரிசுப் புத்தகங்கள்என்பதில்,
(1) தொழிற்சாலை - பாத்தி
(2) வியர்வை - நீர்
(3) இயந்திரம் - ரோஜா
(4) வறுமை - முள்
(5) வடுக்கள் - பரிசு நூல்கள்என உருவகம் அமைகின்றது.
புதுக்கவிதையில் படிமம் என்பதாக உருவக வடிவம் செறிவாக அமைதலைக் காணமுடிகின்றது.
படிமம்
உணர்வும் அறிவும் இணைந்து உருவாக்கும் மனக்காட்சியே படிமம் ஆகும். ‘புலன் உணர்வுகளோடும் மன உணர்வுகளோடும் தொடர்புகொண்ட காட்சிப் பொருள், கருத்துப் பொருள் ஆகியவற்றின் மனஉருக் காட்சி நிலையே படிமம்’ என்பார் சி.சு.செல்லப்பா.
காலக் கிழவி
கண்ணுறங்கப் போகுமுன்
தன்
பொக்கைவாய் கழுவிக்
கழற்றிவைத்த
பல்செட்டோ? (வாலி)எனப் பிறைநிலவு குறித்து வரும் கவிதை இவ்வகையினது.
மரபுக்கவிதை
சொல்லாலோ, பொருளாலோ, சொற்பொருளாலோ முரண்பட அமைவது முரண் எனப்படும். இதனைத் தொடை வகையுள் ஒன்றாக யாப்பிலக்கணம் கூறும், அணிவகையுள் ஒன்றாக அணியிலக்கணம் கூறும். 'கடல், குளிர்ந்த சந்திரனின் கதிர்கண்டு பொங்கும்; வெப்பமான சூரியனின் கதிர்கண்டால் பொங்காது; அதுபோல உலகினர் இன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழ்வர்; வன்சொல் பேசுவோரைக் கண்டால் மனமகிழார்’ என்கிறார் சிவப்பிரகாசர்.
இன்சொலால் அன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே; - பொன்செய்
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் ; தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல் (நன்னெறி)என்னும் பாடலில் இன்சொல் x வன்சொல், பொங்காது x பொங்கும் என முரண் சொற்களும் பொருள்களும் அமைந்துள்ளமையைக் காணலாம்.
புதுக்கவிதை
புதுக்கவிதைகளிலும் முரண் உத்தி அமைந்து, கவிதைக்குப் பெருமை சேர்க்கின்றது.
படித்திருந்தாலாவது
பரவாயில்லை என்று
பாமரப்பெண் சிந்திக்க,
படிக்காமலிருந்தாலாவது
பரவாயில்லை என்று
படித்தபெண் சிந்திக்க,
பெண்கள் இங்கே தவிப்புத் தீவுகள்என்னும் பொன்மணி வைரமுத்துவின் கவிதையில், படித்திருந்தால் x படிக்காமலிருந்தால், பாமரப் பெண் x படித்த பெண் என முரண்பாடுகள் அமையக் காண்கிறோம். ‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்னும் பழமொழிச் சாயலினது இது.
மரபுக்கவிதை
அங்கதம் என்பது நகைச்சுவையும், புலமை நுட்பமும், திறனாய்வு நோக்கும் கொண்ட ஓர் இலக்கிய உத்தி. இது மக்கட் சமுதாய மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. தீங்கையும், அறிவின்மையையும் கண்டனம் செய்வது; மனிதகுலக் குற்றம் கண்டு சினம்கொண்டு சிரிப்பது. தொல்காப்பியரும் அங்கதம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட்புறத் ததுவே குறிப்புமொழி என்பஎன்பது தொல்காப்பியம்.
ஒளவையார், தொண்டைமானின் படைக்கலக் கொட்டிலில் புதியனவாகவும், அதியமானின் படைக்கலக் கொட்டிலில் வடிவம் சிதைந்து பழையனவாகவும் படைக்கலன்கள் இருந்தனவாகத் தூது சென்ற இடத்தில் தொண்டைமானிடம் தெரிவிக்கிறார்.
இவ்வே
பீலி யணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்யணிந்து,
கடியுடை வியல்நக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக் குற்றில மாதோ ! . . .எனவரும் அப்புறநானூற்றுப் பாடல், ‘அதியமான் பல போர்கள் கண்ட திறமுடையவன், தொண்டைமானாகிய நீ போர்களைக் காணாதவன், அவனை நீ வெல்வது அரிது' என்பதான பொருளை அங்கதமாகக் கொண்டிருக்கின்றது.
புதுக்கவிதை
அங்கதம் புதுக்கவிதையில் சிறப்புறப் பயன்படுத்தப் பெறுகின்றது. ஈரோடு தமிழன்பன், அரசியல்வாதிகள் மனிதநேயமின்றி இருத்தலைக் குறித்துக் கூறும் கவிதை இத்தகையது.
எங்கள் ஊரில்
ஒருவர் ஊராட்சி உறுப்பினரானார்
ஒன்றியத் தலைவரானார்
சட்டமன்ற
உறுப்பினரானார்
அமைச்சரானார்
அயல்நாட்டுத் தூதரானார்
இறுதிவரை ஒருமுறைகூட
மனிதராகாமலே
மரணமானார்என்பது அக்கவிதை.
