Primary tabs
2.2 கற்பனை வளம்
இலக்கியத்தைப்
பாடும் புலவர்கள் உள்ளதை உள்ளவாறே
பாடுவது
இல்லை. உள்ளதில் சிறிது குறைத்தும் சிறிது கூட்டியும்
பாடுகிறார்கள்.
அதனால் தான் இலக்கியம் என்பது கலை ஆகிறது.
கற்பனையைச்
சேர்த்துக் குழைத்துத் தரும் இலக்கியத்தைத்தான்
வாசகன் விரும்பிச்
சென்று படிக்கிறான். உள்ளம் விரும்புமாறு
அமையும் கற்பனைக்கும்
வாழ்க்கையே அடிப்படையாகிறது.
வாழ்க்கையின் அனுபவமே
அத்தகைய
கற்பனையைத்
தூண்டுகிறது.
சேக்கிழார் பெரியபுராணத்தில்
சிறந்த
கற்பனை நயங்களை
அமைத்துப் படைத்துள்ளார் என்பதற்கு
ஏராளமான சான்றுகள் உண்டு. ஓரிரண்டு சான்றுகளை இங்கே
பார்ப்போம்.
காப்பியப் புலவர்கள் ஆற்றுவளம், நாட்டுவளம், நகர் வளம்
முதலியவற்றைப்
பாடுவது மரபு. இவ்வாறு பாடும்
கவிஞனின்
அகமன
உணர்வையும் சிந்தனை ஓட்டத்தையும் அப்பாடல்கள்
மூலம் அறிய
முடியும். ஆறு, நாடு,
நகர் என்பவற்றை வருணிக்கும்
பொழுது அந்தப்
புலவனுடைய கற்பனைக்கு வடிவு கொடுக்க
வாய்ப்பு ஏற்படுகிறது.
புலவனுடைய அடி மனத்தில் எது நிறைந்துள்ளதோ அதன்
அடிப்படையில்தான் கற்பனை
பிறக்க
முடியும்.
மரங்களும்
வேள்வியும்
திருஞானசம்பந்தர்
பிறந்த ஊரை வருணிக்கும் சேக்கிழார்
வேள்வி
மரபினை நினைவு கூர்கிறார். ஞானசம்பந்தர் பிறந்த
ஊரில்
மரங்கள்
கூட வேள்வி செய்கின்றன. இதனைப் பின்வரும் பாடல் அழகாக
வருணித்துள்ளது.
பரந்தவிளை வயல்செய்ய பங்கயமாம் பொங்குஎரியில்
வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய்
நிரந்தரம்நீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிதுஅவ்வூர்
மரங்களும்ஆ குதிவேட்கும் தகையஎன மணந்துஉளதாம்
(பெரிய, திருஞானசம்பந்தர் புராணம். 7)
(பரந்த = அகன்ற ;செய்ய = சிவந்த;பங்கயம் = தாமரை;
பொங்கு
= பெருகும்; எரி = தீ; தேமா = மாமரம்; கனி = மாங்கனி;
நீள் =
நீண்ட;
மதுநறுநெய்
= மாங்கனிச்சாறு; இலைக்கடை=
மாவிலை
நுனி;
ஆகுதிவேட்கும்
= வேள்வி வேட்கும்;தகைய =
தன்மையை
உடையன)
அகன்ற வயலில் உள்ள செந்தாமரை
மலர், தீ எரிவது போல
விளங்குகிறது. உயர்ந்து வளர்ந்துள்ள மாமரத்தில் பழங்கள் கனிந்து
காணப்படுகின்றன. மிகுதியாகக் கனிந்ததால் அவற்றிலிருந்து கனிச்சாறு
மா இலையில் வழிகிறது; மா இலையில் இருந்து தாமரை மலர் மீது
வீழ்கிறது. இக்காட்சி, அந்தணர் வேள்வியின் போது தீயில் நெய்
வார்ப்பது போல, சேக்கிழாருக்குத் தோன்றுகிறது. இதனையே புலவர்
மரங்களே வேள்வி
செய்யும் பக்தி மிக்க ஊர் என்று வருணிக்கிறார்.
இயற்கையாக நிகழும் சில நிகழ்ச்சிகள் புலவனின் கற்பனைக்கு
வித்தாகின்றன.
இருளும் ஒளியும்
ஞாயிறு மறைகிறது; இருள் சூழ்கிறது; நிலவு
தோன்றுகிறது. இவை இயற்கை நிகழ்வுகள். புலவனின் கற்பனை
இவற்றை இயல்பாகப் பார்க்கத் தூண்டவில்லை; கற்பனையில், உவமையில் சமய
உணர்வு வெளிப்படுகிறது.
