Primary tabs
நவீனச் சிற்பங்களைப் படைக்கும் சிற்பிகளைப் பற்றியும்,
அவர்கள் படைத்துள்ள சிற்பங்கள், அவற்றில் காணலாகும்
சிறப்புகள் பற்றியும் இப்பகுதியில் காணலாம்.
நவீனச் சிற்பக் கலைஞர்களில் குறிப்பிடத் தக்க சில
சிற்பிகளைப்
பற்றி இங்கு அறிந்து கொள்வோமா?
இக்காலச் சிற்பிகளில் சிறந்த படைப்புகளைத் தமக்கே உரிய
பாணிகளில் படைத்துச் செல்வாக்குப் பெற்ற சிற்பிகள் ஓவியக்
கலையிலும் தேர்ச்சி பெற்றவர்களே, அவ்வாறு சிற்ப, ஓவியக்
கலைகளில் சிறந்து விளங்குபவர்களாகக் கலைச்செம்மல்
மூக்கையா,
தனபால், வித்யாசங்கர் ஸ்தபதி, கே.எம்.
கோபால் ஆகியோரைக்
கூறலாம். இவர்களைப் பற்றிச்
சுருக்கமாக இங்குக் காணலாம்.
விருதுநகர் மாவட்டம், இராமசாமி புரம் என்னும் சிறு
கிராமத்தில் பிறந்தவர் மூக்கையா. சென்னை ஓவியக் கலைக்
கல்லூரியில் பயின்றவர். தமிழக அரசின் கலைச்செம்மல் விருது
பெற்றவர். தாம் பிறந்து வளர்ந்த கிராமச் சூழல், அப்பகுதி
மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை அவரது படைப்புகளில்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
மூக்கையா, சுடுமண் சிற்பங்கள் (Terracotta) செய்வதில்
வல்லவர். இவரது சுடுமண் சிற்பங்களில் செவ்வியல் கலைக்
கூறுகள் இல்லை; பிரதேசத் தன்மை (நாட்டுப்புறச் சாயல்)
இருக்கிறது. எனினும் இவற்றை முற்றிலும் நாட்டுப்புறக் கலை
வடிவமாகக் கொள்ள முடியாது. நவீனத் தன்மை மிகுந்தவை
இவை.
சென்னை ஓவியப் பள்ளியின் தலைமைப் பொறுப்பில் இருந்த
எஸ். தனபால் சிறந்த சிற்பியும் ஓவியரும், நடனக் கலைஞரும்
ஆவார். சுடுமண்ணால் பல சிற்பங்களை உருவாக்கியவர். தமிழ்க்
கலை மரபுகளைத் தற்காலச் சிற்ப வெளிப்பாட்டில் மிகுந்த
ஈடுபாட்டுடன் செயல்படுத்தியவர். மாணவர்களை உருவாக்குவதில்
இரவும் பகலும் பாடுபட்டவர் இவர். ஆதிமூலம், பாஸ்கரன்,
தட்சிணா மூர்த்தி ஆகிய சிறந்த ஓவியர்கள் இவருடைய
மாணவர்கள். சென்னை சிற்ப ஓவியக் கலைஞர்களிடையே பெரும்
தாக்கங்களை ஏற்படுத்தியவர். சோழ மண்டல ஓவியக் கிராமம்
உருவாவதில் பெரும்பங்கு ஆற்றியவர். அதன் வளர்ச்சிக்காகத்
தம் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.
இவர் பணியாற்றிய சென்னைக் கலைக் கல்லூரியில்
மேற்கத்தியப் பாணி சார்ந்த நிலை இருந்த போதிலும்,
மேற்கத்தியப் பாணியில் இந்தியக் கலாச்சாரத்தைப் புகுத்தித் தமது
சிற்பங்களைப் படைத்தார். மரத்தினால் சிற்பங்கள் செய்ததோடு
மட்டுமல்லாது பீங்கானிலும் சிற்பங்கள் படைத்துள்ளார். பல புகழ்
பெற்ற தலைவர்களின் சிற்பங்களைப் படைத்துள்ளார். இவர்
படைத்த ஏசுநாதர் சிற்பமும், ஒளவையார் சிற்பமும் புகழ்
பெற்றவை.
இவர் கும்பகோணம் கலை மற்றும் கைவினைக் கல்லூரியில்
பணியாற்றியவர். இவர் மரபுக்கும் புதுமைக்கும் இணைப்புப்
பாலமாக விளங்கினார். தமது சிற்பங்களில் உருவத்திலும்
உள்ளடக்கத்திலும் தனிப் பாணியை உருவாக்கினார். ரதி,
விநாயகர், இராவணன், இரணிய வதை போன்ற உலோகச்
சிற்பங்கள் பழைமையின் பின்புலத்தில் நவீனமாக வடிவமைக்கப் பெற்றவை ஆகும். உலோகச் சிற்பங்கள் தவிரச்
சுடுமண் சிற்பங்களைப் படைப்பதிலும் சாதனை படைத்தவர் இவர்.
