Primary tabs
-
4.2 துணை ஆசிரியர்கள் (Sub-editors)
ஒவ்வொரு செய்தித்தாளிலும் அதன் அளவிற்கு ஏற்பத் துணை ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இவர்கள் செய்தித்தாளின் காரியங்கள் யாவிலும் கைகொடுப்பவர்களாக இருப்பார்கள். ஒவ்வொரு துணை ஆசிரியரும் ஏதாவது ஒரு பகுதியைத் தனது பொறுப்பில் வைத்திருப்பார்.
• பெயர்கள்
துணை ஆசிரியர்களை வெளி உலகம் அறிவதில்லை. உடம்புக்குள் இருக்கும் எலும்புகள் போல இவர்கள் செய்தித்தாள் அமைப்பிற்கு உறுதி அளிப்பவர்களாக இருப்பார்கள். மாநிலச் செய்தி ஆசிரியர் (State Editor), நகரச் செய்தி ஆசிரியர் (City-Editor), செய்தி ஆசிரியர் (News Editor), ஞாயிறு மலர் ஆசிரியர் (Sunday Editor), கலைப்பிரிவு ஆசிரியர் (Art Editor), விளையாட்டுப் பகுதி ஆசிரியர் (Sports Editor), வெள்ளி மலர் ஆசிரியர், மகளிர் மலராசிரியர், சிறுவர் மலராசிரியர், இளைஞர் மலராசிரியர் என்று பல பெயர்களில் உதவி ஆசிரியர்கள் அழைக்கப்படுவார்கள்.
• பங்களிப்பு
துணை ஆசிரியர்தான் செய்திகளையும், பிறவற்றையும் பதிப்பிக்கும் வகையில் செப்பனிட்டுத் தருகின்றார். ஆசிரியரைச் செய்தித்தாள் என்ற கோபுரத்தின் கலசமாகக் கொண்டால் துணை ஆசிரியரை அடித்தளக் கல்லாகக் கருதலாம்.
4.2.1 முக்கியத்துவம்
துணை ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடுகையில் “அவர் ஒரு படைப்புக் கலைஞர்” என்று எம்.வி.காமத் வர்ணிக்கிறார்.
நார்த்கிளிஃப் (north cliffe) என்பவர், “செய்தியாளர்கள் செய்தித்தாளை எழுதுகின்றார்கள். துணையாசிரியர்கள் அதனை உருவாக்குகின்றார்கள்” என்கின்றார்.
“பத்திரிகை உலகின் மேல்மட்ட அறிவாளிகள்தான் துணை ஆசிரியர்கள். மக்களிடம் பெயர் பெற்றிருக்கும் செய்தித்தாளுக்குக் கவர்ச்சியையும், சுவையையும் அந்த அறிவார்ந்த குழுவினர் வழங்குகின்றனர். செய்தித்தாளின் நடையின் மேம்பாட்டையும் தரத்தையும் அவர்களே உருவாக்குகின்றனர்” என்று ரெங்கசாமி பார்த்தசாரதி குறிப்பிடுகின்றார்.
4.2.2 பணிகள்
ஒரு செய்தித்தாளில் பணியாற்றுகின்ற துணை ஆசிரியருக்குப் பெயரும் புகழும் கிடைப்பதில்லை. அவர்களது பணிக்குரிய பெருமை எல்லாம் பத்திரிகை ஆசிரியரையே சேரும். ஆனால் துணை ஆசிரியர் செய்கின்ற பணி மிகவும் பொறுப்பானதாகும். விளையாட்டில் ஓர் அணியின் வெற்றி ஒவ்வொருவரையும் சார்ந்தே அமைகிறது. புகழ், அணித்தலைவருக்குப் போகலாம். ஒருவர் பொறுப்புடன் விளையாடா விட்டாலும் வெற்றி கிட்டாது. அதே போன்றுதான் ஒரு செய்தித்தாளை உருவாக்கும் பணி. இதில் துணை ஆசிரியரின் பணி பத்திரிகைக்கு ஆதாரமாக அமைகின்றது என்று உறுதியாய்க் கூறலாம்.
• பிற பணிகள்
செய்தியாசிரியர் தருகின்ற பணிகளைச் சிறப்பாகக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துக் கொடுக்க வேண்டும். செய்தியாளர்கள் தரும் செய்திகளைச் செம்மைப்படுத்தி அச்சுக்கு அனுப்ப வேண்டும். செய்திக்குக் கொடுக்கக் கூடிய இடம் எவ்வளவு என்று முடிவு செய்பவர் இவர்தான் என்பதால் செய்தியின் முக்கியத்துக்கு ஏற்ப இடம் ஒதுக்க வேண்டும். செய்திகளைச் செம்மைப்படுத்தும் பொழுது வெட்டிச் சிதைத்து வடிவத்திற்குக் கொண்டு வருவதால் துணை ஆசிரியர்களைச் செய்திக் கொலைகாரர்கள் என்று நகைச்சுவைபடக் கூறுவதுண்டு.
