தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

A0111-நூல் நுவலும் பொருள்

5.2 நூல் நுவலும் பொருள்

    ‘சமயம் இல்லையேல் காப்பியம் இல்லை’ என்னும் அளவிற்குப், பெரும்பாலான காப்பியங்கள் சமயக் கருத்துகளைப் பரப்புவதில் முனைந்து செயல்படுகின்றன. இதற்குக் குண்டலகேசியும் விதிவிலக்கு அல்ல. கிடைத்துள்ள பாடல்களில் தீவினை அச்சம், கூடா ஒழுக்கம், புணர்ச்சி விழையாமை, யாக்கை நிலையாமை, தூயத் தன்மை, இறைமாட்சி, குற்றம் கடிதல், இடுக்கண் அழியாமை முதலான உலகியல் நீதிகள் வலியுறுத்தப் படுவது குறிப்பிடத் தக்கது.

5.2.1 யாக்கை நிலையாமை

    இளமை - மற்றும் யாக்கை நிலையாமை குறித்த பாடல் இங்குக் குறிப்பிடத்தக்கது. ‘நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் செத்துச் செத்துப் பிழைக்கிறோம். அதற்கெல்லாம் அழுது புலம்பாத நாம், இவ்வுடலை விட்டு உயிர் பிரிகிற போது மட்டும் அழுவது ஏன்’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ

(பாளையாம் = இளமை; நாளும் நாள் சாகின்றாமால் = தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறோம்)

5.2.2 அறிவுடையார் செயல்

    எது நிகழ்ந்தாலும் அதை விருப்பு வெறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்வார்கள் அறிவுடையார் என்று அறிவுடையாரின் செயல் இந்நூலில் கூறப்பட்டுள்ளது.

    ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது’ என்ற கீதையின் வார்த்தைகளை நினைவுகூரச் செய்கிறது பின்வரும் பாடல்.

    மறிப மறியும் மலிர்ப மலிரும்
    பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
    அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
    உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று

(மறிப மறியும் = நடப்பது நடந்தே தீரும்; மலிர்ப மலிரும் = நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும்; பெறுப பெறும் = நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும்)

பொருள்:

    நடப்பது நடந்தே தீரும். நடக்க இருப்பது நடந்தே ஆகவேண்டும். நமக்குக் கிடைக்க வேண்டியது கிடைத்தே தீரும். நாம் பெற்றதை இழக்க நேரிடும்போது இழந்தே தீர வேண்டும், இதனை யாரும் தடுக்க முடியாது. இதற்காக அழுவதோ, உவப்பதோ செய்யார் அறிவுடையார்.

5.2.3 குற்றம் கடிதல்

    ‘நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என இறைவனோடு வாதாடிய நக்கீரன் வாழ்ந்த மண் இது; எனவே இங்கு யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான் என்று சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே
        அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன்
        நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார்
        கறையன்று என்பார்?

பொருள்:

    சாதாரண மனிதர்க்கு மட்டுமன்றி, வாய்மை மிக்க சான்றோர் தவறு செய்யினும் தவறுதான். நெற்றிக் கண்ணன் சிவன் கண்டத்திலுள்ள கறை கறைதான்; அன்று என்று யாரும் சொல்லார்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:56:45(இந்திய நேரம்)