தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நேர்காணலின் வகைகள்

  • 5.2 நேர்காணலின் வகைகள்

    நேர்காணல்கள் அவற்றை நடத்துகின்றவரின் திறமையையும் அணுகுமுறையையும் ஒட்டிப் பல வகைகளாக அமைகின்றன. பொதுவாக நேர்காணல்களைக் கீழே உள்ளவாறு பலவகைகளாக விளக்கலாம்:

    • தெருவில் காண்பவர் நேர்காணல் (Man in the Street Interview)

    தெருவில் காண்கின்ற ஒருவரை நிறுத்தி, எதனைப் பற்றியாவது அவரது கருத்துகளை அறிய நேர்காணலாம். உதாரணமாக, தேர்தல் காலங்களில் போட்டி இடுபவர்களின் வெற்றி வாய்ப்புகளை அறிய, வழியில் சந்திக்கும் வாக்காளர்களைக் கண்டு நேர்காணல் துணை செய்யும். இந்த வகையான நேர்காணல் மிகவும் எளிதானது. யாரோடும் முன்கூட்டியே நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டிய தேவை இல்லை. எதிரில் வருகின்றவரை நிறுத்தி வைத்து நேர்காணலை நடத்தி முடிக்கலாம்.

    • தற்செயல் நேர்காணல் (Casual Interview)

    முன்கூட்டித் திட்டமிடாமல், எதிர்பாராமல் செய்தியாளர், சில குறிப்பிட்ட தலைவர்களைச் சந்திக்க நேரலாம். எங்காவது விருந்திலோ, சிற்றுண்டிச் சாலையிலோ, பொதுஇடங்களிலோ தற்செயலாகச் சந்தித்து, எந்தவித நோக்கமும் இன்றிப் பேசத் தொடங்கலாம். பேச்சின்போக்கில் ஏதாவது ஒரு செய்தியின் நுனி அகப்படும். அதனை மேலும் மேலும் தோண்டப் பெரிய செய்தி ஒன்று கிடைக்கலாம். இப்படிப்பட்ட நேர்காணல் தற்செயல் நேர்காணல் என்று அழைக்கப்படும்.

    • ஆளுமை விளக்க நேர்காணல் (Personality Interview)

    புகழ்பெற்ற சாதனையாளர் ஒருவரை அவரது ஆளுமைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் நேர் கண்டு சிறப்புக் கட்டுரை வரைவது ஆளுமை விளக்க நேர்காணல் ஆகும்.

    நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் போன்றவர்களின் நேர்காணல், புகழ் பெற்றவர்களின் நேர்காணல் வகையைச் சேர்ந்ததாகும். பாம்புப் பண்ணை வைத்துப் பாம்புகளோடு நெருங்கிப் பழகும் ஒருவரை நேர்காணல் கண்டு சிறப்புக் கட்டுரை எழுதுவது புகழ்பெற்றவரின் அல்லது தனிச்சிறப்பு உடைய ஒருவரின் ஆளுமை விளக்க நேர்காணல் ஆகும்.

    • செய்தி நேர்காணல் (News Interview)

    செய்தியைப் பெறும் நோக்கில் ஒரு செய்தியாளர் செய்தி தரும் ஒருவரை நேர்காணல் காண்பது செய்தி நேர்காணலாகும். இதில் செய்தியைப் பெறுவது ஒன்றுதான் நோக்கமாக இருக்கும். அதற்குத் தயாரித்து வைத்திருக்கும் கேள்விகளை நேர்காணலில் கேட்பார்கள். எடுத்துக்காட்டாக, ஒருவர் உண்ணாவிரதம் இருந்தால், அதற்கான காரணங்களை அறிந்து வெளியிடுவதற்காக நேர் காண்பதைக் கூறலாம்.

    • செய்திக் கூட்டம் (News Conference)

    செய்தி தருகின்றவர் செய்தியாளர்களை மொத்தமாக அழைத்துச் செய்தியை வழங்கக் கூட்டம் நடத்தலாம். அந்தக் கூட்டம் ஒருவகை நேர்காணலாக அமையும். செய்தியாளர்கள் செய்தி தருகின்றவரிடம் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறலாம். தனது கருத்தைப் பரப்பிப் பெயர் பெறும் நோக்கில் ஒருவர் செய்திக் கூட்டம் நடத்தலாம். உயர்நிலைப் பொறுப்பில் உள்ளவர்களும் செய்திக் கூட்டம் நடத்தலாம். இப்படிப்பட்ட கூட்டங்களில் ஒரு செய்தியாளரே தொடர்ந்து கேள்விகள் கேட்கக்கூடாது.

