Primary tabs

இந்தத் தொகுதியில் 6 பாடங்கள் இடம் பெற்றுள்ளன.
அவை
காதல் வாழ்க்கை, தலைவியின் காதல், தலைவனின் காதல்,
குடியியல், சான்றாண்மை, வள்ளுவர் வாழ்கிறார் என்பவையாகும்.
பண்டைத்
தமிழர்களின் அக இலக்கிய மரபை அடிப்படையாகக்
கொண்டு காமத்துப்பாலைத் திருவள்ளுவர் அமைத்துள்ளார். அது
பண்டைத் தமிழர்களின் காதல் வாழ்க்கையின் சிறப்பினை
எடுத்துரைக்கின்றது. அதைப்பற்றிய விரிவான செய்திகள், ‘காதல்
வாழ்க்கை’ எனும் தலைப்பில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.
களவு
ஒழுக்கம், கற்பு ஒழுக்கம் ஆகிய அக வாழ்க்கையில் பெரும்
அளவில் பங்கு கொள்பவள் தலைவி. அவள் தலைவன் மீது
மிகுந்த அன்பு கொண்டவள். எனவே, காதல் வயப்பட்ட தன் உள்
உணர்வுகளைப் பல நிலையில் வெளிப்படுத்துகிறாள். தலைவியின்
இத்தகைய உணர்வுகளை மிகச் சுவையாக வள்ளுவர்
குறிப்பிடுகின்றார். ‘தலைவியின் காதல்’ என்ற தலைப்பில்,
இக்கருத்துகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.
தலைவியின்
அழகில் ஈடுபாடு கொண்டவன் தலைவன். அவளை
விரும்புகிறான். தலைவியின் மீது காதல் கொண்ட தலைவன்
அவளைப் பலமுறை சந்திக்கிறான். தலைவி ஊடல் கொள்ளும்
போது, ஊடலைத் தவிர்க்கப் பலவகையாக முயற்சிக்கிறான். இவை
பற்றிய கருத்துகள் ‘தலைவனின் காதல்’ என்ற தலைப்பில்
கூறப்படுகின்றன.
குடிப்பெருமை
பற்றி வள்ளுவர் பல கருத்துகளை வழங்கியுள்ளார்.
அவை ‘குடியியல்’ என்ற பாடத்தில் இடம் பெறுகின்றன.
பிறரிடம்
அன்பு செலுத்துதல், பழி பாவங்களுக்கு வெட்கப்படல்,
பிறருக்கு உதவுதல், பிறர் மீது இரக்கம் காட்டுதல், எப்பொழுதும்
வாய்மையே பேசுதல் ஆகியவற்றைச் சான்றாண்மைக் கூறுகளாக
வள்ளுவர் குறிப்பிடுகிறார். இத்தகைய பண்புக் கூறுகளைப்பற்றிய
செய்திகள் ‘சான்றாண்மை’ என்ற தலைப்பில் தொகுத்துக்
கூறப்படுகின்றன.
நாடு,
மொழி, இனம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட நிலையில்
எல்லோருக்கும் பொருந்துகின்ற அறநெறிகளை வழங்கிய பெருமை
வள்ளுவருக்கு உண்டு. மேலும் எல்லாக் காலத்திற்கும்
பொருந்துகின்ற கருத்துகளைக் கூறிய சிறப்பும் அவருக்கு உண்டு.
வள்ளுவரின் கருத்துகளில் பல இன்றைக்கும், இந்தத்
தலைமுறையினருக்கும் பொருந்துகின்ற வகையில் அமைந்துள்ளன.
எனவே, கருத்தளவில் வள்ளுவர் இன்றைக்கும் வாழ்ந்து
கொண்டிருக்கிறார். இவை பற்றிய செய்திகள் ‘வள்ளுவர் வாழ்கிறார்’
என்ற தலைப்பில் தெளிவாகக் கூறப்படுகின்றன.