Primary tabs
6.2 பிற பிரிவுகள்
மேற்குறிப்பிட்டவைகளைத் தவிர, படக்கட்டை செய்யும்
பிரிவு, அச்சடிக்கும் பிரிவு அச்சுப் படிதிருத்தும் பிரிவு எனவும்
பிரிவுகள் உள்ளன.
6.2.1 படக்கட்டை செய்யும் பிரிவு
புகைப் படங்களையும் வரைந்த ஓவியங்களையும்
பெரிதாகவோ சிறிதாகவோ செய்தித்தாளில் அச்சிட
வேண்டுமானால் அவற்றை வைத்து அச்சுக் கட்டைகள் (Block)
தயாரிக்க வேண்டும். சிறிய இதழ்கள் இத்தகைய கட்டைகளைக்
கூலி கொடுத்துச் செய்து வாங்கும். பெரிய இதழ்கள் படக்
கட்டைகளைச் செய்வதற்காகத் தனித்துறையினை
வைத்திருக்கின்றன. வெள்ளை-கருப்பு மற்றும் வண்ணங்களை
அவற்றின் நிற வேறுபாடுகளுக்கு ஏற்பத் தனித்தனி உலோகத்
தகடுகளில் உருவாக்கித் தருவதே இப்பிரிவில் நடைபெறும்
பணியாகும்.
இந்த முறை இப்போது ஓரங்கட்டப்பட்டுவிட்டது. தற்போது
எந்தச் செய்தி அலுவலகங்களிலும் படங்களை ‘பிளாக்’ (Block)
எடுத்து அச்சடிப்பது வழக்கமில்லை. படங்களை ‘ஸ்கேன்’
செய்து கணினியில் மெருகூட்டி, அதிலிருந்து பிலிம் எடுத்து
ஆப்செட் இயந்திரத்தில் அச்சடிப்பதே பெரும்பாலும் எல்லாச்
செய்தி அலுவலகங்களிலும் அச்சடிக்கும் வழக்கமாக
மாறிவிட்டது. இதில் மற்ற முறைகளைக் காட்டிலும்
விரைவாகவும் நேர்த்தியாகவும் அச்சடிக்க முடியும்.
பல இலட்சங்களை மூலதனமாகப் போட்டு நிறுவிய சுழல்
அச்சு இயந்திரத்தை மூலையில் போட முடியாமல் அதன்
பயன்பாட்டு வசதியால் இன்றும் அதைப் பயன்படுத்தி
வருகின்ற செய்தி அலுவலங்களும் நம் நாட்டில் தற்போதும்
உண்டு என்பதும் உண்மையாகும்.
6.2.2 அச்சடிக்கும் பிரிவு
சுழல் அச்சு இயந்திரங்கள் வியக்கத்தக்க முறையில்
செய்தித்தாள்களை அச்சடிக்கின்றன. அச்சடிப்பது மட்டுமின்றி,
அச்சிட்ட இதழ்களை வெட்டி, மடக்கிக் கணக்கிட்டுக் கட்டுவது
வரை அந்த இயந்திரமே செய்துவிடுகின்றது.
அச்சடிக்கும் பிரிவு ஒரு கண்காணிப்பாளரைத்
தலைவராகக் கொண்டு செயல்படும். அங்குப் பக்க
வடிவமைக்கப்பட்ட செய்தித்தாள் மீது ஒரு குறிப்பிட்ட
அட்டை (Flong) ஒன்றை வைத்து ஓர் இயந்திரத்திற்குள்
அனுப்புவர். இதன் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டதும்,
ஈய எழுத்துக்கள் அவ்வட்டையில் பதியும். அசல்
செய்தித்தாளின் மறுபிரதி போல அந்த ஈயத் தகடு
காணப்படும். அத் தகட்டை அச்சடிக்கும் சுழல் அச்சு
(ரோட்டரி) இயந்திரத்தில் பொருத்தமான இடத்தில்
பதித்துவிடுவார்கள். இவ்வியந்திரத்தின் ஒரு மூலையில்
பொருத்தப்பட்டு இருக்கும் செய்திக் காகித உருளையிலிருந்து
காகிதம் அச்சுக்களின் மீது விழுந்து செல்வதுபோல்
அமைக்கப்பட்டிருக்கும். இயந்திரம் இயக்கப்பட்டவுன் பெரிய
சத்தத்துடன் ஓடி அச்சுக்களைப் பதிக்கத் தொடங்கும். அச்சுத்
தகட்டில் மை ஒரே சீராகப் பரவும். அச்சடிக்கப்பட்ட முழுப்
பத்திரிகைகள் அழகாக மடிக்கப்பட்டு, இயந்திரத்தின் மற்றொரு
மூலையில் விழும். அது மட்டுமின்றி, அவற்றை 50, 50
படிகளாக ஒழுங்காக அடுக்கியும் கொடுத்துவிடும். அவற்றை
உரிய பகுதிகளுக்கு அனுப்ப வேண்டியதுதான்
பணியாளர்களின் வேலை.
