தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

செய்தியாளரின் பொறுப்புகள்

  • 2.4 செய்தியாளரின் பொறுப்புகள்

    செய்தியாளர் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவருக்கெனச் சில பொறுப்புகள் உண்டு.

    • பணியும் தொண்டும்

    செய்தியாளர் உண்மையில் தகவல்களைப் பரப்பும் சமுதாயக் கல்வியாளராகப் பணியாற்றுகின்றார். ஒரு வகையில் அவரது பணி சமுதாயத் தொண்டாகும். மக்களாட்சியில் நாட்டின் அன்றாட நடப்புகளை உடனுக்குடன் தெரிவித்து, மக்கள் விழிப்போடு செயல்படத் தூண்டுகின்ற பணியைச் செய்தியாளர் மேற்கொள்கிறார்.

    • மக்களின் நம்பிக்கை

    செய்தியாளர் மேற்கொள்வது சமுதாயப் பொறுப்பான பணியாகும். செய்தித்தாள்களில் வெளிவரும் செய்திகளை நம்பிப் பெரும்பாலான மக்கள் செயல்படுகின்றனர். பத்திரிகைகளில் அச்சிட்டது உண்மையாகவே இருக்கும் என்பது மக்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையைக் கட்டிக்காக்கும் வகையில் செய்தியாளர் நடந்து கொள்ள வேண்டும்.

    • பாதிப்பின்மை

    சில செயல்கள் உண்மையில் நடந்திருக்கலாம். அதற்கான தக்க ஆதாரங்களும் செய்தியாளரிடம் இருக்கலாம். ஆனால் அவற்றை அப்படியே வெளியிட்டால் சில தனிமனிதர்களோ, சமுதாயமோ பாதிக்கப்படுவதானால் அவற்றை வெளியிடக் கூடாது.

    எடுத்துக்காட்டாக, கற்பழிப்புச் செய்தியில் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடுவது நல்லதல்ல. சாதி, சமயப் பூசலைத் தூண்டிச் சமுதாயத்தின் அமைதியைக் குலைக்கக் கூடிய விவரங்களை வெளியிடக்கூடாது.

    • இரகசியங்கள் பாதுகாத்தல்

    கூடிய வரை செய்தி மூலங்களை இரகசியங்களாகக் காப்பாற்ற வேண்டியது செய்தியாளர்கள் கடமையாகும். சான்றுகளை வெளியிடாமல் வைத்துக் கொள்ள, சட்டப் பாதுகாப்பு இருக்கிறது என்பதையும் செய்தியாளர் அறிந்திருக்க வேண்டும். சில நேரங்களில் செய்திகளைத் தருகிறவர்கள் தங்களைக் காட்டிக் கொள்ள விரும்புவதில்லை.

    நேர்காணல் (பேட்டி - interview) மூலம் விவரங்களைச் சேகரிக்கும் பொழுது, பேட்டியாளர் வெளியிட வேண்டாமென்று கூறிச் சில விவரங்களைக் கூறலாம். சுவையாக இருந்தாலும் அவற்றைச் செய்தியில் சேர்க்கக்கூடாது.

    • நிறுவனப் பாதுகாப்பு

    செய்தியாளர் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதால் அந்த நிறுவனத்திற்குத் தம்மால் எந்த இழப்போ அல்லது இழுக்கோ ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 11:44:47(இந்திய நேரம்)