இவர் கிராம வாழ்வின் அழகில் அதிக ஈடுபாடு கொண்டவர்.
கிராமியக் கலைகளாலும், சுடுமண் சிற்பங்களாலும் கவரப்பட்டவர்.
இதனால் கிராமத்துச் சிற்பங்களின் உருவத்தைச் சிதைக்காமல்
உண்மையை மிகைப்படுத்தல் என்ற உத்தியைக் கையாண்டார்.
சோழ மண்டல ஓவியக் கிராமத்தைச் சேர்ந்த சிற்பிகளுள்
ஒருவரான கே.எம். கோபால் தமிழக அரசின் கலைச் செம்மல்
விருது பெற்றவர். இவரது படைப்புகள் உலோகத்தால் ஆனவை.
இவர் இந்து சமயம் சார்ந்த இறையுருவங்களை அதிலும், குறிப்பாக
விநாயகரது உருவத்தை அதிக அளவில் படைத்துள்ளார்.
மேலே கண்ட நவீனச் சிற்பிகளால் படைக்கப்பட்ட நவீனச்
சிற்பங்களைச் சில வகைப்பாடுகளுக்கு உட்படுத்தி அவற்றைப்
பற்றி
அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் உலோகச் சிற்பங்களுக்கு முன்பிருந்தே சுடுமண்
சிற்பங்கள் செய்யப்பட்டு வந்துள்ளன. தமிழகத்தில் மட்டுமல்லாது
பிற நாடுகளிலும் சிற்பங்கள் முதல் முதலாக மண்ணினால்தான்
செய்யப்பட்டன. இந்தியாவில் சிந்து சமவெளியில் தோண்டி
எடுக்கப்பட்ட புதைபொருள் சின்னங்களில் சுடுமண் சிற்பங்கள்
கிடைத்துள்ளமை அவற்றின் பழைமையைத் தெளிவுறுத்துவதாக
அமைகின்றது.
இன்றைய சுடுமண் சிற்பங்களில் கிராமத்து நடனம்,
பறையடித்தல், ஜல்லிக் கட்டு என எது சிற்பியின் மனத்தைக்
கவர்கிறதோ அது சிற்பமாக உருவாகிறது.
மூக்கையாவின் சுடுமண் சிற்பங்களில் அலங்காரங்கள் அதிக
அளவில் காணப்படுவதில்லை. உருவங்களில் அங்க இலக்கணங்கள்
மீறப்பட்டிருக்கும். சான்றாக இவரது படைப்பான பறையறையும்
மனிதனது சிற்பத்தை எடுத்துக் கொண்டால் அவனது முகம்
வெறும் உட்குவிந்த தட்டுப் போன்று இருக்கிறது. கனமான,
எடுப்பான மூக்கும், உதடுகளும் தவிரக் கண், காது, தலைமுடி
போன்றவை தெளிவின்றியே படைக்கப்பட்டு உள்ளன. கண்கள்
இருக்கும் இடத்தில், அமைக்கப்பட்டு் உள்ள குழியின் நிழல்
கண்கள் இருப்பது போன்ற உணர்வைப் பார்வையாளர்களுக்கு
ஏற்படுத்துகிறது.
பறை கொட்டுபவனின் பறையைத் தாங்கியுள்ள விரல்கள்,
உடம்பின் பிற உறுப்புகளை விடப் பெரியவையாகப்
படைக்கப் பட்டிருக்கின்றன. இடையிலிருந்து மேற்பகுதியானது
இடையிலிருந்து கீழ்ப்பகுதியை விடப் பெரிதாக இருக்கிறது.
ஜல்லிக் கட்டு எனும் சிற்பத்தில் காளை மாட்டின் வயிற்றுப் பகுதி பள்ளமாகக் குடைந்து எடுக்கப்பட்ட நிலையில்
அமைக்கப்பட்டு உள்ளது. சண்டையிடும் காளைக்குக் கனமான
வயிறு தேவையில்லை என்பதால் தான் அதனை அவ்வாறு
படைத்துக் காட்டியுள்ளார் மூக்கையா.
எஸ். தனபாலின் 'தலை' (Head) என்னும் சுடுமண் சிற்பம்
சிறப்புடையதாகும்.
மரபு சார்ந்த உலோகச் சிற்பங்கள் முன்பே நம் நாட்டில் உண்டு
என்பதை நாம் அறிவோம். மரபு சார்ந்த கதைகளை
அடிப்படையாய்க் கொண்டு நவீன உத்திகளைப் பயன்படுத்தி
உலோகச் சிற்பங்கள் இப்போது செய்யப்படுகின்றன. அவை நவீனச்
சிற்பங்கள் என்றே அழைக்கப்படுகின்றன. இவற்றை இரண்டு
விதமாகப் பார்க்கலாம். ஒன்று மரபு சார்ந்த உலோகச்
சிற்பங்கள், இரண்டு முற்றிலும் நவீனத்தைச் சார்ந்த சிற்பங்கள்.