வஞ்ச மாக்கள்தம் வல்வினை யும்அரன்
அஞ்செ ழுத்தும்
உணரா அறிவிலார்
நெஞ்சும் என்ன
இருண்டது நீண்டவான்
(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம்.
159)
(வஞ்ச = வஞ்சனை;
மாக்கள் = மக்கள்; வல்வினை = தீவினை;
அரன்
= சிவன்; அஞ்செழுத்து = ஐந்தெழுத்து (நமசிவாய);
அறிவிலார் =
மூடர்கள்; நீண்ட
= பெரிய / அகன்ற)
ஞாயிறு மறைகிறது;
இருள் சூழ்கிறது. இது இயற்கையான நிகழ்வு.
வஞ்சனையுடைய தீயவர்களின் தீவினையைப்
போலவும்,
சிவபெருமானின் ஐந்தெழுத்தை ஓதாத அறிவற்றவர் மனம் போலவும்
இருள் சூழ்கிறது; தீயவர்களின் மனமும் அறிவற்றவர் மனமும் இருண்டு
ஒளி இல்லாமல்
கிடப்பது போலப் பூமியில் இருள் பரவுகிறது என்று
சேக்கிழார் இதை
வருணிக்கிறார்.
கற்பனை நயம்
இரவுப் பொழுதில் நிலவு தோன்றுகிறது; இது
இரவு என்னும் மங்கையின்
புன்முறுவல் போல் தோன்றுகிறது. திருநீற்றின் பேரொளி போலவும்
தோன்றுகிறதாம்.
நறுமலர்க் கங்குல்
நங்கைமுன் கொண்டபுன்
முறுவல் என்ன
முகிழ்த்தது வெண்ணிலா
(பெரிய. தடுத்தாட் கொண்ட புராணம். 160)
(நறு = வாசனை
மிக்க; கங்குல் = இரவு; புன்முறுவல் = புன்சிரிப்பு;
முகிழ்த்தது = தோன்றியது)
அண்ணல்வெண் நீற்றின் பேரொளி
போன்றது நீள்நிலா
(பெரிய. திருக்கூட்டச் சிறப்பு. 6)
(அண்ணல் =
தலைமை; வெண்நீறு = திருநீறு / விபூதி;
பேரொளி
=
மிக்க ஒளி; நீள்
= நீண்ட)
வாசனைமிக்க மலர்களைச் சூடியவள் இருள் என்னும் நங்கை.
இவள்
புன்னகை ஒளி போல நிலவு தோன்றுகிறதாம். நிலாவின் ஒளி
திருநீற்றின் ஒளி போல விளங்குகிறதாம். இவ்வாறு சேக்கிழாரின்
கவிதை கற்பனை
நயத்தோடு அமைக்கப் பட்டுள்ளதைப் படித்து
மகிழ முடியும்.
காப்பியங்களின் கவிச்சுவையைப் புலவர்கள் தம் வருணனைத் திறத்தின்
மூலம் மிகுதிப்படுத்த முடியும். காப்பியங்களில் அமைந்துள்ள
நாட்டு
வருணனை, நகர வருணனை முதலியன
புலவரின் கற்பனைத்
திறனுக்கு எடுத்துக்காட்டாக அமையும். கவிதைச் சுவையை உணர
விரும்புவோர்க்கு,
காப்பியங்களில் உள்ள இத்தகைய வருணனைகள்
நல்ல விருந்து.
சேக்கிழாரின் நகர வருணனைகள் அவர் கற்பனைத்
திறனுக்குத் தக்க
சான்றுகள் ஆகும்.