ஆப்செட் அச்சடிப்பு முறையினால் சுழல் அச்சு
முறையைவிடப் பல்வேறு நன்மைகள் இருப்பதால்தான் இன்று
அனேகப் பத்திரிகைகள் இம்முறையை ஏற்றுக் கொண்டுள்ளன.
பத்திரிகையின் முழுப் பக்கங்கள் புகைப்பட முறையில் படம்
எடுக்கப்பட்ட ஒரு தகட்டின் மீது அதன் நகல் விழும்படி
செய்யப்படுகிறது. உரிய வேதியியல் மாற்றங்களுக்குப் பின்னர்
அத்தகட்டில் செய்தித்தாளின் முழு உருவமும் பதிந்து
அச்சடிக்கத் தயாராகிவிடும். ஆப்செட் இயந்திரத்தில் அத்
தகட்டை உருளை வடிவ அமைப்பில் பொருத்துவர்.
அத்தகட்டின் மீது மை சீராக விழுந்து செய்திக் காகிதத்தின்
மீது அச்சுப் பதியத் தொடங்கும். ஆப்செட் இயந்திரங்களைப்
பத்திரிகைகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து
கொள்கின்றன. ஆப்செட் முறையே, வண்ணப் படங்களைச்
சிறப்பாக வெளியிட ஏற்ற அச்சுமுறை ஆகும். தி ஹிந்து,
தி டைம்ஸ் ஆப் இந்தியா, தினமலர், தினபூமி போன்ற பல
பத்திரிகைகள் ஆப்செட் முறையில்தான் அச்சிடப்படுகின்றன.
இவ்வகை முறையில் மணிக்கு 50,000 பிரதிகள் அச்சிட
முடியும்.
வார, மாத இதழ்கள் மற்றோர் அச்சு முறையைப்
பயன்படுத்தி வருகின்றன. அது ‘கல்லச்சு முறை’ எனப்படும்.
அமிலத்தின் உதவியால் தகடு அல்லது கல்லில் உருவம்
பொறிக்கப்படுகின்றது. பின் அதன் மீது உரிய வகையில்
மை நிரப்பப்பட்டு ரோட்டரி இயந்திரம் மூலம்
அச்சடிக்கப்படுகின்றது. இம்முறையில் தெளிவான அச்சுப்
படிகளைப் பெறமுடிகிறது. இருப்பினும் இது மிக
மென்மையாகக் கையாளவேண்டிய அச்சுமுறை என்பதால் வார,
மாதப் பத்திரிகைகளுக்கே இது பொருந்தும்.
அச்சுப் பிரிவின் மூலம் செய்தித்தாளை வெளியிடுவதுடன்
செய்தி அலுவலகத்தின் ஒருநாளையப் பணி நிறைவுக்கு
வருகிறது. படிகளைத் தனித்தனியாக முகவரி இட்டுக் கட்டி
அவற்றை அலுவலகத்திற்குச் சொந்தமான வேன், பேருந்து,
புகைவண்டி, விமானம் என்ற வகையில் அனுப்பி வைப்பதை
விநியோகப் பிரிவின் பணியாளர்கள் கவனித்துக்
கொள்கிறார்கள். இவர்களது பணி அதிகாலை நான்கு
மணிக்குள் முடிவடைந்துவிடுகின்றது. இக்குழவினர் கலைந்து
சென்ற பின்னர்தான் பத்திரிகை அலுவலகம் அதாவது
ஆசிரியர் பிரிவு விழிப்படைந்து, அடுத்தநாள் பணியைச்
சுறுசுறுப்பாகத் தொடங்குகிறது.