வித்யாசங்கர் ஸ்தபதியின் மரபு சார்ந்த சிற்பங்கள் புகழ்
பெற்றவை. இவரது அக்னி உலோகச் சிற்பத்தில் தீக்கடவுள் ஐந்து
தலைகளுடன் கையில் சூலத்துடன் படைக்கப்பட்டு உள்ளார். தீக்
கடவுளின் உருவத்தைச் சுற்றித் தீ நாக்குகள் காட்டப்பட்டுள்ளன.
இச்சிற்பம் நாட்டுப்புறச் சுடுமண் சிற்பத்தை அடியொற்றி
அமைக்கப்பட்டுள்ளது.
வித்யாசங்கரின் மற்றுமொரு படைப்பு இராவணன் உலோகச்
சிற்பமாகும். சற்று வேறுபாடாக இதில் இராவணனது பத்துத்
தலைகளும் மூன்று வரிசைகளில் (ஒன்றன் மேல் ஒன்றாக)
அமைக்கப்பட்டு உள்ளன. முதலாவது வரிசையில் ஐந்து
தலைகளும், இரண்டாவது வரிசையில் மூன்று தலைகளும்,
மூன்றாவது வரிசையில் இரண்டு தலைகளும் என அமைந்துள்ளன.
கையில் பல்வேறு விதமான ஆயுதங்கள் தாங்கி, நின்ற நிலையில்
சிற்பம் காட்சியளிக்கிறது. இச்சிற்பமும் சுடுமண் சிற்பத்தை
அடியொற்றியே அமைக்கப்பட்டு உள்ளது. இது ஓர் ஆல
இலையின் தலை கீழ் வடிவம் போல் காட்சியளிக்கிறது.
கே.எம். கோபால் கணேசரது உருவத்தை மாறுபட்ட
வடிவங்களில் அமைத்துள்ளார். சான்றாகக் கணேசருக்கே
உரியதான பெரிய தொப்பை வயிற்றைச் சிறியதாகப்
படைத்துள்ளார். பால கணபதியின் சிற்பத்தைக் குழந்தை,
கால்களை நீட்டி அமர்ந்திருப்பது போன்று அமைத்துள்ளார்.
மேலும் விநாயகரைக் கணேஷ்வரி என்ற பெயரில் பெண்
உருவிலும் அமைத்துள்ளார்.
புதிய பல கருத்தாக்கங்களுடன் கூடிய நவீன உலோகச்
சிற்பத்தில் மரபைக் காண இயலாது. இத்தகு நவீன உலோகச்
சிற்பங்களில் சிற்பியின் மனத்தைப் பாதித்த உணர்வுகளுக்கு
வடிவம் கொடுக்கப்பட்டிருக்கும்.
வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களின் நவீன உலோகச் சிற்பங்களில்
குறிப்பிடத் தக்கவை ஆலமரம், கற்பக விருட்சம் மற்றும்
முப்பரிமாணப் படைப்பாக விளங்கும் ரேணுகா தேவி, யுவதி,
மிதுனச் சிற்பம் ஆகியனவாகும். யுவதி சிறப்பானது. மேல்பகுதி
மட்டும் பெண் போன்ற தோற்றத்திலும் கீழ்ப்பகுதி தீர்மானிக்க
முடியாததாகவும் உள்ளது.
மிதுனச் சிற்பம் ஆண் பெண் இருவர் படுத்திருக்கும்
காட்சியாகக் காணப்படுகிறது. இவ்வுருவத்தைப் பஞ்சலோகத்தில்
படைத்திருக்கிறார். இச்சிற்பத்தில் மூக்கும், கண் இமையும்
சிறப்பாகப் படைக்கப்பட்டு உள்ளன.
சிற்பி தனபால் அரசியல் தலைவர்கள் மற்றும் அறிஞர்களின்
உருவங்களை உலோகத்தில் மிக அழகுறப் படைத்துள்ளார்.
அவற்றுள் குறிப்பிடத் தக்கவை சர்வ பள்ளி
இராதாகிருஷ்ணன், தந்தை பெரியார், டாக்டர் எ.இலட்சுமண
சுவாமி முதலியார், பெருந்தலைவர் காமராசர்
ஆகியோருடைய சிற்பங்களாகும்.
அவர் படைத்த ஒளவையார் சிற்பம் சற்றே கூன் விழுந்து
கையில் கம்புடன், பொக்கை வாயுடன், நீண்ட காதுகளுடன்,
தோளில் பையுடன் ஆழ்ந்த கலைப் பார்வைக் உகுரியதாகக்
காணப்படுகிறது.
இன்றைய நவீனச் சிற்பங்களைச் செய்யச் சுடுமண், உலோகம்
ஆகிய பொருட்கள் பயன்படுவதை ஏற்கெனவே கண்டோம். இவை
தவிரக் கண்ணாடி, தோல் கழிவுப் பொருட்கள், ரப்பர், களிமண்,
தேங்காய் நார், பனங்கொட்டை, சிமெண்ட், மரம் என பல
பொருட்களிலும் சிற்பங்கள் உருவாக்கப் படுகின்றன.
யார்?