மரபுக்கவிதை
ஒருவகைச் சொற்றொடர், பலவகைப் பொருள்களைத் தருவதாக அமைவது சிலேடை ஆகும். காளமேகப் புலவர் சிலேடை பாடுவதில் சிறந்து விளங்குகின்றார். அவர் பாடிய பாம்புக்கும் எள்ளுக்குமான சிலேடை வருமாறு :
ஆடிக் குடத்தடையும் ; ஆடும்போ தேஇரையும் ;
மூடித் திறக்கின் முகம்காட்டும் ; - ஓடிமண்டை
பற்றின் பரபரென்னும் பாரில்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம்பு எள்ளெனவே ஓதுஇப்பாடலில்,
(1) குடத்தடைதல் - பாம்புக் கூடை ; எண்ணெய்க்குடம்
(2) இரைதல் - ‘உஸ்’ என்னும் ஓசை ; செக்கு ஓசை
(3) முகம் காட்டல் - பாம்பு முகம் ; பார்ப்பவர் முகம்
(4) மண்டை பற்றல்- விடம் தலைக்கேறல் ; தலையில் பரவுதல்
(5) பிண்ணாக்கு - பிளவுபட்ட நாக்கு ; எள்ளுப் பிண்ணாக்கு (பிள்+நாக்கு)என்பனவாகப் பொருள் அமையும்.
புதுக்கவிதை
சிலேடைகள் புதுக்கவிதையில் அரிதாகவே காணப்படுகின்றன.
என்னை
எவரெஸ்டாகப் பார்க்கும்
இந்த ஊரின் பார்வையில்
என் வீழ்ச்சி
மிகப் பெரிய வீழ்ச்சியே
எனினும்
இது இயல்பானது
தடுக்க முடியாதது
. . . . . . என் வீழ்ச்சி
நீர்வீழ்ச்சியேஎன்னும் மீராவின் கவிதையில் ‘நீர் வீழ்ச்சி - நீர் மேலிருந்து கீழ்விழுதல்; அருவி’ எனப் பொருளமைந்தது. வீழ்தல் நீருக்கு இயல்பானது தானே !
மரபுக்கவிதை
சொல்ல வந்ததை நேரடியாகச் சொல்லாமல், வேறொரு கருத்தைக் கொண்டு பெறவைத்தல் பிறிதுமொழிதல் எனப்படும்.
பீலிபெய் சாகாடும் அச்சிறும் ; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்என்னும் திருக்குறளில் பிறிதுமொழிதல் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருள், 'மிக மென்மையானவையே ஆயினும் மயிலிறகுகளை அளவுக்கதிகமாய் ஏற்றினால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்பதாகும். எளியவர்களே யாயினும் பல பகைவர்கள் ஏற்பட்டால், ஆற்றல் படைத்த ஒருவரும் அவர்களால் தோல்வியுற நேரலாம்’ என்னும் கருத்தை விளக்க வந்தது இக்குறட்பா.
புதுக்கவிதை
புதுக்கவிதையில் ‘குறியீடு’ எனக் குறிக்கப் பெறுவது இது எனலாம். குறியீடு என்பது ஒரு பொருளுக்குப் பதிலாக மற்றொரு பொருளைப் பதிலியாகக் காட்டுவதாகும். காட்டப்படும் பொருள் ஒன்றாகவும், உணர்த்தப்படும் பொருள் ஒன்றாகவும் அமைந்து மறைமுகமாகப் படைப்பாளர், வாசகருக்கு உணர்த்த விரும்பிய பொருளினை உணர்த்தவல்லது குறியீடு.
அஞ்சு விரலும்
ஒன்றுபோலிராது
என்பது உண்மைதான்
அதற்காக நடுவிரல் மட்டும்
நாலடி வளர்ந்தால்
நறுக்காமலிருக்க முடியுமா?என்னும் மு.கு ஜகந்நாத ராஜாவின் கவிதையில், நடுவிரல்- களையப்பட வேண்டிய தீமையைச் சுட்டி நிற்கின்றது.
மரபுக்கவிதை
இயல்பாக உள்ள பொருளின்மீதோ, இயல்பாக இயங்கும் பொருளின்மீதோ கவிஞன் தானாக ஒரு கருத்தை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றம் ஆகும்.
நட்சத்திரங்களைக் குறித்துச் சிவப்பிரகாசர் பாடும் பாடல் பின்வருமாறு:
கடல்முரசம் ஆர்ப்பக் கதிர்க்கயிற்றால் ஏறி
அடைமதி விண்கழைநின்று ஆடக் - கொடைமருவும்
எங்கள் சிவஞான ஏந்தல் இறைத்தமணி
தங்கியவே தாரகைகள் தாம்இப்பாடல், கடலாகிய முரசு முழங்க, கதிராகிய கயிற்றில் ஏறி, வானமாகிய மூங்கிலில் நின்று ஆடக்கூடிய சந்திரனாகிய கூத்தாடிக்குச் சிவஞானி (சிவப்பிரகாசரின் குருநாதர்) வாரி வழங்கிய பொற்காசுகளே நட்சத்திரங்களாகும் என்பதாகப் பொருள் தருகின்றது.