6.2.3 அச்சுப்படி திருத்தும் பிரிவு
அச்சுப்படி திருத்துவோர் ஆசிரியர் குழுவைச்
சேர்ந்தவர்களாகவே இருப்பர். எனினும், இவர்களைத்
தனித்திறனுள்ள பிரிவினராகக் கருதுவதே செய்தி அலுவலக
வழக்கமாக உள்ளது.
அச்சடிப்பதற்கு முன்னால் அச்சுக் கோத்தவற்றைப் படி
எடுத்து அதனைச் சரிபார்ப்பவர்கள் அச்சுப்படி திருத்துவோர்
(Proof Reader) எனப்படுவர். இப்படித் திருத்துவது இதழ்கள்
பிழையின்றித் தரமுடன் வெளிவரத் துணைசெய்கின்றது.
செய்தித்தாள் நிறுவனத்திற்காகப் பணிபுரிவோர் பலரும்
தாம் அலைந்து சேகரித்த செய்திகள் செய்தித்தாளில்
வெளிவரும்போது பார்த்து மகிழ்வர். பாடுபட்டுச் சேகரித்த
செய்திகளைத் தவறில்லாமல் வாசகர் படிக்கும் முறையில்
அச்சிட வேண்டியது நிறுவனத்தின் கடமை. எந்த ஒரு சிறு
தவறும் செய்தித்தாளின் விற்பனையைப் பாதித்துவிடாமல்
பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால், செய்தித்தாள்
நிறுவனத்தில் பணிபுரியும் அச்சுப்படி திருத்துவோரின் பணி
மிகவும் முக்கியமானதாகும்.
துணை ஆசிரியரால் எழுதப்பட்ட செய்திகள் அச்சுக்
கோக்கப்படும் பகுதிக்கு அனுப்பப்படுகின்றன. அச்சுக்
கோக்கும் பல முறைகளுள் ஒவ்வொர் அலுவலகமும் தனக்கு
வாய்ப்பான ஒரு முறையைப் பின்பற்றி வரும். அந்த முறையில்
அச்சுக் கோக்கப்படும். அச்சுக் கோக்கப்பட்ட அந்த வரிகள்
மையொற்றப்பட்டு ஒரு தாளில் படியெடுக்கப்படும். அது
திருத்தாப்படி (Proof) எனப்படுகிறது. இந்தத் திருந்தாப்படியில்
தவறுகள் இருப்பது இயல்பு, ஏனெனில் அச்சுக் கோப்பவர்
தனது கவனக் குறைவினாலும், இயந்திர அச்சுக் கோப்பு
முறையாயின் அச்சு இயந்திரத்தின் பழுதினாலும் தவறுகள்
ஏற்படுவது இயல்பாகும். இத்தவறுகள் படிதிருத்துவோரால்
கண்டுபிடிக்கப்பட வேண்டும். படிதிருத்துவோர் தம் பணியை
மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். ஒரு சிறிய காற்புள்ளி
கூட, சொல்லவரும் செய்தியின் பொருளையே மாற்றிவிடும்
என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
படிதிருத்தும் முறைகளைப் பின்பற்றித் தவறுகளைத்
திருத்தி, நாளிதழ்கள் பிழையின்றித் தரமாக வெளிவரப் படி
திருத்துவோர் உதவ வேண்டும். அச்சுப்படியைச் சரிபார்க்கும்
போது கையாளப்படும் குறியீடுகளைத் தெளிவாகவும்
முறையாகவும் குறித்தல் வேண்டும். படி திருத்துபவர் குறிப்பது
அச்சுக் கோப்பவருக்குப் புரிய வேண்டும். எல்லோரும்
அறிந்த குறியீடுகளைப் பயன்படுத்துவதே முறையாகும்.
படிதிருத்துவோர் தானாகப் புதிய முறையைப் பயன்படுத்தி
மற்றவர்களைக் குழப்பக் கூடாது.
ஒரே வரியில் பல பிழைகள் இருப்பது சில இடங்களில்
குழப்பம் தரலாம். இத்தகைய இடங்களில் முழு வரியையும்
அடித்துவிட்டு மீண்டும் சரியான வரியைத் தெளிவாக எழுதிக்
காட்டுவது நல்லது.