இந்திரன் நகருக்கும்
மலோனது
சேக்கிழார், தாம் அமைச்சர் பதவி வகித்த சோழநாட்டின் தலைநகரை வருணிக்கிறார். சோழர்களின் இரண்டாவது தலைநகராகிய கருவூர் வருணனையைப் படித்து
மகிழுங்கள்:
மாமதில் மஞ்சு சூழும்
மாளிகை நிரைவிண் சூழும்
தூமணி வாயில் சூழும்
சோலையில் வாசம் சூழும்
தேமலர் அளகம்
சூழும் சிலமதி தெருவில் சூழும்
தாம்மகிழ்ந்து
அமரர் சூழும் சதமகன் நகரம் தாழ
(பெரிய. எறிபத்த நாயனார் புராணம். 3)
(மஞ்சு = மேகம்;
நிரை = வரிசை; விண் = வானம்; தூ = தூய;
வாசம்
= நறுமணம்; தேமலர்
= தேன்மலர் (தேன் சிந்தும் மலர்);
அளகம்
= கூந்தல்; மதி
= நிலவு (நிலவு போன்ற முகத்தை உடைய
பெண்கள்);
அமரர் = தேவர்; சதமகன்
= இந்திரன்)
சோழ நாட்டின் தலைநகரில் அமைந்துள்ள மதில்கள் மேலே
மேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன; மேகங்களைச் செல்ல
விடாமல்
மதில்கள்
தடுக்கின்றன; தெருவில் உள்ள மாளிகை வரிசை விண்ணை
முட்டும்
அளவு உயர்ந்து நிற்கின்றது; தூய மணிகளால் ஆன
தோரணங்கள்
வாயிலில் தொங்க விடப்பட்டுள்ளன; மலர்ச்சோலை
எங்கும் நறுமணம்
கமழ்கின்றது; தேன் சிந்தும் மலர்களை மகளிர்
கூந்தலில் சூடி
மகிழ்கின்றனர்; மதி போன்ற
முகத்தை உடைய மகளிர்
வீதியில் உலா
வருகின்றனர்; தேவர்கள் மகிழ்ச்சியாக அந்த
நகரைச்
சூழ்ந்துள்ளனர்;
இந்திரனின் நகரமும் ஒப்பாகாத வகையில் இந்த
நகரம் சிறப்புடன்
விளங்குகிறதாம்.
கடல் ஒலியும் கற்பனையும்
சேரர்களின் தலைநகராகிய கொடுங்கோளூரை வருணிப்பதில்
சேக்கிழாரின் கற்பனை எல்லையற்ற இலக்கிய இன்பத்தைத் தருவதாய்
உள்ளது. நகரில் பல்வேறு ஒலிகள் தோன்றுகின்றன; அவை கடல்
ஒலியை விட ஓங்கி ஒலிக்கின்றன. என்னென்ன ஒலிகள் நகரில்
தோன்றின
என்பதைச்
சேக்கிழார் பட்டியல் இடுகிறார்:
காலை
எழும்பல் கலையின்ஒலி
களிற்றுக்
கன்று வடிக்கும்ஒலி
சோலை எழும்மென்
சுரும்பின்ஒலி
துரகச் செருக்கால் சுலவும்ஒலி
பாலை விபஞ்சி
பயிலும்ஒலி
பாடல் ஆடல்
முழவின்ஒலி
வேலை ஒலியை
விழுங்கிஎழ
விளங்கி ஓங்கும்
வியப்பினதால்.
(பெரிய. கழறிற்றறிவார் நாயனார் புராணம். 2)
(பல்கலை =
வேதம் ஓதல் முதலிய பல கலைகளின் ஒலி;
களிறு =
யானை; வடிக்கும் = வசப்படுத்தும்;
சுரும்பு = வண்டு;
துரகம் =
குதிரை; சுலவும்
= சுழலும்;பாலை விபஞ்சி
= பாலையாழ்;
முழவு =
இசைக்கருவி; வேலை = கடல்)
சேர மன்னர்களின்
தலைநகரில் பல்வேறு ஒலிகள்
தோன்றுகின்றன;
வேதம் ஓதுதல் முதலிய பல்வேறு
கலைகளினால் ஒலி
எழுகின்றது;ஒரு
பக்கத்தில் யானைக்
குட்டியை வசப்படுத்துவோர் ஒலி
எழுப்புகின்றனர்;
ஆரவாரம் செய்கின்றனர்; சோலை எங்கும் தேனைத் தேடி வண்டுகள்
ரீங்காரம்
செய்கின்றன; குதிரைகள் செருக்கு மிகுந்து சுழன்று
ஒலியெழுப்புகின்றன; ஒரு பக்கத்தில் பாலை யாழைச் சிலர்
வாசிக்கின்றனர்; அதனால் இசை எழுகின்றது;
ஆண்களும் பெண்களும்
ஆடிப் பாடி மகிழ்கின்றனர்; இதனால் முழவு ஒலி எழுகின்றது; இந்த
ஒலிகள் யாவும் ஒன்று சேர்ந்து கடலின் ஒலியையும்
விஞ்சும் வண்ணம்
ஓங்கி ஒலிக்கின்றன. இவ்வாறாகச் சேக்கிழாரின் கற்பனை நயம்
பாராட்டத் தக்கதாக
அமைந்துள்ளது.