புதுக்கவிதை
கடிகார முட்களைக் கொண்டு, சமுதாய ஏற்றத்தாழ்வைச் சுட்டுகின்றார் மு.மேத்தா.
ஏ, கடிகாரமே
பேச்சை நிறுத்தாத
பெரிய மனிதனே !
குதிக்கும் உன்னுடைய
கால்களில் ஒன்று ஏன்
குட்டையாய் இருக்கிறது?
காலங்கள்தோறும்
இருந்துவருகிற
ஏற்றத் தாழ்வை
எடுத்துக் காட்டவோ?என்னும் அக்கவிதையில் சிறிய முள், பெரிய முள் பேதம் - சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்ட அமைந்ததாகக் கவிஞர் தம் கருத்தை ஏற்றியுரைக்கின்றார்.
மரபுக்கவிதை
புராண இதிகாச வரலாறுகளை உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறைநிலையிலோ, உள்ளவாறோ மாற்றியோ எடுத்துரைப்பது தொன்மம் ஆகும்.
மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல்இனி(து) ஏனையவர்
பேசுற்ற இன்சொல் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ, நன்னுதால் ! ஒண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு (நன்னெறி)என்னும் பாடலில், சாக்கிய நாயனார் சிவலிங்கத்தின்மீது வழிபடும் நோக்கத்தோடு கல் எறிந்தது விருப்பத்திற்குரியதாயிற்று. 'மன்மதன் மலரம்புகளை வீசினான் எனினும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க வீசப்பட்டதாதலின் வெறுப்புக்குரியதாயிற்று’ எனப் புராண வரலாற்று நிகழ்வுகள் சுட்டப் பெறுகின்றன.
புதுக்கவிதை
தொன்மக் குறியீடு என்பதாக இது புதுக்கவிதையில் சுட்டப்பெறுகின்றது. இன்றைய அரசியல் உலகில் சுயநலம் கருதி அடிக்கடி கட்சித்தாவல் செய்யும் அரசியல்வாதிகளின் செயல்களை,
தாயங்களில் - சகுனி
வெற்றிச் சரிதத்தின் அத்தியாயங்கள்
வளர்க்க வளர்க்க . . .
மாயக் கண்ணன்
கட்சி மாறுகிறான்எனப் பாரதக்கதையை மாற்றியமைத்துள்ளார் ஈரோடு தமிழன்பன்.
மரபுக்கவிதை
உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகார வழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம்.
சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு :
அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
‘ஐயஎன் செவியை மிகவும்
ஆறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே ‘அண்ணன்என் சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி
விகடம் ஏன்செய் தாய்என
‘மருவும்என் கைந்நீள முழம்அளந் தான்’என்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி நின்
மைந்தரைப் பாராய் எனக்
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பமாப் பெற்ற கன்னி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைக்காக்கவேஇதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன.
புதுக்கவிதை
அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார்.
‘தாங்கள் தவறாது
படிக்கும் பத்திரிகை எது?’
‘படிப்பது வழக்கமில்லை
பத்திரிகைகளுக்குச் செய்தி
வழங்குவது வழக்கம்’
'தாங்கள் அரசியல்துறவு
பூணுவதாக
எண்ணம் உண்டா?'
‘இல்லை. . .
அரசியல்வாதிகளை
அநாதைகளாக்கமாட்டேன் நான்’மரபுக்கவிதை
இருண்மை (Obscurity) என்பது, கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையில் கருத்துப் பரிவர்த்தனை முழுமையாக நடைபெறாத நிலையைச் சுட்டுவதாகும். இதற்கு வாசகனும் காரணம்; கவிஞனின் சோதனை முயற்சியும் காரணம். புரியாததுபோல் இருந்து படிக்கப் படிக்கப் புரியத் தொடங்கும் படிமுறைப் புரிதலை உடையது இது.
மரபுக்கவிதையின் பொருள், அகராதி கொண்டு புரிந்து கொள்ளத்தக்கதாக உள்ளதே தவிரப் புரியாமல் இல்லை. எனினும், குழூஉக்குறியாகப் பல்வேறு சொற்களைச் சித்தர்கள் கலைச் சொற்களாகக் கொண்டு பாடி வைத்துள்ளனர்.
புதுக்கவிதை
பொருளைச் சொல்ல விரும்பாமல், உணர்த்த விரும்பும் இருண்மை உத்தி புதுக்கவிதைகளிலேயே மிகுதியும் கையாளப் பெறுகிறது. மாடர்ன் ஆர்ட் போன்றது இது எனலாம்.
நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்.என்னும் ஆத்மாநாமின் கவிதை இத்தகையது.
இவ்வாறு உத்திமுறைகள் இருவகைக் கவிதைகளிலும் சிறந்து விளங்கக் காண்கிறோம்.