தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முற்காலச் சோழர் சிற்பக் கலை

4.2 முற்காலச் சோழர் சிற்பக் கலை

முற்காலச் சோழர் கோயில்களில் பிரதான இறையுருவம்
தேவ கோட்டத்திலும், தொடர்புடைய     சிற்பங்கள் தேவ
கோட்டத்தின் இரு பக்கங்களிலும் அமைக்கப் பட்டிருக்கும்.

சோழப் பேரரசை நிறுவிய விசயாலய சோழன் தஞ்சையில்
கட்டிய நிசும்ப சூதனி கோயிலில் ஆறடி உயரத்தில் கம்பீரமான
தோற்றத்துடன் கைகளில் பயங்கர ஆயுதங்களை ஏந்திக் கபாலப்
பூணூல் அணிந்து, தலையில் தீச்சுடர் முடி அலங்காரத்துடன்
அமர்ந்த கோலத்தில் நிசும்ப சூதனியின் சிற்பம் அமைந்துள்ளது.
அம்மனது காலடியில் அசுரர் படை மாய்கிறது.(நிசும்ப சூதனி -
சும்ப நிசும்பர் என்னும் அரக்கரை அழித்த காளி)


நிசும்ப சூதனி

நாம் ஏற்கெனவே கண்டது போல விசயாலயன் எதிரிகளை
ஒழித்துச் சோழப் பேரரசை நிறுவியதால், அந்தக் கருத்தமைப்புடன்
இந்தத் தேவியின் சிற்பத்தை அமைத்திருக்கலாம்.

4.2.1 கொடும்பாளூர் மூவர் கோயிற் சிற்பங்கள்

மூவர் கோயிலானது திருச்சி மாவட்டம் கொடும்பாளூர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது. மூன்று கோயில்கள்
வரிசையாக அமைக்கப்பட்டுள்ளதால் மூவர் கோயில் என
இக்கோயில் அழைக்கப்படுகிறது. இம்மூன்று கோயில்களும்
அதிட்டானத்திலிருந்து (அதிட்டானம் - விமானத்தின் அடித்தளம்)
கலசம் வரை கல்லினால் ஆன கோயில்களாகும். இன்று வடக்கே
உள்ள கோயில் அதிட்டானம் வரை மட்டுமே காணப்படுகிறது.


கொடும்பாளூர்

நடுவில் உள்ள கோயிலின் மேற்கு கிரீவ கோட்டத்தில்
காணப்படும் உமா சகிதர் சிற்பம் மிகவும் நேர்த்தியுடன்
காணப்படுகிறது. நாணத்துடன் காட்சியளிக்கும் உமையைச்
சிவபெருமான் அன்பு கனிந்த பார்வையுடன் நோக்கும் அழகு
மிகு சிற்பம் இதுவாகும்.


சிற்பம்

தெற்கே உள்ள கோயிலில் இடம் பெற்றுள்ள கால சம்ஹாரரது
(காலனை அழித்தவர்) சிற்பம் மிகுந்த அழகுடன் அமைந்துள்ளது.
செப்புத் திருமேனியில் காணப்படும் வடிவழகை இக்கற்சிற்பத்தில்
படைத்துள்ள சிற்பியின் திறனை என்ன வார்த்தைகள் சொல்லிப்
புகழ்ந்தாலும் தகும்.

4.2.2 கும்பகோணம் நாகேசுவரர் கோயிற் சிற்பங்கள்

இக்கோயிலின் விமானச் சுவர்களிலும் மண்டபங்களிலும்
காணப்படும் தேவ லோக நடன மாதரின் சிற்பங்கள் மிக
அழகாகச் செதுக்கப் பட்டுள்ளன. மெல்லிய உடல், நீண்ட
கைகள், குறுகிய இடை ஆகியவை இச்சிற்பங்களை அழகு
உருவங்களாகக் காட்டுகின்றன. இங்கு இடம்பெறும் பிச்சாடனர்
மற்றும் பிரம்மனது சிற்பங்களும் சோழர் கலைத் திறனுக்கு
எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றன.


நாகேசுவரர் கோயில் சிற்பம்


  • கண்டச் சிற்பங்கள்


  • விமானத்தின் அதிட்டான உறுப்புகளுள் ஒன்று கண்டம்.
    இக்கண்டத்தில் இடம்பெறும் சிற்பங்கள் கண்டச் சிற்பங்கள்
    ஆகும். பல்லவர் காலத்திலேயே கோயில் விமான அதிட்டான
    கண்டத்தில் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம் இருந்திருப்பினும்
    முற்காலச் சோழர் பெரும்பான்மையான கோயில்களில் இத்தகு
    கண்டச் சிற்பங்களை இடம்பெறச் செய்தனர். இவைகள் 1/2x1/2
    அடி சதுர அளவினையுடையதாக இருக்கும். இச்சிற்பங்கள்
    பெரும்பாலும் இராமாயணம், சிவ புராணம், பெரிய புராணம்,
    கிருஷ்ண லீலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.
    கம்பராமாயணம் தமிழில் தோன்றுவதற்கு முந்தைய காலத்தைச்
    சேர்ந்தவையாக இச்சிற்பங்கள் உள்ளன. எனவே இவை வால்மீகி
    இராமாயணத்தை     அடிப்படையாகக்     கொண்டே
    செதுக்கப்பட்டுள்ளன என உணரலாம். கும்பகோணம் நாகேசுவரர்
    கோயில்     இராமாயணக் கண்டச் சிற்பங்களுக்குச் சிறந்த
    எடுத்துக் காட்டாகும்.
    4.2.3 புள்ள மங்கை கோயிற் சிற்பங்கள்

    இவ்வூரில் உள்ள பிரம்ம புரீசுவரர் கோயிலில் தெற்குப் பக்கம்
    கணபதி, வடக்கே பிரம்மன், மேற்கே இலிங்கோத்பவர் எனத்
    தேவ கோட்டங்களில் அமைந்துள்ள     சிற்பங்கள் அழகு
    மிளிர்வனவாக அமைந்துள்ளன.


    வடக்கே பிரம்மன் - புள்ள மங்கை


    4.2.4 புஞ்சைக் கோயிற் சிற்பங்கள்

    புஞ்சையில் உள்ள நல்துணை ஈசுவரர் கோயிற் சிற்பங்கள்
    மிகச் சிறப்பானவை ஆகும். இங்குத் தேவ கோட்டங்களில்
    அகத்தியர், கணபதி, தட்சிணா மூர்த்தி, பிரம்மன் மற்றும்
    துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெறுகின்றன. இவற்றில்
    பிரம்மனது சிற்பம் பின் இரு கைகளில் அக்க மாலையும்,
    கமண்டலமும் கொண்டு விளங்குகிறது. முன் இருகைகளில்
    வலக்கை அபயம் காட்டுகிறது; இடக்கை     கடிஹஸ்தத்தில்
    (இடுப்பில் கை வைத்த நிலை) அமைந்துள்ளது. இவரது உருவச்
    சிலையில் பூணூல் சிறிய அளவில் அமைக்கப் பட்டுள்ளது.
    இச்சிற்ப அமைப்பே முற்காலச் சோழர் சிற்பக் கலைத்
    திறனுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாய் விளங்குகிறது.

    கணபதி

    பிரம்மன்

    அகத்தியர்

    Tags   :

    புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 05:32:32(இந்திய நேரம்)