எந்தச் செய்தியிலும் எந்தக் குழப்பமும் இல்லாதவாறும், அச்சில் சிக்கல் எதுவும் ஏற்படாதவாறும் பார்த்துக்கொள்ள வேண்டும். செய்தியின் முக்கிய அம்சங்களைச் சரிபார்த்துத் தவறு எதுவும் இல்லாதவாறும் பார்த்துக் கொள்ளவேண்டும். செய்திக்கு ஏற்பச் சரியான தலைப்பைக் கொடுப்பதுடன் வாசகர் எளிதில் புரிந்து கொள்ளும்படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அச்சுப்படி திருத்தும் துணையாசிரியரும் செய்தியின் அம்சத்தைக் கவனமாகப் படித்துச் செய்தி எதுவும் விடுபட்டுள்ளதா என்று கவனித்துச் சரிசெய்த பின்பு அச்சிடலாம் என்ற குறிப்பினை எழுத வேண்டும். செய்தியில் எவையேனும் சட்டச் சிக்கல்கள் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். துணை ஆசிரியர் ஒரு சிறந்த படைப்பாளியாகவும் இருக்க வேண்டும். செய்திகளை எந்த அடிப்படையில் வெளியிடுவது என்பதனையும் இவரே தீர்மானிக்க வேண்டும்.
4.2.3 தகுதிகள்
துணையாசிரியர்கள் பொதுவாகக் கீழ்க்காணும் தகுதிகளைக் கொண்டிருத்தல் சிறப்புடையதாகும்.
•நுட்பமான அறிவாற்றல் வேண்டும்.
•பல்வேறு மொழிகளில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
•நாட்டின் நிலவரங்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டும்.
•தான் பணிபுரியும் செய்தித்தாளின் கொள்கைகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.
•சட்டம், அரசியல் அமைப்பு, சமூக, பொருளாதாரச் சிக்கல்கள், இலக்கிய அறிவு, பொது அறிவு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
•செய்தியாளர்கள் அனுப்புகின்ற செய்திகளைக் கூட்டி, குறைத்து வெளியிடும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
•மக்களின் மனநிலைகளை அறிந்து செய்திகளை வெளியிட வேண்டும்.
•நீண்ட அறிக்கையையும் சுருக்கமாக, முழுமையாக, தெளிவாகக் கொடுக்கும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும்.
•ஒரு செய்தி வாசகர்களிடம் ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை, அதை வெளியிடும் பொழுதே அறிந்தவராக இருக்க வேண்டும்.
•செய்தி உண்மையானதுதானா என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்த வேண்டும்.
•துணை ஆசிரியர் நீண்ட நேரம் உழைக்கக் கூடிய உடல் உறுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
•மனமுதிர்ச்சியும் தன்னம்பிக்கையும் கொண்டவராக இருக்க வேண்டும்.
4.2.4 கடமைகள்
துணை ஆசிரியர் கீழ்க்காணும் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்:
•துணை ஆசிரியர் தனது பணியினைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்துத் தர வேண்டும்.
•பல்வேறு இடங்களிலிருந்து வருகின்ற செய்திகளைச் செம்மைப் படுத்திச் சரியான முறையில் உருவாக்க வேண்டும். செய்தியின் தரத்திற்கு ஏற்பக் கூட்டியோ, குறைத்தோ செய்திகளை வெளியிட வேண்டும்.
•கிடைக்கும் தகவலை எந்த அளவுக்குச் செய்தியாகப் பயன்படுத்தலாம் என்பதில் திறமை உடையவராக இருக்க வேண்டும். தகவல்களை அமைக்க வேண்டிய முறை பற்றி உணர்ந்திருக்க வேண்டும்.
•செய்தியை அச்சுக்கு அனுப்பும் வரை கவனமாகச் செயல்பட வேண்டும். எச்செய்தியிலும் குழப்பம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
•செய்தியில் காலம், இடம், பட்டம், பெயர்கள் போன்றவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
•செய்திகளுக்குச் சரியான தலைப்புகளை இட வேண்டும்.
•செய்தியில் எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
•சிக்கல்களுக்கு உரிய செய்திகளை (அவதூறு போன்றவை) நீக்கக் கவனமாக மேற்பார்வை செய்வது மிகவும் முக்கியமானது.
•செய்திகளுக்குத் தகுந்த தலைப்புகளைத் தருவது, துணைத் தலைப்புகளைத் தருவது போன்றவற்றிலும் இவர் கவனம் செலுத்த வேண்டும்.
துணை ஆசிரியர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்ய வேண்டுமானால் சிறந்த அகராதிகளை வைத்திருந்து சந்தேகங்களைப் போக்கிக் கொண்டு செய்தி வெளியிடவேண்டும். மேலும் ஐயங்களைப் போக்கிக் கொள்ள, பொதுஅறிவு நூல்கள்; உலக, நாடு, மாநிலப் புவியியல் படங்கள்; பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்களின் யார் எவர் நூல்கள்; எந்தச் செய்தி எப்பொழுது வெளிவந்தது என்பதை அறிந்துகொள்ளச் செய்திக் குறிப்புகள்; உலக, தேசிய, மாநிலத் தலைவர்களின் ஒளிப்படங்கள்; பல்துறை அறிஞர்களின் ஒளிப்படங்கள் போன்றவற்றைத் தயாராக வைத்திருந்தால்தான் தமது பணிகளைத் துணை ஆசிரியர்கள் திறம்படச் செய்ய முடியும்.