    • செய்திச் சுருக்கம் தருதல் (Briefing)

    செய்திகளைத் தருவதில் புதிய முறையாக, செய்திச் சுருக்கம் அமைந்து உள்ளது. ஓர் அமைச்சகத்தின் சார்பில் செய்திகளைத் தருகின்றவர் செய்தியாளர்களை அழைத்து, தயாரித்து வைத்திருக்கும் செய்திக் குறிப்பினை வழங்குவார். தேநீர் விருந்தோடு செய்திகளை, செய்தியாளர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பவர் வழங்குவார். இதில் அதிகமாகக் கேள்விகள் கேட்க வேண்டிய நிலை இருக்காது.

    • காலைச் சிற்றுண்டிக் கூட்டம் (Breakfast Meeting)

    குறிப்பிடத்தக்க பன்னாட்டுத் தலைநகரங்களில் செய்திச் சுருக்கம் தரப் புதிய முறை ஒன்றைப் பின்பற்றுகின்றனர். செய்தியின் முக்கியத்துவத்தை ஒட்டி, தெரிந்தெடுத்த செய்தியாளர்களைச் சிற்றுண்டிக்கு அழைப்பார்கள். மிகவும் நெருக்கமான முறையில் சிற்றுண்டியைச் சாப்பிட்டுக் கொண்டே செய்திகளைப் பரிமாறிக் கொள்வார்கள்.

    • தொலைபேசி நேர்காணல் (Telephone Interview)

    செய்திகளை விரைந்து சேகரிக்கும் வழிமுறையாக, தொலைபேசி நேர்காணல் வளர்ந்து வருகின்றது. செய்தியாளர் இருந்த இடத்தில் இருந்து கொண்டே செய்தியினை இதன் மூலம் திரட்டலாம். இந்த முறையில் நேரத்தை மிச்சப்படுத்தலாம்.

    தொலைபேசி நேர்காணலில் சில குறைபாடுகள் உள்ளன. தொலை பேசியில் இருவரும் தொடர்ந்து பேசவேண்டும். சில விநாடிகள் பேசாமல் இருந்தால் தொடர்பு பாதிக்கப்படும். நேரடி நேர்காணலில் செய்தி அளிப்பவரின் முகபாவங்களை, கண்ணைப் பார்த்து உணர்வுகளையும், பேசுவது உண்மைதானா என்பதையும் அறிந்து கொள்ளலாம். தொலைபேசியில் இந்த வாய்ப்பு இல்லை. மேலும் தொலைபேசியில் எல்லாரையும் தொடர்பு கொள்ளமுடியாது.

    தொலைபேசி நேர்காணலில் தொடக்கத்திலேயே செய்தியாளர் முழுக்கத் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் குரல் தான் முதலிடம் பெறுகிறது. ஆதலால் தெளிவாக, இனிமையாகப் பேசவேண்டும். சத்தம் போடக் கூடாது. நேர்காணல் சுருக்கமாக இருப்பது நல்லது.

    • அடைகாத்தல் நேர்காணல் (Incubated Interview)

    வேளைகளில் கொள்கைகளை உருவாக்குகிறவர்கள், தங்களது கருத்துகளை எப்படியாவது திணிக்கக் கருதி, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவார்கள். யாரும் கேட்காமலே, கேட்டதைப் போலப் பாவித்துச் செய்திகளை வலிந்து கூறி, பொதுமக்களிடம் அவை சென்றடையுமாறு செய்வார்கள். இத்தகைய நேர்காணலை, செய்தியாளர்கள் அடைகாத்தல் நேர்காணல் எனக் கூறி ஒதுக்க முயல்வார்கள்.

    • பட்டம் பறக்க விடும் நேர்காணல் (Kite - Flying)

    செய்தியாளர் ஏற்பாடு செய்து நடத்தும் நேர்காணலை, சில முக்கியமானவர்கள், தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். தங்களது கருத்துகளை நேர்காண்பவர் கருத்துப் போல வெளியிடச் செய்துவிடுவார்கள். ஆதலால் தான் இப்படி அமைந்துவிடும் நேர்காணலை, பட்டம் பறக்க விடும் நேர்காணல் என்கின்றனர். இப்படி அமைந்து விடாமல் நேர்காண்பவர் கவனமாக இருக்க வேண்டும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 18-09-2017 15:22:35(இந்திய நேரம்)