தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

3-பாட முன்னுரை

3.0 பாட முன்னுரை :

உலகப் புகழ் பெற்ற காப்பியங்களைத் தந்த புலவர் பெருமக்கள் பலர் உண்டு. ஹோமர், வர்ஜில், மில்டன், தாந்தே, கதே முதலிய புலவர் பெருமக்கள் உலகக் கவிஞர்கள். இந்தக் கவிஞர்களுக்கு இணையாக வைத்துப் புகழப் படுபவர் கம்பர். தமிழ் இலக்கிய வரலாற்றில் கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படு்ம் புலவர் இவரே. உலக இலக்கியங்களாகப் புகழப்படும் இந்திய இதிகாசங்கள் இரண்டு. ஒன்று வான்மீகியின் இராமாயணம்; மற்றொன்று வியாசரின் மகாபாரதம். இந்திய மொழிகள் அனைத்திலும் இந்த இதிகாசங்கள் தழுவலாக எழுதப்பட்டன.

கம்பரின் இராமாயணம்

தமிழ்மொழியிலும் இராமாயணம் பற்றிய குறிப்புகள் பலவுண்டு. தமிழகத்தின் எண்ணற்ற பகுதிகளில் இராமாயண நிகழ்வுகள் நடந்ததற்கான புராணக் கதைகள் உண்டு. சோழர் காலத்தில் வாழ்ந்த கம்பர் செந்தமிழில் இராமகாதையைப் பாடினார். இவருக்கு முன்னரும் பின்னரும் இவ்வளவு சிறப்புடைய இராமாயணத்தை எவருமே பாடவில்லை என்று கூறுவர். கம்பர் தமது காப்பியத்திற்கு இராமகாதை என்று பெயர் வைத்திருப்பினும், கம்பரின் கவிச் சிறப்புக் கருதிப் பிற்காலத்தில் கம்பராமாயணம் என்றே அழைத்தனர்.

இராம அவதாரம்

இதிகாசத் தலைவன் இராமன் திருமாலின் பத்து அவதாரங்களுள் ஓர் அவதாரமாகக் கருதப்படுகிறான். இலங்கை மன்னன் இராவணனை வதம் செய்வதற்காகப் பூமியில் அவதரிக்கிறான். அயோத்தி மன்னன் தசரதன் மகனாகப் பிறக்கிறான். சீதையை மணப்பது முதல் இராவண வதம் வரையிலான கதை நிகழ்வுகள் இராமனைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. இந்தக் கதை நிகழ்ச்சியைக் கவிதை ரசம் சொட்டச் சொட்டக் கம்பர் இராமாயணமாகப் பாடியுள்ளார்.

கம்பரைப் பற்றிய அறிமுகமும் கம்பராமாயணத்தைப் பற்றிய அறிமுகமும் இப்பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:02:36(இந்திய நேரம்)