Primary tabs
ஓவியங்களும்
வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஓவியங்களைப் பாறை ஓவியங்கள் என்னும் பாடத்தில்
கண்டோம்.
சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகிய காலப் பகுதிகள் பல்லவர் காலத்திற்கு முந்தியவை ஆகும். அக்காலச் சிற்ப ஓவியங்களை இலக்கியங்கள் வாயிலாகவே அறிய இயலுகிறது.
அக்காலத்தில் தமிழகக் கலைஞர்களோடு மகத நாட்டைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களும்,
மராட்டிய நாட்டைச் சேர்ந்த பொன் வேலை செய்பவரும், அவந்தி நாட்டைச் சேர்ந்த
இரும்பு வேலை செய்பவரும், யவன நாட்டைச் சேர்ந்த மர வேலை செய்பவரும் தமிழகத்தில்
இருந்து பணி புரிந்துள்ளனர் என்பதனை,
அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்
தண்டமிழ் வினைஞர் தம்மொடுங் கூடி
(மணிமேகலை - 19 :107-109)
என்ற மணிமேகலை வரிகளால் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதைச் சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன; இந்திர விழாவிற்கு அங்குக் கூடிய மக்கள் அச்சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர் என்பதையும் மணிமேகலை எடுத்துரைக்கிறது. (3 : 127-131)
அக்காலச் சிற்பக் கலைஞரைச் சிலப்பதிகாரம் ‘மண்ணீட்டாளர்’ (5 : 30) என்கிறது. சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், முருகக் கடவுளுக்கும், கொற்றவைக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை சுடுமண் கொண்டு அமைக்கப்பட்டவை. பரிபாடல் மரச் சிற்பங்கள் பற்றிக்
கூறுகின்றது. தமிழகத்தில் கொற்கை, அரிக்க மேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வு ஆய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும், சிற்பங்களும் கிடைத்துள்ளமை மேற்கண்ட கருத்திற்கு அணி சேர்ப்பதாக அமைகின்றது.
சங்க காலத்தில் ஓவியம் சிறப்பான நிலையில்
இருந்துள்ளதனைப் பல இலக்கியச் சான்றுகளால் அறியலாம். அக்காலத்தில் சுவர்களில்
ஓவியம் எழுதி வைப்பதே பெருவழக்கமாக இருந்தது. சங்க கால அரண்மனைகளில்
ஓவியக் கூடங்கள் இருந்துள்ளதனைச் “சித்திர மாடத்துத் துஞ்சிய
நன்மாறன்”
என்னும் சங்க காலத்துப் பாண்டிய மன்னன் ஒருவனது
பெயரால் அறியலாம். பாண்டிய மன்னனது சித்திர மாடத்தில் சித்திரம் தீட்டப்பட்ட
சுவர் செப்புத் தகடு போலப் பளபளப்பாகக் காட்சியளித்தது என்றும், மதுரைக்
காஞ்சியில் மாங்குடி மருதனார் கூறுகிறார். திருப்பரங்குன்றத்து முருகன்
கோயிலில் (இன்றைய கோயில் அல்ல) பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக இருந்த
சித்திர மண்டபம் பற்றிப் பரிபாடல் கூறுகிறது. அம்மண்டபத்தில் காமன்,
இரதி, அகலிகை, அவளை முறையின்றி நெருங்கும் இந்திரன், கௌதம முனிவன், அவனைக்
கண்ட இந்திரன் பூனை உருவம் கொண்டு ஓடியது முதலிய
சித்திரங்கள்
தீட்டப்பட்டிருந்தன (பரிபாடல் 19 : 48-52). ‘கோடுகளால் வரையப்பட்ட, வண்ணம்
தீட்டப்படாத ஓவியம் போல’ என உவமை மூலம் ஓவியம்
பற்றிச் சொல்கிறது (நெடுநல்வாடை : 147). காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்த
உவவனம் என்னும் சோலை, ஓவிய வித்தகர் திரைச்
சீலையில் வரைந்த 'ஓவியம் போல இருந்தது' என மணிமேகலை
கூறுகிறது (3 : 167-169). படம் = துணி (canvas). படத்தில் வரைந்ததால்
ஓவியம் படம் என இப்போது வழங்கப்படுகிறது. இத்தகு
ஓவியம் தீட்டுபவர்கள் “கண்ணுள் வினைஞர்” எனப்பட்டனர் (மதுரைக்காஞ்சி,
518). இது போன்று ஓவியம் தொடர்பான இன்னும் பல செய்திகளைப் பழங்கால இலக்கியங்கள்
சுட்டிச் செல்கின்றன.